கம்பராமாயண வாசிப்பு பற்றி – மீண்டும்

நாம் ஒன்றை கனவு காணும் போது நம்மை ஊதிப் பெருக்குகிறோம். சரி நாமல்ல நான். ஒரு நாளைக்கு 30 பாடல்கள் வீதம் ஒரு வருடத்தில் கம்பராமாயணத்தை முடிக்க வேண்டும் என நினைத்து இந்த தளத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தேன். இது உடனே படித்தாக வேண்டும் என்ற என் அவசரமும் அதன் பின்னுள்ள நானே பெருக்கி கொண்ட என் ஆணவமுமே (அல்லது தன்முனைப்பு)  என இன்று தோன்றுகிறது.

தினம் 30 பாடல்களை படித்து கையால் எழுதிய போது அது ஒரு மனப்பயிற்சி போல தோன்ற ஆரம்பித்து விட்டது. இன்றைய நாவல்கள் போல கம்பராமாயணத்தை ஒரே மூச்சில் படிக்க முயல்வது தவறு என உணர்கிறேன். மேலும் நான் ஊதி பெருக்க வைத்த என் பலூன் நாளாக அதன் உண்மை வடிவை எட்டுவதை ஒவ்வொரு நாளும் தூங்கப் போகும்போது நானே உணர்ந்தேன்.

நல்லவேளை இதை மாற்றி அமைத்துக் கொள்ள எனக்கு நானே எந்த தடையும் விதித்துக் கொள்ளவில்லை. இதுவரை வாசிப்பை நிறுத்தியவன் அல்ல. ஆயினும் தினம் 10 பாடல்கள் பயில்வதே சரி எனப் படுகிறது. அல்லது அவ்வளவுதான் என்னால் இயல்வது. தொடர்ந்து கம்பராமாயணத்தை வாசித்ததன் நடைமுறை அனுபவத்தின் மூலம் அதிகாலை எழுந்தவுடன் 5 பாடல்கள் பிறகு மாலையில் 5 பாடல்கள் வாசிப்பதே எனக்கு நிறைவளிப்பதாகவும் பிற வாசிப்பு மற்றும் எழுத்து பணிகளின் ஊடே என்னால் இயல்வதாகவும் உள்ளது.

வாசிப்பு பற்றிய குறிப்பு அல்லது கட்டுரைகளை இடை இடையே தோன்றிய வண்ணம் அளிக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளேன். ஆனால் நாள் தவறாது வாசித்து கம்பராமாயணத்தை நிறைவு செய்வேன் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். ஆம் ஒன்றின் மீதான தொடர்ந்த பிடிமானம் என்பது நம்மை மீறி நம்மில் இருந்து நம்மை ஆள்வது தான்.

நொய்தின் நொய்ய சொல் – கம்பராமாயண வாசிப்பு