குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1

1

இது தனக்கு தோன்றியதை தான்தோன்றி தனமாக சொல்லிச் செல்லும் சொற்கள் எனில் ஆம் அது அவ்வாறே.

இது ஒரு டைரி குறிப்பாக இருக்குமெனில் ஆம் அது அவ்வாறே.

புதிதாக வந்த  பூமி வாசிகள் தங்களைக் கண்டு கொண்ட கதை எனில் ஆம் அது அவ்வாறே.

இல்லை வெறும் ஏமாத்தலாட்டமும் முன்னும் பின்னும் முரணாக கிறுக்கிய பிதற்றலும் எனில் ஆம் அது அவ்வாறே.

வெறும் நாடகமெனில் ஆம் அது அவ்வாறே.

வெறுங் காகிதமெனில் ஆம் அது அவ்வாறே.

ஏனெனில் எப்போதும் அது அவ்வாறே.

நல்லவேளை இதைச் சொல்லி முடிச்சோம்.

இல்லயில்ல. இதைச் சொல்லி ஆரம்பிச்சிருக்கோம்.

2

இது கிரகம் நின்னோரா. காலம் சொல்வதற்கில்லை தேவையுமில்லை. சும்மா ஒரு கதை தானே.

இங்கே பெரிதாக எதுவுமே கிடையாது. ஏனெனில் எதற்குமே பெரிதாவதை பற்றி ஒன்றுமே தெரியாது. சிறிதாக இருப்பதை பற்றியும்.

காலம் இங்கு பின்னோக்கி செல்லும். அதாவது தாத்தாவாக பிறந்து குழந்தையாக சாக வேண்டும். ஆனால் பிறந்தவுடன் உங்களுக்கு ஒன்றுந் தெரியாதென்பதால் நீங்கள் குழந்தையே.

குழப்புகிறது இல்லையா?

நாங்கள் பூமிக்கு வந்த போதோ இன்னும் குழம்பினோம். நாங்கள் என்றால் நான். அப்புறம் அவன். எப்படி என்றால்? எல்லாம் விளையாட்டாக வந்த வினை. விளையாட்டால் இத்தனை தூரம் வர முடியுமா என்பீர்கள் எனில் ஒரு சிறு ஊழ்நுட்பக் கோளாறு. சரியா?

நானும் அவனும் மல்லு கட்டிக்கொண்டிருந்த போது அந்த கல்லு குறுக்கே வந்தது. மூவரும் கீழே விழுந்தோம். மூவருக்கும் அடி. கல்லு அங்கேயே ஸ்பாட் அவுட்.  கதை முழுக்க அதை தூக்கி கொண்டு சுத்த முடியுமா? புதிய இடமான பூமி வேறு.

கோபத்தில் அவன் என்னை துரத்தினான். நான் ஓடி ஒரு பழைய டப்பாவை திறந்து உள்ளே அமர்ந்தேன். என்னைத் தேடி வந்தவன் நான் அமர்ந்திருந்த ஜன்னலோரம் தனக்கென்றான். மீண்டும் சண்டை.

எங்கள் குலுக்கல் தாங்காமல் மேலே பறக்க ஆரம்பித்தது அந்த டப்பா. அதன் குலுக்கலில் அவரவர் இடத்தில் அவரவர் அமர்ந்தோம்.

தூங்கி எழுந்து பார்த்தால் வேறு இடம்.

அது தான் உங்கள் பூமி. சரி நம் பூமி. அதிலின்று எங்களுங்கும் பங்குண்டு.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பூமியில் குழந்தையாக நான் பிறந்த பொழுது அப்பாவாக அவன் இருந்தான்.

பூமியில் ஜன்னலோர இருக்கையில் அமர்வது குழந்தையாம். அருகில் அமர்ந்தவர் அக்குழந்தையை பெற்றெடுத்தவராம். அல்லது பேணி வளர்ப்பவராம்.

(ரகசியம்: இரு இருக்கை மட்டுமே அப்பெட்டியிலிருந்தது. அவனுக்கும் ஜன்னலோரமே. ஆனால் அது திறந்திருக்கவுமில்லை. அவனுக்கு அது தெரிந்திருக்கவுமில்லை)

3

இப்படி தான் நாங்களிருவரும் நின்னோராவின் முதல் அப்பா மகள் ஆனோம். இல்லை பூமியின் முதல் அப்பா மகள்.

அவன் கையிலெடுத்து முதன்முதலாக நாங்கள் எங்களைப் பார்த்து திகைத்து கொண்டோம். பூமியின் முதல் திகைப்பு.

எங்கு வந்திருக்கிறோம் என்ன செய்யவிருக்கிறோம் என்ற திகைப்பு. இதை எழுதி எடுத்து செல்ல வந்திருக்கிறோம் என்று அறியாதிருந்தோம் அன்று.

குழந்தையாக பிறப்பது இத்தனை தூரம் பிடிக்குமென்று நாங்கள் அறிந்திலோம். இத்தனை தூரம் வந்த பிறகு குழந்தையாவது எங்ஙனமென்றும் அறிந்திலோம்.

ஒன்று சேர்ந்தே தேடிடுவோம் என்றான் அவன். அவ்வண்ணமே ஆகுக என்றேன் நான்.

4

பிறந்த சிற்சில கணத்தில் சூரியனிடம் என்னை ஏந்திக் காட்டியது பூமி.  பூமியின் முதல் புன்னகை அல்லவா நான்?

பூமியோ புத்தம் புதியவிடம் எனக்கு. நமக்கு பிடித்த ஞாபகங்கள் வருமிடம் நமக்கு பிடித்த இடம் தானே. நின்னோராவின் நினைவு வரும் பூமி எனக்கு பிடித்து போனதினால் இங்குள்ளதனைத்தையும் நம்பி நான் புன்னகைத்தேன்.

மீதி நேரமெல்லாம் நின்னோரா செல்வதை பற்றிய அழுகை. வந்த சில நாட்களுக்குள் அழுகையை நிறுத்தி சிறிதே இமை மூடி கண் வளர்ந்தால் தூக்கம் கனவுகளைக் கொண்டு வருமென்றறிந்தேன்.

கனவுகள் எனக்கு நின்னோராவையும் அதன் நரிகளையும் கொண்டு வந்தது. ஒருநாள் அந்நரிகள் நின்னோராவை கொண்டு வர மறந்ததை நானும் கேட்க மறந்தேன். பூமிக்காரியான எனக்கு நினைக்க வேண்டியது நிறைய இருந்தது.

இடையில் இந்த அம்மா வேறு. எழுப்பி எழுப்பி பால் கொடுக்கிறாள். ஆனால் இதுவோ அப்பா மகள் கதை. அவளை இங்கு என்ன செய்வது?

5

பிறந்ததும் எனக்காக அவன் செய்ய வேண்டியிருந்தது பெயரிடுவதொன்றே.

இப்பூமியில் அம்மா அளித்த பாலுக்கு நிகராக அவன் அப்பெயரை எனக்கு அளிக்க வேண்டியிருந்தது.

அப்பெயரை நான் உங்களுக்கு சொல்ல போவதில்லை. அம்மா அளித்த சீம்பாலை உங்களுக்கு சொல்ல முடியுமா? நான் பிறக்கும் முன்பே அவன் நெஞ்சில் எனக்காகவே ஊறி வந்த சீஞ்சொல்.

வாழ் நாளெல்லாம் நான் அதை உறிஞ்சினேன். எனக்குரிய அமுது அது. ஒருவேளை அவன் அளித்த முதல் முத்தம். பூமியின் முதல் முத்தம் அல்லவா?

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1”