நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்பு

நண்பர்களே

இன்றிலிருந்து தொடர்ந்து ஒரு வருடம் தினம் 30 பாடல்கள் என மொத்த கம்பராமாயணத்தையும் வாசிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

நொய்தின் நொய்ய சொல் எனத் தன் காவியத்தை பற்றி கூறுகிறான் கம்பன். மென்மையை காட்டிலும் மென்மை. அதே  நொய்ய நிறத்த வண்ணத் தும்பியென நான் அச்சொற்களின் மேலெல்லாம் சென்றமர்ந்து சேகரிக்கும் பொன் சிந்தூரப் பொடி உங்களுக்கும் உரித்தானது. என் ரசனைக் குறிப்பை தொடராக வெளியிடவும் முடிவு செய்துளேன். வாரம் ஒரு குறிப்பு என மொத்தம் 50 சிறுகட்டுரைகள்.

தினம் பயிலும் 30 பாடல்களையும் என் கைபடவே எழுதவும் செய்வேன். இதன் வழியாக அவசரமாக படித்து முன்செல்லுதலை தவிர்க்க முடியலாம். மட்டுமின்றி வாசித்து முடிக்கும்போது நம் கைகளால் நாமே எழுதிக் கொண்ட கம்பராமாயணப் பிரதி நம்மிடம் எஞ்சுவது ஒரு நல்லூழ் என நினைக்கிறேன்.

சொந்த மொழியில் இப்படியொரு காப்பிய வாசிப்பு அமைந்ததற்கு மகிழ்வும் ஒருவித பெருமிதமும் உள்ளார கொள்கிறேன்.  365 நாட்கள் தொடர்ந்து ஒரு காவியத்தின் சொல் மிதவையில் கழிப்பதும் அக்காவியகர்த்தனே நம் படகோட்டியும் ஆசிரியனாகவும் அமைவது ஓர் உவகை. செயல் அமைக. நன்றி.

வி சங்கர்

One response to “நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்பு”