1
வரிசையில்
எங்கெங்கோ இருந்த எழுத்துகள்
என் பேரில்
சேர்ந்து கொண்டன
2
அறியாத ஒன்றுடன்
தனித்து விடப்பட்டவள்
நீயல்லவா?
ஊர்கமழுமுன் உடல்
நிலைநிறுத்த அறியாதவள்
நீயல்லவா?
பிறந்தவுன் குட்டிகளின்
பெயர் அறியாதவள்
நீயல்லவா?
தின்றவுன் குட்டிகளை
செறிக்கத் தெரியாதவள்
நீயல்லவா?
அழிந்தவுன் உடலை
அழிப்பதறியாதவள்
நீயல்லவா?
வருமுன் பிறப்பை
மட்டுநிறுத்த அறியாதவள்
நீயல்லவா?
பிறந்த பின்னிங்கு
தனித்திருக்க அறியாதவள்
நீயல்லவா?
3
முலைத்திரி
தேடித் துழாவுஞ் சுடர்
திரியோ
கன்னங் கருஞ்சுடர்
சுடரே பொருத்தும் சுடர்
4
எனக்காக
மிருது மிருதுவென
மிருது சேர்த்த தனம்
தன் தலைப்பில் வைத்திருந்தது
ஒரு குன்றிமணி
5
தொலைப்பதற்கு
எனக்கு
இவ்வுலகமே உள்ளது
பாவம் நீ
தொலைவதற்கு
எங்கு போவாய்
6
கொளுத்தும் முன் தப்பி
துடுப்புக் குச்சிகளுடன்
தண்ணீரில்
மிதந்தது வந்தது
ஒரு பெட்டி படகு
இம்முறை
படகைச் செலுத்த
துடுப்பை
தண்ணீரில் உரசினால் போதும்
7
எடுத்தே ஆகவேண்டிய
என்னை
துண்டந் துண்டமாய் எடுத்து
முன்னிட
என்னோடு
வாலாட்டிய படியே வந்தது
மரணம்
8
இருள்
திரட்டி திரட்டி செய்தேன்
திசை எழுப்புமொரு
பறையை
9
என் இருளைத் தட்டி
பறை செய்வோனே
அதில் நீ
என்ன எழுப்பப் பார்க்கிறாய்
10
அன்போரே
இன்னும் கொஞ்சம்
உயர்த்தி பிடியுங்கள்
உங்கள்
விளக்குத் தண்டின் மேல்
நானிருக்கிறேன்.
11
உனக்கு இணை வைக்க
நான்
எதையுஞ் சேர்க்கவில்லையே
நல்ல வேளை
ஈதறிந்து
இச்சிறு கூட்டில்
எனை
சேர்த்து வைத்தாய்
12
அப்பறவை
விண்ணிலொரு இடத்தில்
அமர்ந்திருந்ததைப் போல
அவனை
வெறுந் தரையில்
அமர விடுங்கள்
13
குட்டிகளுக்கு
மண்ணிலொரு பிடி
ஊண் கிடைக்குமென
அடிவயிற்றிலிருந்து
தேடித் திரிகிறது காம்புகள்
14
அந்த சொல்
அவனுடையது என்றால்
ஆகட்டும்
அது அவனுடையதே
15
நீர்மையாயிருக்கும்
உன்னை
பல்லாயிரம் கோடிக்கும்
பகிந்த ஒரு சொட்டு போதும்
என்னிடம்
16
அறத்தை
எழுதுகிறோம் வாசிக்கிறோம்
விற்கிறோம் வாங்குகிறோம்
ஒலிக்கிறோம்
கையில் எடுக்கிறோம்
சமாதானமாக
கொஞ்சம் வளைக்கிறோம்
இத்தனை செய்த நாம்
ஓர் ஏகாந்தமான இடத்தில்
அதனுடன் கொஞ்ச நேரம்
நட்பாக அமர்ந்திருக்கலாம்
17
ஓரிடத்தில் அமர ஒன்னாது
வண்ணத்து எடையெல்லாம்
சுமந்தலையும் வாழ்க்கை உனக்கு
18
எவர் கைகளில் உள்ளது
தன் நீரிலிருந்து
மண்ணிற்கு
பாதி துள்ளிய உயிரின் கரை
19
குறுக்கிப் படுத்து
போர்த்திக் கொண்டால்
நானொரு குருவியின் முட்டை
