வான் பொருட்களின் அருங்காட்சியகம்

நட்சத்திரங்களும் சூரியனும் என் செய் பொருட்கள் – நான்ஸி ஹால்ட் (Nancy Holt)

நமக்கு நட்சத்திரம் என்றானது
எவ்வுலகின் சூரியன்?  – இது நான்

6 வயதான என் மகள் ஒருமுறை பறக்கும் மீன்கள் பற்றி கேட்டு துளைக்க, இதற்கு மேல் தெரிந்து கொள்ள நீ புத்தகங்களை படிக்க வேண்டும் என்றேன்.  அவள் மீன்களை நேரில் பார்க்க முடியும் போது அவற்றை தெரிந்து கொள்ள ஏன் படிக்க வேண்டுமென கேட்ட கணம் நான் நான்ஸியின் சூரிய துளைப் பாதையை (sun tunnel)  நினைத்துக் கொண்டேன்.

1970களில் நான்ஸி ஹால்ட் எனும் கலைஞர் அமெரிக்காவின் மேற்கு பாலை நிலத்தில் எழுந்தணையும் சூரியனை நோக்க (அன்றி அது எதற்கென்பதை அவரவர் அறிந்து கொள்ள) உருவாக்கியது சூரிய துளைப்பாதை. இரு முனைகளை இணைக்கும் போதே ஒரு துளை பாதையாகிறது. (A hole becomes a tunnel).  சூரியனை நாமும் நம்மை சூரியனும் தீண்ட வாய்க்குமோர் இருவழிச்சாலை.

சூரிய துளைப்பாதை

குழந்தைகளுக்கான பூச்சிகளை பற்றிய வகுப்பிற்கு போகலாமா என கேட்ட போது “தொட்டுப் பாக்க விடுவாங்களா? என்னால தொட்டா தான் பார்க்க முடியும் “ என்றாள் மற்றொரு முறை.  வெகு நாட்கள் சொற்கள் வழியாகவே அனைத்தையும் தொட்டு வந்திருந்தவனுக்கு கையாலும் கண்களாலும் தொடக் கூடிய உலகை நான்ஸி மீண்டும் திறந்து வைக்கிறார்.

புதைக்கப்பட்ட கவிதைகளை வழிகாட்டல்கள் மூலம் கண்டெடுக்கும் செய்கைகளை நிலப்பரப்பை அறிவதன் கலையாக செய்திருந்தார் நான்ஸி (Buried poems and tour). ஒன்றை சொற்களின் வழியாக நேரில் போய் தொட்டு பார்க்க முடிவதன் அனுபவம் அது.

சூரிய துளைப்பாதை பற்றிய சொற்களும் புகைப்படங்களும் அதன் நினைவுத் தடங்களே அன்றி அதுவே தன்னளவில் கலை அல்ல என்கிறார் நான்ஸி. பருப்பொருட்களின் மூலம் மட்டுமே உருவாகும் கலையாக்கங்கள் கைகளால் தொட்டு பார்க்க வேண்டியது அல்லவா? இறைகலையாக்கமென இங்கிருக்கும் வானை அதன் சூரியனை  தொட்டுக் காட்ட நான்ஸி வர வேண்டியிருக்கிறது நமக்கு.

Sun tunnel, Utah

இன்று நான் வாழும் சிவப்புகற்கள் (laterite) கொண்ட வீட்டின் மேல் மேவும் சூரியனின் கதிர்முகம் மாறிக் கொண்டே இருப்பதில், வீட்டு முகப்பில் பாவப்பட்டுள்ள சிறுஞ்ஜல்லி கற்தரை  மேல் வந்தமரும் தவிட்டு குருவியின் வண்ணத்தை காலையும் மாலையும் மாற்றி விளையாடும் சூரியனை நோக்க எனக்கு எந்த தடையுமில்லை. என் படுக்கையிலிருந்து எழுந்த கணம் சட்டமிட்ட பல வண்ண கண்ணாடி கொண்ட ஜன்னல் வழியாக அன்றைய சூரியனை தொட்டு பார்க்கிறேன்.  நம் கண்ணே கணம் கணம் உருவாகுமொரு துளைப்பாதை அல்லவா? ஆம் நாம் எங்கும் செல்லாமலே எங்கும் செல்லவும் முடியும். அதுவே நான்ஸியை 50 ஆண்டுகள் சென்ற பின்னும் இவ்வுலகினரிடை நெருக்கமாக்குகிறது.

