எனை காயுமுன் கீதம்

53

என்பு இலாத எனை
காய்கிறது
உன் கீதம்

எனை தாங்க மாட்டாமல்
இன்னும் வருகிறேன்
உன் கீதமருகே

உனை காயும்
வெயிலை 
காட்டுகிறாய்
எனக்கு நீ

54

முலையும்
குழலும் நானும் கொண்டேன்

குழையும்
கழலும் நானும் கொண்டேன்

உனையும்
எனையும் நானும் கொண்டேன்

வரவும்
போக்கும் நானும் கொண்டேன்

அளவும்
அதிலாத
களவும் நானும் கொண்டேன்

ஆலம்
காலம்
ஆலாலம் நானும் கொண்டேன்
நானுங் கொண்டேன்
நானே கொண்டேன்


55

மேலிருந்து
ஆண்டனாவை
திருப்புவது மட்டுமே என் வேலை

கீழிருந்து
வரும் குரல் கேட்டு
நிறுத்துவேன அன்றி
ஆண்டனா
வேலை செய்யும்
ஆகாய புள்ளியையும்
நான் அறிவதில்லை

கீழ் இறங்கி சென்றால்
அவர்கள் கண்ட எதையும்
நான் காண்பதுமில்லை

ஆயினும்
நான்
அங்கே நின்றிருக்கிறேன்



56

சூது பவள மேனி
சுடர்ந்தெரிய கண்டேன்

காதம் கோடி
ஆங்கோர்
கருணை காய கண்டேன்

ஏது பாதமென
ஏங்கி
வானே திரிய கண்டேன்

கண்டேன்
அல்லேன்
கண்டேன்
அல்லேன்
கண்டேன் அல்லேன்
ஊஞ்சலொன்று
ஓயாது ஆட கண்டேன்

அல்லேன் கண்டேன்
ஆட்டுமுன்
கை ஆட கண்டேன்
அல்லேன் கண்டேன்
என்னிரு
கண்ணார கண்டேன்