குருவியோ ரொம்பப் பெரிய குருவி
ஆயினும்
நானொரு
குருவி வருமென
தூங்காதிருக்கும் குருவி
20
உனக்கொரு கவளம்
எனக்கொரு தானியம்
அன்றன்றைக்கு கொய்திட்டால்
மீந்த நேரம் முழுக்க
வான் கிளை அமர்ந்து
எத்துணை கதை பேசலாம்
21
நீட்டிய கைகளின் அளவறிய
என் சிறுசுனையிலிருந்து
ஒருகை அள்ளி பருகு
நான்
என்றுமே வற்றியதில்லை
22
இறைவ
நின் சிற்சுனையில்
ஒருகை அள்ளி
கண் ஒத்தினேன்
கைநிறைந்தும்
கண் ஒழிந்த பாடில்லை
அச்சுனை
23
கதவை
கற்களால் செய்திருந்தாய்
எத்தனைக் காலம்
அக் கல்வீட்டின் வெளியே
காத்து நின்றிருப்பது
நான்
24
எவ்வண்ணம்
எவ்வண்ணம்
தூக்கிப்
பறக்கிறது வானில்
எவ்வானம்
எவ்வானம்
கூடிக்
களிக்கிறது அவ்வானில்
25
இவ்வாடை
அழுக்கேறியது
உலகின் நின்கரம்
தீண்ட ஒப்பாதது
உன் முன் நிற்கையில்
என் வெட்ட வெளி
இல்லாமலாக்குவது
இவ்வாடை
நீ அருளியது
நம் இடைவெளி
இல்லாமலாக்குவது
இவ்வாடை
நம்மிருவர் அழுக்கேறியது
26
இச்சிறு புள்சத்தம்
எனை நோக்கியது அல்ல.
ஆயின்
அக்குரல் எனை
ஒற்றைக்கு விட முடியுமா?
27
பழந்தின்ற ஒரு குருவி
என் வீட்டிற்கு வெளியே
நிற்கிறது
இன்றதன்
வயிறு நிறைய
பழம் காய்த்திருக்கிறது
28
வெகுநேர்த்தியாய்
அலகில் அன்னம்
அளிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்
இருந்தும்
உன் எச்சத்தை சுமந்து செல்ல
ஓர் அலகில்லை எனக்கு
29
வான் நோக்கி
உன்னையே திறந்த
நீ
கொள்க அன்னம்
30
மீனிருந்த
உள்ளங்கை
துள்ளுங்கடல் தாங்கும் நிலமன்றோ?
31
பறந்து வந்து
நீயமர்ந்த தோளினால்
நானொரு நிழல்தரு சிறுமரம்
32
கேட்பதற்கென அணி செய்யப்படும்
காதுகளுக்கு
பாடுதற்கு குரலேதுமில்லை
பல்லாயிரம் ஆண்டுகளாய்
தன் பறை அதிர்வை
தான் கேட்டு
அமர்ந்திருக்கிறது செவி.
33
நாமென்று எப்படிச் சொல்லுவேன்?
நாமெல்லாரும்
தனித்துத் திரியும்
நீள் அடருங்காட்டில்
நாமென்று எப்படிச் சொல்லுவேன்?
இத்துணை பேசியும்
மிஞ்சிய அவ்வொரு சொல்மேல்
பறந்து
தன் ஊழ் நடத்தும் புட்களிடம்
34
தனித்து அயர்தற்கே
தருபச்சை ஆகாயத்துநிழற்
தேடிக் குந்தினேன்.
35
உடல் அருளப்பட்டோனே!
நான் உன்னுடன் இருக்கிறேன்
அவ்வுடல் வற்றிச் சோருந்தொறும்
நான் உன்னருகில் வருகிறேன்
அருளியவன் அவ்வுடலினால் அமைக
நீ அவனுக்கருளியதால் அமைக
அருளப்பட்டோனே!
நான்
அவ்வுடல்
உன் இனிய கடைத்தேற்றம்
****
சொல் அளாவி நிறுக்கும்
எம் தந்தையே
நான்
அவர்களின் சொல்லாவது
எங்ஙனம்?
குழந்தாய்!
நீ அனைவரின் சொல் அல்லவா?