நான்ஸி தன் சக கலைஞரான ராபர்ட் ஸ்மித்சனை ( ஸ்பைரல் ஜெட்டி எனும் நிலக்கலையை உருவாக்கினவர் ) திருமணம் செய்து கொண்டதார். தனி வாழ்க்கை கலை வாழ்க்கை என்றில்லாமல் அவரிடமிருந்தது வாழ்க்கை. ராபர்ட் தன் கலையாக்கத்திற்காக ஒரு நிலத்தை  ஆராயும்போது ஹெலிகாப்டர் விபத்தில் 35 வயதில் இறந்தார். அவர் இறந்த அடுத்த மூன்று ஆண்டுகளில் தான் தன் சூரிய துளைப்பாதையை  உருவாக்கினார் நான்ஸி . அவ்வாண்டுகளில் அவர் ஆன்மீகமான ஒன்றை தேடியதன் கண்டடைந்ததன் தடயமே இத்துளைப்பாதை. தன் வாழ்நாள் முழுக்க நான்ஸி மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஆம், கலை எனுமொரு வாழ்க்கை.

சூரிய துளைப்பாதை கதிர்திருப்பத்தின் (solistice) கணக்கீட்டின் படி அமைக்கப்பெற்றது. ஒரு வருடத்தில் தன் சுழற்சித்தடத்தில் தொடுவானில் கதிரவன் எய்தும் இருமுனைகளை காணுதற்காக எனக் கொள்ளலாம்.  வருடத்தை ஒரு நாள் எனக் கொண்டால் அதன் கதிரெழுகை மற்றும் அந்தி வேளையை காணுதல் எனவும் கொள்ளலாம். கிட்டத்தட்ட பத்துநாட்கள் வரை சூரியனை  கான்கீரிட் பைப்பின் சுழல் மையத்தில் காண முடியும். சுழற்சி என்றுமே வட்ட வடிவிலானது.  நட்சத்திரங்கள் அனைத்தும் சுழற்சியே.  வானும் சுழற்சியோ? சுழற்சி அன்றி வேறு வழியில் அதை காண ஒன்னுமா? அத்துளையின் சுழல்வழி நாம் காண்பது எத்தனை கோடி வானை. 

அவர் இதை செய்யும் போது மூன்றில் ஒரு பங்கு நிதியை மட்டுமே அவரால் திரட்ட முடிந்திருக்கிறது. மீத தொகையை தன் சொந்த செலவில் நான்ஸி சரிசெய்திருக்கிறார்.

நான்ஸியின் வடிவ கவிதை

தன் கலை உருவாக்கத்தின் ஆரம்ப நாட்களில் நான்ஸி சொற்களின் வைப்பிடத்தால் இயங்கும் வடிவ கவிதைகளில் சூரியன் நட்சத்திரம் வானம் போன்ற வார்த்தைகளை வட்டமாக எழுதி பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் இதை கான்கீரிட் கவிதைகள் என்றழைக்கின்றனர்.  அங்கிருந்து மெய்யாகவே கான்கீரிட் வட்டம் வழியாக தான் எழுதிய அருஞ்சொற்களை வானிற் காண நான்ஸிக்கு கிட்டதட்ட பத்து ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது.  நான்ஸி தன் கவிமனத்தை சொற்களின் வழியாக அல்லாமல் வேறு செய்பொருட்களின் மூலம் வெளிப்படுத்தினாரே ஒழிய அவரை கவிஞர் என அழைப்பதில் எனக்கு எவ்வித தயக்கமுமில்லை. தன்னுள் சொற்களோ படிமமோ அல்ல கவிதையை கொண்டவனே கவிஞன்.

