சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம்

வானப்ரஸ்தம் எனும் மலையாள திரைப்படத்தின் காமினி என்னும் பாடலை நேற்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பாடலின் சமஸ்கிருத சொல்லாட்சிகள் பாடலாக கேட்கும்போது ஒருவித மயக்கத்தை அளிப்பவை. சந்திரிகா லயம் சேர்த்த சங்கீதம் ஆலிங்கனம். சுபத்தரையை சந்திக்கும் அர்ஜுனன் பாடுவது.

இப்படத்தில் அர்ஜுன வேடமிடும் கதகளி கலைஞனாக நாயகன். கதகளியில் தோன்றும் அவ்வர்ஜுனனை மட்டுமே காதலிக்கும் உயர் குடி பெண்ணான நாயகி (சுபத்தரை என பெயர் கொண்டவள்) அவன் அவ்வேடத்திலிருக்கும் போதே உறவு கொண்டு மகனை பெறுவதும் சாமான்யனாக அவனை முழுவதுமாகவே தவிர்ப்பதுமான கதை. இப்பாடல் வாழ்நாள் முழுக்க தன் நிஜ சுயத்தை குரூரமாக புறக்கணித்து தன் கலை வேடத்தை மட்டுமே காதலித்த சுபத்திரைக்காக, தன் சொந்த மகளுக்கு கதக்களி பயிற்றுவித்து அவள் சுபத்தரையாக உடன்வர நிகழ்த்தும் கடைசி கதகளி. எனக்கு இது கர்ணணுக்கும் திரௌபதிக்குமான கதை என்று தோன்றியது. காமினி என காதல் தோய்ந்த கர்ணன் பாடியிருக்கக் கூடும்.

காமினி....
என் மனோரதமே...
உன் மெல்லிய தொடுகையாற்
ஆசையின் நந்தவனம் பூக்கின்றது
சந்திரிகையின் லயமொடு யாத்த இசை உன் அணைப்பு
அங்கங்களில் நீ அருளும் முத்தங்கள்
எரி துண்டான மனதிற்கு சந்தனம்
சுருள்குழல் மெல்ல அவிழ்வது போல்
உன் காதல் கசிந்து ஒழுகிறது