6
இது நான். அதாவது அவன். நின்னோராவில் அப்படியொன்றும் அழகிய பெயரில்லை எனக்கு. அவள் இந்த பூமிக்கு வந்த கணமே எனக்கு அப்பெயரை அளித்தாள்.
அதன் பொருட்டே அவள் மண்ணிலிறங்கும் வரை நான் என் முன்னிருந்த எச்சாளரமும் திறக்காதிருந்தேன். அதன் வழி எனக்கு வேறு பெயர் வந்து விட்டால்?
யாத்திரையில் இருப்பவனுக்கோ பெயரில்லை. பாலையின் நடுவிருக்கும் குளிர்ந்த கல்மண்டபம் எனக்கு அப்பெயர். அதிலேயே தங்கி அதையே நாவில் தொட்டு முகர்ந்து அவ்விரிவெலாம் கண்டு வாழ்ந்திருப்பவன் நான். அங்கே நீர் சுரந்த அப்பெயரோ பூமியின் முதல் அழுகை.
சிறிதும் பெரிதும் அறியாதவன் வேண்டிப் பெற்றதல்லவா பெயரளித்த அவ்வுயிர்? கிடைத்த அவ்வுயிரால் பூமியை நான் மிக விரும்பினேன். அரிதான ஒரு பொருளை நாம் கண்டெடுக்குமிடம் நமக்கு பிடித்த இடம் தானே. அடுத்த நாளும் ஆவலுடன் அவ்விடத்திற்கு செல்வோம் இல்லையா?
ஆனால் எனக்கு நான் கண்டெடுத்த அவ்வுயிரே அவ்விடம். தினம் அங்கு சென்றேன். என் வாழ் நாளையே நான் அங்கிருந்து எடுத்து தினம் என் கையில் வைத்து உருட்டி உருட்டி பார்த்தேன்.
7
நான் இங்கு புதிதாக பிறந்திருப்பதால் எனக்கு பூமியின் சிக்கல்களும் புதிது.
மற்றவர்களும் இங்கு அப்படி வந்தவர்கள் தானே. அவர்களுக்கு எதிலுமே சிக்கல் இருப்பதில்லை. கேட்டால் எல்லோருக்கும் எல்லாமே தெரிந்திருந்திருக்கிறது.
அவர்கள் கற்றதுவோ, நாங்கள் ஒன்றைச் செய்யும்போது செய்வதறியாது தவித்தது எங்கள் அருகில் நின்றது. நாங்கள் கற்றதுவோ, அறியாது நாங்கள் ஒன்றை செய்த பிறகு எங்கள் அருகில் வந்து நின்றது.
8
வேடங்களைத் தேர்வதில் எங்களுக்குள் என்றுமே சச்சரவு. சிக்கு விழுந்த கயிற்றின் வெவ்வேறு முனை எங்கள் வேடம்.
அவன் முத்தமெனில் நான் எச்சில். நான் எச்சில் எனில் அவன் நாக்கு. அப்புறம் அவன் அவன் நாக்கு. நான் என் நாக்கு.
நான் கரடியென்றால் அவள் குட்டி. நான் குட்டியென்றால் அவள் வேறொரு குட்டி. எப்படியானாலும் விளையாட்டு ஒன்று தானே.
வேடத்தை விட்டு தருவது அவனுக்கோர் விளையாட்டு. வேடம் கிடைத்ததும் விளையாட்டை விட்டுத்தருவது எனக்கோர் விளையாட்டு.
விளையாட்டை சரியாக ஆடாமலிருப்பது இருவருக்குமோர் விளையாட்டு.
9
என் கண்கள் ஒரு வண்ணந் தின்னிக் குழி. வண்ணங்கள் வந்து விழுந்தபடியே இருந்தது அதில்.
அவன் எனக்கொரு வண்ணம். ஏது வண்ணமென்று சொல்லவொன்னா வண்ணம்.
வண்ணத்தில் வயதுமில்லை. அது என்னோடு பிறந்து என்னோடு மடிவது.
வண்ணமே எனக்கு ஊட்டியது. வண்ணமே எனக்காக ஊறி வந்தது. வண்ணமே அதை வாய் உறுஞ்சியது. இவ்வுலகமோ வண்ணத்தின் மேல் வண்ணம்வைத்து திடமேற்றபட்ட வெறும் வெளி.
உணர்வு அனைத்தும் வெறும் வண்ண வேறுபாடுகள். சருமத்தின் வண்ண மாற்றமே உங்கள் மனம். சருமத்தின் வண்ணம் வந்துதித்து மறைந்து போவதே உங்கள் ஒருநாள்.
வண்ணம் வனைந்தெடுத்து வண்ணந் தாங்காமல் அலைவுறுவதே உடலில் உயிர். உலகில் நீர். அவ்வண்ணமே எனக்கு அவன்.
10
ஒலியாலானது இவ்வுலகு. வண்ணமோ வெறுந்தோற்றம். வண்ணத்திற்குள் உள்ளது வெளி. வெளியிலோ காற்று. காற்றோ தூய ஓசை.
ஒலியால் நான் அவளை தொட்டு தூக்கினேன். அவளோ என் செவிநிறைந்து கிடந்தாள்.
ப்ச்ச்ச் என உதடு பிரியும் ஒலி. உறக்கத்திலிருந்து கனவு பிரியும் ஒலி. கனவிற்குள் ஓடியதன் ஓசை நெஞ்சம் ஏறியிறங்கும் ஒலி.
முகத்தசைகளின் ஒலி மாற்றமே அந்நாளின் பருவம். அழுகையே பற் பல வண்ணம்.
முலை ஊறுவதன் வயிறு நிறைவதன் ஒலியே புவி ஈர்ப்புவிசை.
ஒலியில் ஓடுகிறது உயிர். ஆனால் அதுவோ சொல்வதற்கு ஏதுமின்றி உறங்கி தள்ளுகிறது இப்பூமியை.
தூங்கி எழுந்தும் உலகை கேள்வியாய் கேட்டு தள்ளும் ஒலி அவள்.







