1

காட்டில்
அறத்தோன் இல்லை
தனித்த ஒரு மீன்கொத்தியின்
பாடல் மட்டுமே உள்ளது

2

வானேறவோ வழிந்தோடவோ
நிரம்பித் தவிக்கிறது
நிறைவிளக்கு

சுடர் எரியும் திசை
என ஏதுமுண்டா?

3

காட்டுக் கொடிகளாலான
இந்தக் கூடையைக்
கொடுக்க வேண்டியே
நான் வந்தேன்.

திறந்து பார்க்கும் போது
நீ எடுக்க
இரண்டு இனிப்புத் துண்டுகள்கூட வைத்தேன்.

திறந்து பார்க்கும் போதும்
நீ
அந்தக் கூடையை
பார்க்கவில்லை

4

என்னிடமுள்ளது
நம் கண்ணீர்

எந்த விளக்கு மாடத்தில்
ஏற்றி வைத்தால்
நமக்கு அது எட்டும்?

5

ஒரு கூழாங்கல்
ஆக விரும்பினேன் நான்

மழுங்கியது
ஆயினும்
கூர் முனை ஏதுமிலாதது

நாள்தவறாது நான்
ஆற்றில் கிடந்து பார்த்தேன்
என் கூழாங்கல்
அங்கு கிடக்கவில்லை

எனில்
மண்ணில்
நான்
உப்பாயிருக்கிறேன்

6

ஒவ்வொரு முறையும்
நான் வருவதற்கு முன்பே

யாரோ
உன் பாதங்களைக்
காயப்படுத்தி விடுகிறார்கள்

நீயோ
விளையாட்டென
அவர்களிடை வைத்துக் கொள்கிறாய் உன்னை

உன்
கால் தடங்கள் கண்டு
வழி தேர்வது
எத்துணை கடினம் என்பதை
நீ புரிந்து கொள்வதேயில்லை

7

மலம் என்ற சொல்லிலிருந்து
ஒரு கை அள்ளுமோ
சொல்

8

சொற்கள்
மன்றாட்டுக்கென
விளையாட்டுக்கென
நீராட்டுக்கென
நீ அளித்த பாவைகள்

இறைவனுக்கரசே
நம் பாவைகள் மேல்
பொருட்களை ஏற்ற வேண்டாமென
எம் பெரியோர்களிடம் சொல்வீரா?

9

தலை வெட்டி
எடுத்துச் செல்லும் அவர்கள்
அறியமட்டார்கள்

கிடத்தப்பட்ட உன் பாதங்களே
எனக்கு முகம்

10

வளைந்து வளைந்து
செல்லும் நேர்கோடு
வழியில்
நிறுத்தி நிறுத்தி
முத்தமிடுகிறது
பார்க்குமனைவரையும்.

11

தூரத்தில்
கருப்பும் சிவப்புமான ஒரு பொட்டு
மும்பரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த
பூச்சி மருந்து மெசினை
சுற்றி சுற்றிப் பறக்கிறது

குளவியாய் இருந்தால்
கூடு கட்ட
ஓர் இடுக்கு தேடலாம்

தேனீயாய் இருக்காதெனச் சொல்வதற்கு
இன்னும் அவ்வளவு நெருக்கமாக செல்லவில்லை
நான்

12

திடுமென
எதிர் வருவோரைக் காட்டி
யாரிவர் எனக் கேட்டாய்

தடுமாற்றத்தில் நான்
தெரியாதென பொய் சொன்னேன்

13

இரவின்
முடிவிலா ஆடியில்
தன்னைத்தான் சிமிட்டுகிறது
மின்மினிக் காடு

14

ஆளற்ற தென்னந்தோப்பிற்குள்
தனித்து விடப்பட்டிருந்தது
ஒரு வாட்டர் ஆப்பிள்.

எடுத்து கடிக்கவும் மனமில்லை.
சிரித்து சிவந்த முகமோ
மிகச் சிறியது.

