தனி
அந்த பெரிய ஒற்றைத் தட்டை நான் மறந்திருந்தேன் என்று வெகுநாள் நினைத்திருந்தேன்.
சிற்சில வேளைகளில் அந்த ஒற்றை தட்டில் தான் நான் கோபத்தை உண்டேன்.. கோவம் தின்னும் என்னை அவள் கண்கள் நேரிடையாக சந்திக்கும்போது அத்தட்டில் பரிமாறப் பட்டிருந்திருந்த வெறுப்பில் ஒரு துளி தொட்டுக் கொண்டேன்.
தொடக்கத்தில் அத்தட்டின் உணவை உண்ட கணமே வாயுமிழ்ந்தேன். பின்னர் அதை செரிக்கும் அமிலம் என்னுள் ஊறி ஊறி வர ஆரம்பித்தது.
எதிர்பாராத ஒரு நாளில் நான் செரித்த அவ்வுணவிலிருந்து செய்தெடுத்த ஒரு நஞ்சை கக்கினேன். செந்நிற ம்ணியென்றிருந்தது அது.
அம்மணியை அவள் வாயில் எடுத்திடுவதை பார்த்து அன்னை அவளை வசைபாடினாள். அன்னையிடம் அந்நஞ்சை கக்க அவளும் கற்றிருந்தாள்.
36
ஓர் இரவில்.
என் தூக்கத்தின் வாசற்படியில் கேட்டது ம் எனும் ஒலி. புரண்டு படுத்த எனக்கு இம்முறை கேட்டது இம் எனும் ஒலி..
எழுந்து போய் பார்த்தபோதோ அங்கிருந்தது ஒற்றை ஒரு பொன் தூவி.
யாருமற்ற அவ்விரவில்
வெளியில் ஒரு மரக் கிளையில் கேட்டேன் ம் எனும் ஒலியை. மரப் பொந்திடையில் இம் எனும் ஓசை.. ஓடிச்சென்று பார்த்த போதோ உள்ளே இருந்தது ஒற்றையொரு வன்னத் தூவி..
யாருமற்ற அவ்விரவில் மீண்டு வந்து படுத்தேன்.
ம் எனும் விசும்பல். குறுகி பயந்து படுத்திருந்தது அக்குருவி என்னருகில். குனிந்து நான் பார்த்தபோது இம் மட்டுமென உடல்சுருண்டு படுத்திருந்தது என் அணிக் குட்டி.
யாருமற்ற அவ்விரவில் கட்டியணைக்க ஏதுமிலாது தனித்திருந்தது என் அணில்.
இம் எனும் இவ்வொலி எதன் அர்த்தமென யாரேனும் சொல்வீர்களா? என் மேல் தயை கூர்ந்து சொல்வீர்களா. என் குட்டிகள் தூங்காதிருக்கின்றன.. யாரேனும் சொல்லுங்கள்..
தூக்கத்திலும் என் குட்டிகள் தூங்காமல் இருக்கின்றன. அவ்வொலி எங்கிருந்து வந்தது? அது நமக்கு சொல்வது என்ன? எத்தனை காலம் யாருமற்ற அவ்விரவு வந்து கவிகிறது நம் மேல்?
37
அணி பிள்ளாய் நீ இன்று உறங்கவில்லையா?
இல்லை. நாளும் நான் நா..ன் கட்டியணைக்கும் என் வால் இன்றில்லை…
அம்மா சொல்லியிருந்தாள். யாரும் என்னிடமிருநது அதை வாங் ங்க போவதில்லை யென.
எல்லாம் பொய். எல்லாரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். அம் அம்மா கூட.
ஏனம்மா உன் வால் எங்கே..?
அதை அங்கே வாங்கி வைத்து விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அலமாரி. அதில் வைத்திருக்கிறார்கள் என்னை. என் வாலை. வீட்டுக்கு போகும் போது வாங்கி கொள்ளலாம் என்றார்கள். தரவே எ எ யில்லை.
அது எந்த இடம்..?
தெ தெரி தெரியாது…. ரொம்ப பெரி.. ய்ய் ய இடம்…. நிறைய அணில் குட்டிகள். ஆனால் யாரும் எதையும் கையிலெடுத்து கொறித்து தின்ன கூடாது.. மரம் விட்டு மரம் தாவி ஆடக் கூடாது.. வாலை ஆட்டி பார்க்கவே கூடாது… அம்மா அனுப்பும் போது இதெல்லாம் சொல்லவே இல்லை. அப்பாவோ முகங்காட்டாமல் திரும்பி நின்று கொண்டிருந்தார் அன்று.
நான் இனி அங்கு செல்ல மாட்டேன்… அங்கே அணில்களே இல்லை தெரியுமா?
38
இவன் பொருட்டு நான் கண்ணீரோடு பூமி சுற்றி வருவேன் என்றது ஒரு குரல். ஒவ்வொரு இல் முகப்பிலும் என் கண்ணீர் விழுமென்றது அவன் குரல்.
வழியெல்லாம் தன் கையில் சிறு அகழ் ஒன்றை எடுத்து அதில் தன்னையே வைத்து சுடறேற்றி சென்றான் அவன்.
அது அணையாமல் நின்றெரிந்தது. அணில் குட்டிகளை வருத்துவோரை கண்ணீர் என அது காய்ந்தது. அணில் குட்டிகளுக்கோ கத கதப்பென, அணைக்கும் கமழென, இரவில் நெடுநேரம் கதை பேசவும் விளையாடவும் அவர்கள் வீட்டு முகப்பில் ஒளியென ஆனது.
மூன்று முறை பூமியை அது சுற்றி வந்ததும்.. அன்னை அதனிடம் வந்து மன்றாடினாள்.. மைந்தா உன் அகழ் கண்ணீர் போல் குளிர்ந்தது.. ஆயினும் அதன் எரி தாங்காமல் தவிக்கின்றன உயிர்கள்… இப்பூமியின் பொருட்டு, காயும் அவ்வுயிரின் பொருட்டு நிறுத்துக மைந்தா. அன்னை உன் அடி பணிந்து கேட்கிறேன். நான் சொன்னால் கேட்க மாட்டாயா?
இன்றாவது உன் கண்ணீரை துடைத்துக் கொள் மைந்தா. அணி குட்டிகள் இன்று தோட்டங்களிலும் தோப்புகளிலும் ஆடி மகிழ்கின்றன.
வீடுகளிலும் காடுகளிலும் பயமின்றி தங்கள் வாலை பேணுகின்றன.
உன் அகழ் இப்பூமியை காக்கட்டும். இன்று ஓர் இரவு தூங்கி காலையில் மீண்டு வா என்றாள்.
அவனும் அன்றிரவு குளிர்ந்த அவ்வகழை பிள்ளைகளுக்காக உயரியதொரு விளக்குத் தண்டில் வைத்து சென்றான்.
தூங்கி எழுந்ததில் அவனொரு சிறு அணில் குட்டியாக மாறியிருந்தான். பொன் என சுடரும் அணில்.
அன்றிலிருந்து இங்குள அனைத்திற்கும்
ஊண் ஊட்டுவே
அவர்களின் முன்றில் ஆடவே
தேடிப் பிடித்து விளையாடவே
தேம்பியழும் கண்ணீர் காயவே
இங்கு தினம்வருகிறது அவ்வணில் குட்டி.







