ஆண்டாளின் மடியிலமரும் சொற்கள்

சில தினங்களாக ஆண்டாளின் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி‘ எனும் பாடலை பல குரல்களில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதிகமும் புகழ் குறைவான பாடகர்கள் தான். எப்போதும் நான் விரும்பி கேட்கும் அருணா சாய்ராம் ஆண்டாளைப் பாடும் போது பெரிதாக ரசிக்க முடியவில்லை. சஞ்சய் ஆண்டாளை ரொம்பவே பயமுறுத்துகிறார்.

எளிமையான சொற்கள். எளிமை வழியாக அடையப்படுவதை சில சமயம் தங்கள் கலைக் கூர்மை வழியாக பின் தொடர முடியாமல் ஆகிறார்களோ பெரும்கலைஞர்கள். ஆனால் பாம்பே ஜெயஶ்ரீயை கேட்க முடிந்தது. அப்பாடல்களின் எளிமையும் நெருக்கமும் காரணமாக ஏறத்தாழ பாடத் தெரிந்த பெரும்பான்மையினர் அதை பாடியுள்ளனர்.

என்னை விட கொஞ்சம் சூட்டிகையான என் வகுப்புத் தோழிதான் ஆண்டாள் என நான் நினைத்துக் கொள்வதுண்டு. எப்படியாயினும் ஒரு நாள் அவளைக் காட்டிலும் அழகிய ஒன்றை நான் உருவாக்கி அவளிடமே காட்டி விட வேண்டுமென்று தோன்றுகிறது.

அவ்வாறு உருவாக்கவில்லை யென்றால் கூட அவள் அருகமர்வதற்கு ஒரு நாளும் அவள் தடை சொன்னதில்லை. அவள் கற்பூர மணமும் , மெல்லிய நூல் ஆடையும் ,பாடும் இதழ்களையும் கண்டு களிக்க அவள் தடை சொன்னதில்லை.

ஆனால் என் சொற்கள் அவள் மடியில் அன்றி  வேறு எங்கும் இத்தனை சமர்த்தாக அமர்ந்திருக்காதவை. அவை வேறெவர் சொல் பேச்சும் கேட்காது கூட போகலாம். என் இனிய அன்யோன்யமே உனக்கு முத்தம்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்

குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!