அதன் அம்மா
அருகில் இருப்பது போலவும் தெரியவில்லை

காக்கையோ குருவியோ
தவற விட்டதென்றால்
கொடுத்தனுப்ப வேண்டியதுமில்லை

கூட கூட்டிப் போகவும் வழியில்லை.
வீடென்றால்
அதற்கு புழுக்கம் உண்டாகலாம்.

யாரிடம் கொண்டு சேர்ப்பது
நம்
செல்லக் குட்டியை?

15

இத்தனை ஆயிரம் நாவுகளால்
நக்கி விடுகிறது மரம்.

துவட்டிக் கொள்ள
மற்றுமொரு மரத்திடம்
ஓடிச் செல்கிறது காற்று

16

என்
முதுகில்
முடியடர்ந்த
உன் வால் வேண்டும்
ஒருமுறையேனும்
நானதை
ஆட்டிப் பார்க்க வேண்டும்

17

ஆம்
இங்கு எதுவுமிலை
எது வரினும்
அதுவுமிலை

தேம்பியழுது
காற்றிலென்
கூந்தலாடவே வந்தேன்.

எனக்கிங்கு ஏதுமிலை

18

நெடுநேரம்
நம் சொற்கள்
அங்குமிங்கும்
இங்குமங்கும்
ஓடியதில்
நாம் பேசிக் கொள்ளவில்லை

தனித்து
வரும் வழியிலொரு தொடுகை பேசிக் கொண்டோம்

19

காலைப்போது
உன் பிரகாரத்தில்
தினம் வந்து நிற்கிறேன்

தகிக்கும் வேளை
நோக்கித் தீரவில்லை
உன் நிர்வாணம்

அந்தியடைந்து
ஏக்கமும் துயரமுமாய்
வீடு திரும்புகிறேன்

திரை விழும் யாமத்தோ
வெளியெங்கும் களியாடினோம்

வைகறையில்
நாம் எழுந்தருள்வதென்னவோ
உன் கருவறை

20

இருளில்
தன்னை
இலையிலையாய்
சொட்டித் தீர்க்கிறது
மரம்

21

சப்பிய
உன் முலைகளை
நான் விட்டுத் தருவேனிலை

உன் காதற் காமம் பட்டு
ஆடிய என் குழைகளை
நான் நிறுத்துவேனிலை

மயிரடர்ந்த
நின் திருமேனிகண்
கண் எடுத்தேனிலை

முயங்கும் நம்மேனி
கண்பார்க்கும் ஆளையும்
நான் தடுத்தேனிலை

22

அற்புதமான கற்கள்
பார்க்க அரியது
என யாரோ பேசிக்கொண்டிருந்தனர்

அற்புதம் இலாத
கற்களையே
நான் இன்னும் பார்த்து முடிக்கவில்லை

23

காலதூரம் தள்ளி காத்திருக்கும்
முடிவிலிக்குத் தின்னக் கொடுக்க
இந்த மரத்தின் கனி
மரமும்
கனியுமாகிச்
செல்கிறது

24

வாக்கிங்
என்ற வார்த்தை

உன் வாலை
இப்படி ஆட்டுமென

காற்றில்
உன்னை
இப்படித் தூக்கிச் சுழற்றுமென

சொல்லும் முன்பே
நான் அறிவேன்

25

ஒன்றன்பின் ஒன்றாக
வண்டிகள்
பிதுக்கி வைத்த பின்பும்
சாலையில் சக்கையாக
இனித்துக் கிடந்தது
ஓர் உடல்

