13
நான் வந்துவிட்டேன்…. என்ன யாரையுங் காணோம். எல்லாம் முடிந்து விட்டதா? ஒரு டிஸ்ஸ்ஸ் அடிக்கும் நேரத்திற்குள்ளா? நம்ம நல்ல ஏமாத்தீட்டாங்கப்பா அவங்க ரெண்டு பேரும்.
அப்ப நான் கஷ்டப்பட்டு 13 அ மனப்பாடம் பண்ணதெல்லாம் வீணா?
நானாவது பரவாயில்லை. ஒரு அத்தியாயம் தான். நீங்களோ பாவம். மொத்த புத்தகத்தையும் மனப்பாடம் பண்ணிருப்பீங்களே?
இறுதி
அன்புநிறை நண்பர்களே
நின்னோராவிலிருந்து நான் எழுதுகிறேன். நான் எனில் நான் மட்டும் தான்.
ஆம். இது அப்படி அங்கு முடியாதென அறிந்திருந்தேன்.
யாருமற்ற இவ்வைகறையில் நான் மட்டுமிங்கே மதுரமாயிருக்கிறேன். ஆம். நம்மில் யார் இனிப்பு கிடைத்தவுடன் வாயில் போட்டு ஒளிக்காதவர்கள்? வாயில் போட்டதும் யாருடனும் பேச முடியாதளவு இனித்து விடுகிறோமல்லவா நாம்.
அவ்வினிப்பு தீரும் வரை தனித்திருக்க விரும்புகிறோம். அது தீர்ந்ததும் மற்றுமொன்றுக்காக மீண்டு வந்து வீட்டில் விளையாட்டில் சேர்கிறோம்..
இன்று என் இனிப்போ தீர்ந்த பாடில்லை.
ஆனால் இவ்வேளையில் நான் உங்களைத் தான் நோக்கியிருக்கிறேன்.
இங்கிருந்து நோக்கும் போது பூமியே ஒரு சுடரென தெரிகிறதெனக்கு. நின்னோராவில் அமர்ந்து பூமியைத் தான் சுற்றி கொண்டிருக்கிறேன்.
சுடரெல்லாம் சுற்றி இருப்பவர்க்கு தானே..
இங்கிருந்து நோக்கும் போது இக்கணம் தோன்றுகிறது
சுற்றி இருப்பதெல்லாம் சுடர்வதற்கு தானே..
முத்தங்களுடன்
குழந்தையாகிய நான்
என்னால் எதையுமே முத்தமிடமால் முடிக்க முடியாது. குழந்தையிலிருந்து அதுவொரு பழக்கம்.
முத்தம்.
தனி
அவளையும் அவனையும் கோமாளி என்கிறார்கள் எல்லாரும்.
ஆம். நீங்கள் அப்படி சொல்லவில்லை. ஏனெனில் நீங்கள் எல்லாரும் இல்லை.
புத்தகத்திற்கு வெளியே எல்லாரும் அப்படி பேசி கொள்கிறார்கள்.
கோமாளியை கோமாளி என்பவர்களே!
எங்கேனும் என் கோமாளியை பார்த்தீர்களா? அவன் எப்பவுமே இப்படித் தான் கோமாளித் தனமாக ஏதாவது செய்து தொலைவான்.
இல்லையெனில் உங்கள் கோமாளியையாவது பார்த்தீர்களா?
…… …… ….. …..
என்னது …உங்களுக்கென ஒரு கோமாளி இல்லையா?
சரி ஒன்று செய்வோம்..
என் கோமாளி கிடைத்தால் நீங்களே வைத்து கொள்ளுங்கள். எனக்கு நானே போதும்..
….. ….. ….. …..
என்ன? அவனை வைத்து என்ன செய்வதா?
நான் இதுவரை அப்படி எதுவும் செய்ய யோசித்ததில்லையே.
ஆங்ங்…என்னிடம் திருப்பி கொடுக்கலாமே… அப்படி செய்தால் உங்கள் கோமாளி கிடைத்து விடுவானே. கிடைத்தால் அது என் கோமாளியாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் திருப்பி தரவும் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் தான் கிடைக்கும் முன்பே என் கோமாளியை திருப்பி தந்து விட்டீர்களே.
ஆனால் இங்கே தொலைந்து போன அந்த கோமாளி எந்த அத்தியாயத்திலும் இருக்கலாம்.
நாலு பேர் முன்னாடி போய் தேடுங்கள். இரண்டு பேர் அத்தியாயத்தில் பின்னாடி போய் தேடுங்கள்.
….. … ….
நீங்களா?
நீங்கள் கொஞ்சம் இந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு தேடிப் பாருங்களேன். ஒரு வேளை உங்களுக்கு அவன் கிடைக்கலாம்.
( நிறைவு)