கவிமனம் எனும் நிகழ்வு ஒரு புகைப்படம் மூலமோ தொல் மூதாதை சொல் மூலமோ ஒரு சிறுசெய்கை மூலமோ வெளிப்படலாம். நான்ஸியின் செய்பொருள் பற்பல வண்ண வேறுபாடுகளுடனும் திகழ்கையில் கண்முன் ஒரு கவிதை நிகழ்வதையே நாம் காண்கிறோம்.


நான்ஸி படித்தது உயிரியல். ஆனால் அவர் வானியல் மற்றும் வானியற்பியல் என பல்வேறு அறிஞர்களுடன் தொடர்ந்த உரையாடலின் மூலமே இத்துளைப் பாதையை உருவாக்கினார்.

சூரிய துளைப்பாதை பற்றிய தன் குறிப்பில் நான்ஸி மிகத் தெளிவாக பருப்பொருட்களின் அளவீடுகளை அளிக்கிறார. 22 டன் எடையுள்ள பைப். எத்தனை டன் சிமெண்ட கான்கீரிட், என்ன சென்மீட்டர் விட்டமுள்ள துளை என அனைத்தையும்.  உடன் பணியாற்றியவர் அனைவரையும் பட்டியலிடுகிறார். அனைவருமென்றால் அனைவரும். ட்ரக் ஆப்ரேட்டர் ஒருவர், கான்கிரிட் பைப் நிறுவன ஊழியர் எழுவர், வானியல் அளவீட்டாளர் என நீளும் பெரும்பட்டியல். 

நான்ஸிக்கு அமெரிக்காவின் அகன்ற மேற்கு வெளி மீது ஒருவித ஈர்ப்புகொண்ட இணைப்பு இருந்திருக்கிறது. (Western spaciousness என அவர் அதை சொல்கிறார்) . நான்ஸிக்கு காலம் பாலைவெளியின் பாறைகளில் படிவுகளாகியுள்ளது. அவருக்கு அப்பாலை நிலத்தில் ஒரு குரங்கோ அதன் பிறகான அரைமனிதனோ கண்ட அதே சூரியனை தான் காண்பது எப்படியோ மீண்டும் அவர்களிடம் செல்வதுதான்.  Sense of timelessness என அவர் அதை கூறுகிறார்.

கான்கிரீட் பைப்களின் விலை இருமடங்காக ஆகும் போது நான்ஸி அந்த பைப் கம்பனியின் தலைவரைச் சந்திந்து கலைப்படைப்பென்தால் அவர்களிடம் மானியமாக கணிசமான விலை குறைப்பை எதிர் நோக்குகிறார். ஆனால் 5 சதவீத விலை குறைப்பு மட்டுமே கிடைப்பது அவருக்கு ஏமாற்றமளிக்கிறது. சூரியத் துளை உருவாக்கப்படும் காலகட்டத்தில் அதற்கு போதிய நிதியுதவி கலையுலகில் கிடைக்கவுமில்லை.

நில கலை (land art) என வகை படுத்தப்படும் நேன்ஸியின் இந்த குறிப்பிட்ட கலையாக்கம் வானை நோக்கி அமர்ந்திருப்பதனால் நிலத்தில் மட்டும் அமைவதல்ல.

நிலவை கையகப்படுத்தி வென்றிருந்த அமெரிக்காவின் காலகட்டதில் நான்ஸி இங்கிருந்தபடி கதிர் வண்ணத்தையே தன் கைவினை என முடைந்து பிரபஞ்சத்தின் ஒரு சிறுதுண்டை பெற்றுக் கொள்ள முடியுமென கண்டார். நான்ஸியை பெண் எனவும் கலைஞர் எனவும் கூறுகிறார்கள். ஆனால் அந்த பாலை நிலத்தில் நின்றிருந்த நான்ஸியை நான் அறிவேன்.  அவள் ஒரு குருவி.  சிறு புதர்கள் மண்டிய காட்டின் ரீங்காரமில்லாத வெளியில் சூரியனை நோக்கி தனக்கொரு கூட்டை உருவாக்கி கொண்ட குருவி.  அக்குருவி தன் அலகால் சூரியனை முத்தமிடுவதற்காக செய்ததல்லவா இது அத்தனையும்.  நான்ஸின் அலகினால் வானிற்கு நானுமொரு முத்தம்.

