நதி நான்

45

ஒளி கண்டு
என்
கண்ணில் விழுந்தாய்

நான்
வெறுமனே
கண்ணீர் மல்கினேன்

46

நான்
நதிக்குப் போனேன்

கால் நனைத்து
உலாத்தினேன்

இடைவரை நதியில்
இருகை அள்ளி வீசி விளையாடினேன்.

ஒரு முழுக்கு.
சிலிர்த்து எழுந்து மீண்டும் முழுகினேன்.

துடுப்புகள் போட்டபடி
நீந்தினேன்.

ஒரு பாறை இடக்கில்
வெறுமனே
படுத்து கிடந்தேன் வெகுநேரம்.

எழ வேண்டியதில்லை இனி
நதி நான்.
 

47

விளையாட ஆளிலாமல்
தனித்து சென்றேன்
ஆற்றிற்கு

இறங்கியதும்
நீரை வாரி
ஆற்றின் மேல் அடித்தேன்

அதுவோ
அடவாதமாக
குப்புற படுத்துக் கிடந்தது

ஒரு சிறிய ஆற்றைக் தூக்கி
ஆற்றில் போட்டேன்.

சலாரென திரும்பி
என் மேல்
ஆற்றை வீசி அடித்தது
ஆறு