கவிதைகளுக்கு செல்லுமுன் சில சொற்கள்

இங்கு நான் வெளியிடும் கவிதைகள் அனைத்தும் தலைப்புகள் அற்றவை. பெரும்பாலும் தலைப்பிடுவது கவிமனம் அல்ல. கவிதையை எழுதியவனின் போதமனம் வாசித்து அளிப்பதே தலைப்பு என்பது என் அனுபவம். தலைப்பென்பது கவிதையின் வாசிப்பை அதை எழுதியவனே ஒரு இடத்தில் ஆனி அடித்து வைப்பதுதான். வாசகனின் விருந்தெலையில் அளையும் வேறொருவனின் விரல். கவிமனம் விளம்புவதன்றி வேறறியாது.

அந்த கவிமனம் எழுதிய வரிசையிலேயே இவை பிரசுரிக்கப்படுகின்றன. அம்மனதின் தனித்த பயணத்தை கண்டடைதல்களை வாசகன் தானும் அடைய இது உதவலாம். ஏனெனில் அக்கவிமனம் நம் அனைவருக்கும் உரியது. எழுதியவன் மட்டும் அதை உரிமை கொள்வது, ஒரு வகையில் களவே. எழுதியவன் வெறுமனே கவிமனத்திடமிருந்து வாங்கி அளிக்கும் கருவி என கொள்க. இச்சொற்கள் அவரவர் கண்களில் எழும் அனைவருக்குமான கண்ணீர்ச் சுடர். இக்கவிதைகளை எழுதும் போதே உடனிருந்து வாசித்த நண்பர்கள் அருண்மொழி மற்றும் வேல்முருகனுக்கு நன்றி. அனைவருக்கும் என் முத்தம்.