குருவி இட்டது ஒரு கூழாங்கல்

35

விளையாட எனை அழைத்தாய்
குளிக்க வேண்டுமென்றேன்

குளித்து  விளையாடுவோம் என்றாய்
அழுக்கான பிறகே
குளிக்க வேண்டுமென்றேன்

அப்படியானால்
அழுக்காகி விளையாடுவோம் என்றாய்

வேண்டுமென்றே
உன்னோடு
விளையாடி கொண்டிருந்தேன்

36

காற்று பட்டு பட்டு
முனை மழுங்கியது
என் காகித ராக்கெட்

அதன் பிறகு
அது யாரையுமே இடிக்கவில்லை

எங்கேயும்
முட்டி நிற்கவுமில்லை

37

எந்த பல் விழும் முதலில்
ஆட்டின் குளம்படியில் போட்டால்
ஆட்டின் பற்கள் வளருமெனக்கு
மாட்டின் காலடியிலும் இரண்டு போடுவேன்

பற்கள் அனைத்தும்
உதிர்ந்த பிறகு
முன்னிரண்டு பற்கள் மட்டும்
எங்கும் விழாமல்
பார்த்து கொள்வேன் நான்

யாருமறியாமல்
முயலோ அணிலோ ஆகும்
என் முகம்

38

ஆகாயத்திற்கு அப்பாலிருந்து
உலகின் முன்
பறந்து வந்தவொரு
குருவி இட்டது
இக் கூழாங்கல்