51
தணிந்த மென்பஞ்சு
சேக்கை
உன் தனம்
குனித்த செஞ்சாந்து
நிற குருவி
நான் அங்கே
பறக்க அறிகிலேன்
பசியும் மறக்கிலேன்
உண்டு உண்டு
உன் சூட்டில்
கண் வளர்த்தேன்
சிறகு விரிந்த அவ்வேளை
உடல் உந்தி
ஆகாயமடைந்தேன் நான்
52
சர்ப்ப பூஜங்களின் மேல்
சாய்ந்தாடும் கூந்தற்குழவி நாகம்
முலையினின்று
கருநாக்கு நீட்டி நிற்கும் நச்சரவம்
அஞ்சுதலை விரித்து
முத்தாடும் கைபூஜங்கம்
வீரிய விடம்
சுருண்டு படுத்துறுங்கும்
ஈரங்காந்தும் மணிப்பூரம்
இடையில் பத்தி விரித்து
சிவக்கும்
பாதாள ரூபம்
இவ் ஆலம் மேல்
கொடி சுற்றி அமுது கோத்து நெரிக்கும்
என் கால கால களிமாநாகம்