எமது நிழலே உமது கூடாரம்

48

கனிகள் ஓய்ந்த
மரத்தின் அடியில்
நிற்கையில்
பழுத்த கைகளால்
தலைநீவும்
எனக்கு ஓர்
இலை
         

49

நான் கறுப்பாயிருக்கிறேன்
என்று பாராதேயுங்கள்
வெயில் என் மேற்பட்டது

எமது நிழலே உமது கூடாரம்
மத்தியான வெயிலில்
உமது மந்தையை
என் அண்டையில்
மடக்குவீராக!
ஏதெனில்
மேய்ச்சலிடத்தில்
உம்மை தேடி அலைய
முடியாதபடிக்கு
நிற்கிறேன் நான்
 
உம்மையும்
நமது மந்தையையும்
நாம் இளைபாற்றி தேற்றுவோம்

மாரிக்காலம் போன பின்
மண்ணில் எழுந்த
மரு தோன்றி மலர்க்கொத்து
நான் உமக்கு

எமது அறைகளுக்குள்
உம்மை அழைத்து செல்வோம்
என் அடியே அதன் தூண்கள்
இலைவேய்ந்த என் கிளைகளே
அதன் கூரை

தரையினில்
நீவீர்
தலை சாய்க்க
எமது தனங்களை
உமக்கு தருவோம்

தோழர்களே
என்னில் அவர் களி கூர்ந்திடும் வரை
யாரும் அவரை தட்டி எழுப்பாதீர்
இது என் மேல் ஆணை