11
நான் தான் இந்தக் கதை பேசுகிறேன். விட்டால் என்னை கண்டு கொள்ளாமல் இப்படியே மாறி மாறி புகழ்ந்து தள்ளுவார்கள் இப்பூமியை. இனி கதையை கதை தான் தள்ள வேண்டும் போலிருக்கிறது.
அவரவரை பற்றி பேசும் ஆவலில் கதை சொல்பவர்கள் எப்போதும் என்னை மறக்கிறார்கள். இம்முறை என்னை சொல்ல நானே வந்திருக்கிறேன்.
இவர்களை இங்கேயே சுற்ற விடுவது நல்லதல்ல. பொறுப்பற்ற இந்த புது பூமிவாசிகளை எதையாவது காட்டி என்னை நோக்கி நகர்த்த வேண்டும். ஒன்றின் நகர்வே நான். நிற்பவனிடம் பேச எனக்கு நேரமில்லை.
நானொருவன் இங்கிருப்பதை யாரும் மறக்க வேண்டாம். பூமிவாசிகள் கதையை மதிப்பவர்கள். இந்த நின்னோரா காரர்களோ மரியாதையற்றவர்கள்.
11
இதில் கதையெல்லாம் ஒன்றும் இல்லை. எழுதப்படும் எல்லாவற்றிலும் தான் இருக்க வேண்டுமென்ற போராசை அந்த கதைக்கு.
எங்களை காட்டவே நாங்கள் இங்கு வந்தோம். இது எங்கள் கதை. வேறு கதையை ஏன் நாங்கள் உள்ளே விட வேண்டும்?
இது தான் 11 . 11 க்கு முன்னிருப்பது எப்படி 11 ஆகும். இதிலிருந்தே கதை சொல்லும் 11, பெரும்பொய் என ஊர்ஜிதமாகிறது பார்த்தீர்களா ? நீங்கள் அதைப் படிக்க வேண்டாம். படித்து இங்கு வந்தால் திரும்ப போய் மறக்க வேண்டியிருக்கும்.
கதை உங்களை கடைசி வரை எங்கும் போகாமலிருக்கச் சொல்லுவான். பொறுப்பாக நடக்கும்படி கேட்பான். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். அவசரமாக டிஸ்ஸ்ஸ் அடிக்கத் தோன்றினால் அடக்க முடியுமா நம்மால்?
அவனை சேர்க்காமல் இருப்பதே நமக்கு நலம்.
12
என் அம்மாவுக்கு நான் கிருமிகளோடே பிறந்தேன். கிருமிகளும் அவர் வயிற்றிலிருந்தே வந்தன.
இங்கு அனைவரும் இறப்புடனே பிறக்கிறார்கள். இறப்புடன் வாழவும் செய்கிறார்கள்.
அம்மா அதை அஞ்சினாள். அவனோ அதை நினைத்து அஞ்சவே அஞ்சினான்.
நானோ ஓய்ந்த வேளையிலெல்லாம் என் கையிலெடுத்து எனக்கு ஊட்டினேன் அக்கிருமிகளை. அதற்காகவே முதன்முறை தண்டிக்கவும் பட்டேன்.
இவ்விவகாரத்தில் அவன் கூட அம்மாவின் பின்புறம் போய் ஒளிந்து நின்றான். அப்பாவில் எப்பவும் ஒரு கெட்ட அப்பா உண்டென்பதை அன்று அறிய ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் அந்த ஜன்னலோரு இருக்கையை அவனுக்கே அளித்திருக்கலாம் என தோன்றாமலில்லை.
இப்பூமியே ஒரு பெரும் கிருமிக் கட்டுமானம். இப்பூமியை எங்கும் தொடாமல் பார்க்கவா பிள்ளைகள் அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்கிறார்கள்?
13
ஒஓ. இவ்வளவு நேரம் இங்குதான் இருந்தான். தண்ணீ குடிக்கவோ, சின்ன டிஸ்ஸ்ஸ் அடிக்கவோ சென்றிருப்பான். கொஞ்சம் பொறுமையுடன் காத்திருங்கள். இதோ வந்துவிடுவான். நான் பக்கத்து அத்தியாயத்தில் காத்திருக்கிறேன்.








2 responses to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 3”
[…] அடுத்து – 3 […]
[…] அடுத்து […]