அனைவரில் அவர்களுமுண்டு
அச்சொல்
அவர்களின் விண்ணேற்றம்
36
உயிரற்றதினால்
எச்சங்களை மூடற்க
அது தெய்வமொன்றின் அருட்கமழ்
உயிரொன்றின் ஊண்துண்டு
நம்மனைவரின் மலம்
விசும்பின் அப்புறமிருந்த
புள்ளலகின் ஊட்டு.
37
விரல் இடுக்கினிடை
அலைத்த இறகினால்
நீ பறவை.
பறவையோ
உன்னிடமிருந்து பறந்து வந்த பறவை
38
நான் சொல் முடையத் துவங்கினேன்
நீ உன் கூட்டை
சாளரத்தை நீ அமைத்தாய்
ஆகாயத்தை நான்
குடியேறாமல்
வீடு மாறிப் பறக்கிறோம்
நாமிருவரும்
39
தன் பசும்பொங்கு பொசித்த
எனக்கு
நிழல்விரித்து நின்றிருந்தது
ஆகாயம் பறக்காத அக்குருவி
40
மண்ணில்
நான் நின்றவிடத்தினிருந்து
வானோக்கி
வன்னஞ் சிலம்பின சிறுநதிக் கூட்டம்
41
சிமிழ்கணம்
ஒளி பூத்த விதையெலாம்
ஓடித் திரித்து விளைவிப்பன
வானில் கனிந்து தொங்கும் வான்
42
தனக்கேயான பாத்திரத்தில்
தன்னைத் தயாரித்துக் கொள்ளும்
தேநீருக்கு துணை நின்றேன்
பாத்திரம்
பொங்கி வழியும் முன்பே
நிறுத்தத்தான் வேண்டுமா நான் ?
43
உறுதுணை
என்பதுதான் என்ன?
உன்னோடு உண்டு
உன்னோடு நீராடி
உன்னோடு களித்து
உன்னோடு உயிர்த்து
உன்னோடு துயில்வதல்லவா?
அன்றி
அவரோடு இருந்த
நீதானா?
44
மரக்கம்பத்தின் மேலோய்ந்து
தன்னிரு சிறகு உலர்த்தும்
இப்பறவை
விண்ணேகும் வரை
நாம் உடனிருந்து கண்டோம்
ஆகாயத்து வான்கம்பம் சுமந்து
திரியும் அப்பறவையை
விண்ணகம் காயும் வேளை
நாம் எங்கிருந்தோம்?
45
வெறுந்தரையில்
படுத்துறங்கும் என்னைப் பார்த்து
எறும்புக் குட்டிகள் நினைக்கும்
'ஆ
மயிர்பூத்த மலைக்காடு
எத்துணை நெடியது'
தெள்ளியதோர் அக ஆழத்தினின்று
அவர்களுக்கென எழுந்தது
அன்றைய சூர்யோதயம்
46
வீட்டு முகப்பில்
கவிழ்ந்து தொங்க
கற்றாழை
தன் தண்டின் மலர்மொக்கு
விண் கவிழ்ந்து தொங்க
தான் கவிழ்ந்து
தன் கொண்டெழுந்தது
நாள் கனிந்த ஒரு நன்நாளன்று
47
நின் கையில் என் கையெடுத்து
எழுதியோனே!
எனக்குத்தான் எத்துணை நிம்மதி.
எழுத்தறியாது
எனை எடுத்தளித்தேன்
கொண்டு போன
இடத்தில்
கொண்டுவந்து சேர்த்தீர்
ஏமாற்றி அறியாரே!
எமக்குச் சொல்லும்
சொல்லை
சரியாகத்தான் எழுதினேனா நான் ?
48
அலகில் ஐம்பூ
சூடிச் செல்லுங் குருவியே
யார் ஈய்ந்தது அம்மலர்?
அன்றி
அலகிலாதன் அலகில்
யார் சூட்டியது
அலகுடை நின்மலர்?
49
உன் கையின் கவளம்
நான் உண்ண நேராதது
உன் அழுகிய ஆடை
நான் அணிந்திராதது
என் கையால் ஆகாத கவளம்
நீ உண்ணக் கூடாதது
நைந்த நாற்றமெடுத்த என் பார்வை
நீ அணிந்திரக் கூடாதது
ஆயினும்
என் சக உயிரோனே
நீ என்னை ஏற்றுத்தான் ஆக வேண்டும்
நான்
உன்னோடிருக்க வந்தவன் அல்லவா?