வானின் கதிரவன் ஒளிற மண்ணில் அந்த கான்கிரிட் குழாயினுள் இரவின் மீதே படுத்து இளைப்பாறலாம். நடக்கலாம். செயற்கையாக செய்யப்பட்ட ஓர் இரவு. ஏழேகால் இன்ச் கான்கீரிட் தடிமனுள்ள குளுமையான இரவு.

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்                

குறள்- 637

இயற்கையை அறிய தன் செயற்கையை அல்லவா மனிதன் நம்பியிருக்கிறான். செயற்கை எனும் சொல் மகத்தான அர்த்தம் கொண்டதாக பயின்று வருகிறது இக்குறளில்.  நம் கலைகள் அனைத்தும் நம் மனதால் உள்ளுணர்வால் அறியாத கை ஒன்றினால் நாம் செய்த செயற்கை அல்லவா?

நான்ஸியின் ஒளிரிரவு

கான்கீரிட் பைப் தயாரிக்கப்படும் யார்டில் (yard) நான்ஸி ஒவ்வொரு நாளும் இருக்கிறார். ஒரு கவிஞனின் கவன கூர்மையுடன் ஒருபெரும்  நாவலில் வேலை செய்வதைப் போல பலதரப்பட்ட பருப்பொருடகளின் முயங்கியலை உணர்ந்து நான்ஸி வேலை செய்திருக்கிறார்.

இது போன்ற கலைகளில் ஒரு கருதுகோளை அல்லது படிமத்தை கண் முன் பருப்பொருட்களால் உண்டாக்கி எடுப்பதன் உழைப்பு என்பதும் அக்கலை பகுதியே.  அவ்வகையில் கலைஞன் என்றுமே பௌதீக உலகிற்கும் மிக நெருக்கமானவன்.

50 வருடங்கள் கழிந்து நான்ஸியிடம்  பேசியாக வேண்டுமென்றால் நான் சமீபத்தில் எழுதிய இவ்வரிகளையே அவரிடம் நீட்டுவேன்.

வான் நோக்கி
உன்னையே திறந்த
நீ
கொள்க அன்னம்

நான்ஸிக்கு அன்னமென்பது அவர் விரும்பிய வானமோ அவ்வான் பொருட்களோ அன்றி அதையனைத்தனையும் வெளிக்காட்டும் வோறொன்றின் அருங்காட்சியகமோ நாம் அறியோம். அவ்வருங்காட்சிக்குள் நாம் ஊடுருவும் தருணமே நான்ஸியை அறிய துவங்கும் தருணம் என அறிக.

Arid sun tunnel

நான்ஸி ஹால்ட் மற்றும் அவரது கணவர்  ராபர்ட் ஸ்மித்ஸனின்  கலையாக்கங்களை holtsmithson foundation இணையதளம் வழியாக அறியலாம். உண்மையில் அங்கிருந்து நாம் தொடங்கலாம் எனச் சொல்லவே விழைகிறேன். உட்டா (Utah) பாலைநிலத்தில் சிமிண்ட்நிறம் கொண்ட அந்த பரந்த வெளியில் அவ்வெளியுடைய ஒரு பகுதி என நிற்கும் X வடிவை உருவாக்கும் நான்கு கான்கீரிட் பைப்புகளின் மத்தியில் நிற்கையில்  ஒருவேளை நான்ஸியை சிறிது அறிந்து கொண்டோம் என நாம் சொல்லிக் கொள்ள முடியலாம்.

( வெள்ளிமலையின் நித்தியவனத்தில் நான்ஸியை தன் படிமங்களைப் பயில்தல் வகுப்பில் அறிமுகப் படுத்திய ஏ.வி.மணிகண்டனுக்கு நன்றி )