நாம் இங்கு அழியாது நிற்கும் எந்தவொரு செயலையும் தொடங்கும் முன்பு நம் ஆசிரியர்களை வணங்குகிறோம். அவர்களிடம் நாம் கற்றவையே அந்தச் செயலாய் நம்முன் விரிந்து ஒளிர்வதைக் காண்கிறோம். இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் இத்தருணத்தில் என் ஆசிரியரை நினைத்துக் கொள்கிறேன்.

எங்கும் இறங்காமல் வானில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பவன் கீழே தூய்மையான கண்டடைதல்களை கோர்த்தபடி உள்ளது ஒரு பெரும்வெளி. அங்கு நான் கண்டடைய நேர்ந்த முதல் வழிகாட்டி கல் ஜெயமோகன். பயணம் தொடர தொடர அது வழிகாட்டி மலை என தெரிகிறது இன்று.

Untitled

2012 என நினைக்கிறேன். புத்தகத் திருவிழாவிற்காக ஜெயமோகன் ஈரோடு வந்திருந்த போது ஆவலும், படபடப்புமாக அவரை சந்திக்கச் சென்றேன். அன்று நான் கல்லூரி மாணவன். அவரிடம் பேச தயக்கமும் பயமும் இருந்ததனால், நான் பேச வேண்டியவற்றை ஒரு கட்டுரையாக எழுதிக் கொண்டு சென்றேன்.

அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது அங்கே ஏற்கனவே சிலர் குழுமியிருந்தார்கள். ‘வாங்க’ என்று ஜெயமோகன் உட்பட சிலரால் வரவேற்கப்பட்டேன். அமைதியாகப் போய் அவர்களுடன் அமர்ந்து கொண்டேன். வரலாறு இலக்கியம் தத்துவம் என பல தளங்களில் உரையாடல் விரிந்து கொண்டே இருந்தது. அரை மணிக்கு ஒருமுறை தேநீர் வரவழைத்துக் கொடுக்கப் பட்டது. நான் வாய் ஏதும் திறக்காமல் பவ்யமாய் கேட்டுக்கொண்டு மட்டுமிருந்தேன். ஜெயமோகன் இதை கவனித்தவராக ‘ஏன், தம்பி ஒண்ணுமே சொல்லையே’, ‘உங்கள் பெயரென்ன’ என்றார். ‘வே சங்கர் சார்’ என்றேன். “அப்ப உங்கள ‘வே சங்கர் இங்க வாரும்’ அப்படினே கூப்டலாம்” என்று மெல்லச் சிரித்தார்.

நான் படிப்பையும், வயதையும் சொன்னதும் ‘எனக்கு உங்க வயசுல ஒரு மகன் இருக்கான். பேரு அஜிதன்’ என்று புன்னகைத்தார். என்னைக் கொஞ்சம் லெகுவாக்க இதையெல்லாம் சொல்லியிருக்கிறார். முதல் முறை அவரைச் சந்திப்பதனால் பேச வேண்டியதெல்லாம் அந்த கட்டுரையில் எழுதியிருப்பதாக சொல்லி அவரிடம் கொடுத்தேன். அந்த கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு சாலோமோனின் உன்னதப்பாட்டிலிருந்து இவ்வரிகளை எழுதியிருந்தேன்.

‘என்னை இழுத்துக் கொள்ளும்
உமக்குப் பின்னே ஓடி வருவோம்
திராட்சை ரசத்தை பார்க்கிலும்
உமது நேசத்தை நினைப்போம்’

‘உங்களைப் போல நல்ல இலக்கியங்களை படைப்பேன்’ என்று கட்டுரையை முடித்திருந்தேன். படித்து விட்டு மெல்லப் புன்னகைத்தார். அதன் பிறகும் நான் எதுவும் பேசவில்லை. இரவு 10.30 மணி வரை அவர் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அறையை விட்டுக் கிளம்பும் போது அவரை நெருங்கி ரகசியம் பேசுவது போல ‘சார் நான் எழுதினது எப்படி இருந்துச்சு, பிடிச்சிருந்துச்சா சார்’ என்றேன். ‘நீங்க உங்க எண்ணத்தை எழுதியிருக்கீங்க’ என்று விட்டு இதை பற்றி என்ன கருத்து சொல்வது என்பது போல் பார்த்தார். பிறகு யோசித்தேன் ‘நல்லா இருக்கு’ என்ற ஒரு பொய்யை எதிர்பார்த்து ஆசையுடன் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் எவ்வளவு முட்டாள் தனமான கேள்வி. ஆனால் அவர் பதிலைக் கேட்ட அந்த கணம் நான் சுருங்கிப் போனேன்.

அறையிலிருந்து வெளியே வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்த போது மழை லேசாக தூறிக் கொண்டு இருந்தது. அனைவரிடமும் விடைபெற்று ரயில் நிலையம் செல்ல அவர் பைக் ஏறி கிளம்பியதும், சட்டென என் கட்டுரையைப் படித்து அவர் ஒரு கணம் செய்த புன்னகை ஞாபகத்திற்கு வந்து என்னைத் தொந்தரவு செய்தது. அந்தப் புன்னகை எதன் குறியீடு. அரவணைப்பா ஏளனமா ?

பேருந்து நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்த என்னுடன் அந்த இரு வேறு புன்னகையைக் காட்டிய படி இரு வேறு ஜெயமோகன்கள் நடந்து வந்தார்கள். ‘நாம் நிற்கும் மண்ணை கரைக்கிறார் நம் ஆசிரியர்’ என்பார் ஜெயமோகன். அந்தப் புன்னகையால் என் காலடி மண்ணும் கரைக்கப்பட்டது. ‘நீ நெனைக்கிற அளவு எழுத்து சுலபமில்ல. எல்லாரும் எழுதிட முடியாது’ என்று கன்னத்தில் அறைந்தது அது. என் கண் எதிரே என்னுடைய பிம்பம் சுக்கு நூறாக உடைத்து எறியப்பட்டது. அர்த்தமற்று மிகச் சாதாரண ஒருவனாக எனக்கு நானே தெரிந்தேன். அவர் மீது கோபமும் உடனே அழுகையும் பீரிட்டு வந்தது. ‘எவ்வளவு நெருக்கமான புன்னகை. எழுது என்று இதயம் பார்த்து சொல்வதல்லவா அது’ அடுத்த நிமிடமே அந்தப் புன்னகையை அந்தரங்கமாக உணர்ந்து தொழுதேன். சுவாசமே கனமென்பது போல் நெஞ்சை அழுத்த, தன்னுணர்வு மூளையில் உரைக்காமல் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.

இரவெல்லாம் தூக்கம் வரவேயில்லை. ஜெயமோகன் என்ற வைராக்கியம் கண்ணில் மின்னிக் கொண்டிருந்தது.

எதிர்காலத்தில் நான் தரிசிக்கப் போகும் ஆசிரியர்கள் அனைவரையும் உங்களை வணங்குவதில் வணங்கிக் கொள்கிறேன். வணக்கம் ஜெ.

(2014 ஆம் ஆண்டு எழுதப்பட்டதன் திருத்தப்பட்ட வடிவம்)

Leave a comment