குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7

21

டேய்.. இனி இப்படியே தவழ்ந்து கொண்டிருக்க முடியாது. அதுவும் நான் கிடப்பது முழுக்க எச்சிலும் வீச்சமடிக்கும் சிறுநீரும். கேட்டால் அமிழ்தம் உப்பு என்று கதை வேறு.

இன்னும் ரெண்டு மூன்று அத்தியாயம் வரை பார்ப்பேன். அதற்குள் நான் பேசியாக வேண்டும். நடப்பதை பிறகு பார்ப்போம்.

ஒருவேளை தவறு நடந்து விட்டால்?

அய்யோ….

நான் என் கால் வைத்து நடப்பதைப் பற்றி சொன்னேனடா. நடப்பதற்கு முன் பேசுவதென்பது இங்கே வழக்கத்தில் உள்ளது தான். நீ அதுபற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

கதை என்று தன்னையே தூக்கி குதிப்பானே அந்தப் பயல் இப்படித்தானே பலதும் சொல்லி இவர்களை நம்ப வைக்கிறான். நாம் நின்னோரா காரர்கள். நாம் சொல்வதில் உண்மையும் பொய்யும் கிடையாது. நாம் எதற்க்கும் அஞ்ச வேண்டியதில்லை.

22

நடப்பதே நடக்கும். நடக்காதது பேசும். அவள் சொன்னதே நடந்தது.

தால் எடுத்து வைத்து அவள் வீடு முழுக்க நடந்தாள். ஓர் ஓர் அடிக்கும் சரிக்கினாள். உதடு குவித்து ஊதி காற்றில் கால் வைத்து அவள் நடை பழகினாள்.

அவள் முதல் அடியை கண்டவர் கேட்டவர் யாருமில்லை.  எப்போதும் தெய்வம் எடுத்து தருவதில்லையா அது?

இங்குள்ள அனைத்திற்கும் அவள் பெயரிட்டாள். பூச்சி பூண்டுகள் அவளிடம் மீண்டும் மீண்டும் பெயர் கேக்க  அன்றன்று இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து வந்தன..

பறவைகளோ அன்றொரு பெயர் வாங்க அலகில் புதுப்புது ஒலி எழுப்பிப் பார்த்தன.

பூமியோ ஒரு பெயர் போதாமல் தன்னை கல்லாகவும் மண்ணாவும் கடலாகவும் அதிலெல்லாமுள்ள உயிராகவும் ஆக்கி அவளிடம் வந்தது.

கதிரவனோ ஒவ்வொரு நாளும் வேறொருவன் என வேடமிட்டு நடித்து வந்தான் அவளிடம்.

நிலவோ  ஒற்றை ஒரு பெயருக்காக இரவெல்லாம் அவள் வீட்டு வாயிற் படியில் விழுந்து கிடந்தது.

அவள் இட்ட பெயர்களே மொழி என அறிக.  அவள் விரல் மண்ணில் அலைந்ததே சொல். அவள் விரல் நீரில் அலைந்ததோ பொருள். அவள் விரல் காற்றில் வனைந்ததே கவி.  வெட்ட வெளியில் அவள் விரல் வரைந்ததே மெய்மை.

தனி

இப்பூமியில் காமத்தில் நிறைந்திராதவனுக்கு அவனில் பிறக்கும் காமமே காமம். அதையே அவன் கையிலெடுத்துக் கொஞ்சினான். முத்தி முழுக்காட்டினான். எச்சிவாய் உண்டான். அருகில் அணைந்து துயின்றான். தன் கண்ணெல்லாம் வைத்துக் கண்டான்.

அக்காமமோ அவனை காமுறும். காமத்திற்கே அளித்தவன் அவன்.

இரு கமழ் முயங்கி ஒரு சுடராகும் காமம்.

மலர் அறியாது முயங்கி மீண்டுவந்து மலரமரும் கமழ் காமம்.

நாளும் புதிதாவது மலர். முயங்குவதோ அதே திகழ்.

அன்னையும் பிள்ளையும் என அவர்கள் இங்கு காமங் கொண்டாடித் தீர்த்தனர்.

அதில் முளைத்து சொட்டியது முலை. முலையில் சொட்டியது அமுது. அமுதின் கடையில் நின்றது சிறு நஞ்சு.

நஞ்சொன்றும் அமுதொன்றும் மாந்தி களித்தனர் அவரவர் முலைகளில்.

தன் முலை தானென்றான அக்காமத்தை கொண்டாடுக!

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7”