குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8

23

வவ் வவ் வவ் வு  ஊ ஊ  ஊ

வவ் வவ் வவ் வு ஊ ஊ  ஊ

என்னதிது என்னதிது என்னதிது

ஹ்ப் ஹ்ப் ஹ்ப் ஹ்ப் புது வாசம்

பூமியின் முதல் வாசமா?

அதுவே தானா?

ஆகா இதுவொரு குட்டி.

ஆமாம் ரொம்ப குட்டிக் குட்டி.

இல்லை நல்லா மோந்து பார்ப்போம்.

ஓகோ எனக்கு தாங்கவில்லை.

உண்மையிலேயே இதுவொரு குட்டி.

என்னுடைய புது குட்டி.

அப்பா நான் விளையாடத்தான் கொணர்ந்திருக்கிறாரா? நினைத்தேன்.

வண்டி அங்கு வரும் போதே மோப்பம் பிடித்தேன். அப்பா எனக்காக தான் ஏதோ வாங்கி வருகிறாரென வாசனை வந்தது.

போதும் ஓடியதை நிறுத்துவோம். சந்தோஷத்தில் எனக்கு தலை கிறு கிறுப்பது போலிருக்கிறதே.

அந்த பக்கத்து வீட்டு குட்டை வாலனுக்கு சொல்ல வேண்டுமே.

டேய் டேய் டேய் வவ் வவ் வு ஊ ஊ . குட்டை வாலா ஆவ் ஆவ் வு ஊ ஊ.

எங்க வீட்டில் புது குட்டி. எனக்கு குட்டி .

அப்பா கொண்டு வந்தார். ரொம்ப குட்டியான குட்டி.

ஆகா அவர்கள் எல்லாம் எங்கே? குட்டி படுக்கையில் போட்டிருப்பார்கள். நான் போய் பார்க்க வேண்டாமா? நகருங்கள். நகருங்கள். என் குட்டி. என் வீடு. என் அப்பா. இது என் சோபா. தெரியுமா?

இந்த குச்சிதான். எடு எடு சீக்கிரம். இதை கொண்டு போனால் உண்மையாகவே அக்குட்டி விளையாட வரும். குச்சியோடு வந்துட்டேன்.  வந்துட்டேன். குச்சி குட்டியான குச்சி. குட்டிகோட விளையாட தான் குச்சி.

………  ……  …….. … …

வளர வேண்டுமா? நான் சோபாவில் படுத்து காத்திருந்தால் அவள் அம்மாவிடம் பால் குடித்து பெரிதாவாளா? பெரிதாகவில்லை யெனில் ஏன் கை காலை இப்படி ஆட்டுகிறாள். இவர்கள் யாரும் இல்லா போது தனியாக அவளிடமே ஒருமுறை கேட்டு பார்க்க வேண்டும். வீட்டில் இப்பவெல்லாம் ரொம்ப ஏமாற்றுகிறார்கள் நம்மை.

வவ் வவ் வவ் டேய் டேய் டேய் குட்டை வாலா

உன் வீட்டருகில் ஏதோ புது வண்டி பார் வண்டி வண்டி டா டேய் யி ஊ ஊ ஊ.. நல்லா பார்…

24

ஆம் அவள் தான். நம் புதியவள். எத்தனை புத்தம் புதியவள் பார்த்தாயா?

அம்மா.. அவளுக்கு வால் ஒன்றையும் காணோமே?

என்னழகு அணிப் பிள்ளாய்….

வால் பண்ணும் வழி அவள் அறிவாள். அது என்றும் அவளுடனிருக்கும்.

வெளித் தெரிவதையோ நறுக்க முடியும். அது அவள் உள்ளில் வளர்ந்து பூப்பெய்துவது என் செல்லமே.

அம்மா… அப்போ என் வாலும் நறுக்கப்படுமா?

இல்லையடா குட்டி பயலே…

நீ மரத்திலிருந்து மரம் தாவுகிறாய். வால் இல்லாமல் நீ இங்கு உயிர் வாழ முடியாது.

உலகின் எந்த குட்டியும் வாலே. அவ்வுயிர் வாலில் தான் சுடர்ந்தெரிய முடியும். வாலில் தான் அதன் பூ அரும்பு வைத்திடும்.  காற்றை ஏந்தும் காம்பே என்னிறைவன் அளித்த அந்த வால்.

பூவை ஏந்தும் பிறிதொரு பூ.

பூப்போன்ற இவ்வாலே நீ பெரிதாகும் போது வலிபெற்று உனை காக்கும். உனை தொய்வற்றவனாக எந்நிலையிலும் சரியாதவனாக அந்தரத்தில் நிலை நிற்பவனாக ஆக்கும்.

அதுவே உன் அனைத்துமென்று உணர்க. வாலை பேணுக.  உன் வழித் தொடர்ச்சி பிறிதொரு வாலில் ஒரு வன்னத் தூவியென அமரும். அங்கிருந்து வந்ததே  முடிநிறை வால் நமக்கு. அதுவே புவிநிறை வாழ் நமக்கு.

அவள் வாலே !அவள் முலையுண்டு வளர்க!

அவள் முலையுண்டு வளர்க!

அவள் ஊன் நெய்யுண்டு சுடர்க!

அவள் வாலே!

அவளுக்கு அவளை காட்டுக!

அதிலிருந்தே அவள் வழி தேர்க!

அதுவே வழித்துணை என அமைக!

அது  மண்ணில் படிந்து வானையுந்தேடி துழாவிடுஞ் சுடர். வெளி பொருத்தி மண்ணிற்கு ஒளியென நிற்குந் திரி போலொரு சுடர்.

ஆம் அம்மா… ஆதலினால் நான் எப்போதுமே என் வாலை கட்டியணைத்து உறங்குகிறேன். இது என்றுமென் செல்ல வால். என் குஞ்சுக்குட்டிவால் உனக்கு உம்மா.

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8”