26

விளையாட எனை அழைத்தாய்
குளிக்க வேண்டுமென்றேன்

குளித்து விளையாடுவோம் என்றாய்
அழுக்கான பிறகே
குளிக்க வேண்டுமென்றேன்

அப்படியானால்
அழுக்காகி விளையாடுவோம் என்றாய்

வேண்டுமென்றே
உன்னோடு
விளையாடி கொண்டிருந்தேன்

27

காற்று பட்டு பட்டு
முனை மழுங்கியது
என் காகித ராக்கெட்

அதன் பிறகு
அது யாரையுமே இடிக்கவில்லை

எங்கேயும்
முட்டி நிற்கவுமில்லை

28

எந்தப் பல் விழும் முதலில்
ஆட்டின் குளம்படியில் போட்டால்
ஆட்டின் பற்கள் வளருமெனக்கு
மாட்டின் காலடியிலும் இரண்டு போடுவேன்

பற்கள் அனைத்தும்
உதிர்ந்த பிறகு
முன்னிரண்டு பற்களை மட்டும்
எங்கும் விழாமல்
பார்த்து கொள்வேன்

யாருமறியாமல்
முயலோ அணிலோ ஆகும்
என் முகம்

29

ஆகாயத்திற்கு அப்பாலிருந்து
உலகின் முன்
பறந்து வந்தவொரு
குருவி இட்டது
இந்தக் கூழாங்கல்

30

சிறு விளக்கொன்றைப்
பொருத்தி வைத்தபடி
நிலத்தில்
தூங்காது
கண் விழித்திருக்கிறது
கிணறு

31

‘ஆடு’ என அடித்தேன்
பிரிய மனமில்லாமல்
ஆட்டை ஒட்டி நின்றது
ஒரு கோடு

‘கல்’ என அடித்தேன்
ஆட்டிலிருந்து
ஒரு கல் தொலைவிலிருந்தது
கோடு

இடைவெளியின் ஒரு அழுத்தில்
அங்கு வந்து நின்றது
ஒரு டைப்பான ‘ஆடுகள்’

32

ஓய்ந்தவொரு வேளை
எங்கும் களி அமைதி

குரலெடுத்து இசைக்கிறேன் நான்

குரல் தீர்ந்து
மீண்டுமொரு துளி அமைதி

கதறலெடுத்து இசைக்கிறேன் இம்முறை.

கதறலோயும் தருணம்
பெருங் கருணையெடுத்து இசைக்கிறேன்.

எல்லாம் ஓய்ந்தது.
இனி எடுக்க தேவை ஏதுமிலாது
முகிழ்த்தது அது.

33

ஓடிக் கிடந்ததோர் மேனி
கூடிச் சுடர்ந்ததோர் மேனி

கருநீலப்பச்சைக்காலம்

வண்ணக் கலந்ததுவோ
வடிவக் கலந்ததுவோ
மாசும் மணிதிகழ் தூசும்
மண்ணு கலந்ததுவோ

வற்றாத உன் வாணி.

34

ஞாலப் போந்தாயோ
அடர்வானில்
தொலையப் போந்தாயோ

நேரமிதென
மறக்க போந்தாயோ

தூரமிதென
தூங்கப் போந்தாயோ

பசுங்கிணற்றின் பாழ் அடியில்
எனை காணப் போந்தாயோ

காலை வந்ததென் கோவே
கதிர்காமங் கொண்டு
எனை தீண்டப் போந்தாயோ

35

வெட்டவும்
தப்பியோடவும்
தேவையில்லாத ஒரு சதுரம்
கருப்பு
வெள்ளை
நிறத்திலிருந்தது அக்களத்தில்

36

ஒளி கண்டு
என்
கண்ணில் விழுந்தாய்

நான்
வெறுமனே
கண்ணீர் மல்கினேன்

37

நான்
நதிக்குப் போனேன்

கால் நனைத்து
உலாத்தினேன்

இடைவரை நதியில்
இருகை அள்ளி வீசி விளையாடினேன்.

திடீரென ஒரு முழுக்கு.
சிலிர்த்தெழுந்து மீண்டும் முழுகினேன்.

துடுப்புகள் போட்டபடி
நீந்தினேன்.

ஒரு பாறை இடுக்கில்
வெறுமனே
படுத்துக் கிடந்தேன் வெகுநேரம்.

எழ வேண்டியதில்லை இனி
நதி நான்.

38

விளையாட ஆளிலாமல்
தனித்துச் சென்றேன் ஆற்றிற்கு

இறங்கியதும்
நீரை வாரி
ஆற்றின் மேல் அடித்தேன்

அதுவோ
அடவாதமாக
குப்புற படுத்துக் கிடந்தது

ஒரு சிறிய ஆற்றைத் தூக்கி
ஆற்றில் போட்டேன்.

சலாரென திரும்பி
என் மேல்
ஆற்றை வீசி அடித்தது ஆறு

39

நான் கறுப்பாயிருக்கிறேன்
என்று பாராதேயுங்கள்
வெயில் என் மேற்பட்டது

எமது நிழலே உமது கூடாரம்
மத்தியான வெயிலில்
உமது மந்தையை
என் அண்டையில் மடக்குவீராக!

ஏதெனில்
மேய்ச்சலிடத்தில்
உம்மைத் தேடி அலைய முடியாதபடி
நிற்கிறேன் நான்

நும்மையும்
நமது மந்தையையும்
நாம் இளைப்பாற்றித் தேற்றுவோம்

மாரிக்காலம் போன பின்
மண்ணில் எழுந்த
மரு தோன்றி மலர்க்கொத்து
நான் உமக்கு

எமது அறைகளுக்குள்
உம்மை அழைத்துச் செல்வோம்
எம் அடியே அதன் தூண்கள்
இலைவேய்ந்த எம் கிளைகளே அதன் கூரை

தரையினில்
நீவீர் தலை சாய்க்க
எமது தனங்களை உமக்குத் தருவோம்

தோழர்களே
என்னில் அவர் களிகூர்ந்திடும் வரை
யாரும் அவரைத் தட்டி எழுப்பாதீர்
இது என் மேல் ஆணை

40

அம்ம!
பைதல் பசுஞ்சுடர் ஏற்றி
கண் வளர்க்கும்
மண்ணில் குழித்து
நாம் மஞ்சஞ் சேர்த்த
கதலிக்கன்று

41

வெண்ணிற ரப்பர் கொண்டு
அழி அழி யழியழி என அழித்தேன்
எனை நான்

அழித்த பிறகு
என்மேல் கிடந்தது
அவ்வளவு அழுக்கு ரப்பர்

ரப்பரில் ஒட்டியிருந்தேன்
ஒரு துளி நான்

42

என்பு இலாத எனை
காய்கிறது உன் கீதம்

எனை தாங்க மாட்டாமல்
இன்னும் வருகிறேன்
உன் கீதமருகே

உன்னிடம் வந்ததும்
உனை காயும் வெயிலைக்
காட்டுகிறாய் எனக்கு

43

முலையும்
குழலும் நானும் கொண்டேன்

குழையும்
கழலும் நானும் கொண்டேன்

உனையும்
எனையும் நானும் கொண்டேன்

வரவும்
போக்கும் நானும் கொண்டேன்

அளவும்
அதிலாத
களவும் நானும் கொண்டேன்

ஆலம்
காலம்
ஆலாலம் நானும் கொண்டேன்
ஆம்
நானே கொண்டேன்

44

மேலிருந்து
ஆண்டனாவைத்
திருப்புவது மட்டுமே என் வேலை

கீழிருந்து வரும் குரல் கேட்டு
நிறுத்துவேனே அன்றி
ஆண்டனா வேலை செய்யும்
ஆகாயப் புள்ளியை
நான் அறிவதில்லை

இறங்கிச் சென்றால்
அவர்கள் கண்டதெதையும்
நான் காண்பதுமில்லை

ஆயினும்
நான்
அங்கே நின்றிருக்கிறேன்

45

சூது பவள மேனி
சுடர்ந்தெரியக் கண்டேன்

காதம் கோடி
ஆங்கோர்
கருணை காயக் கண்டேன்

ஏது பாதமென ஏங்கி
வானே திரியக் கண்டேன்

கண்டேன்
அல்லேன்
கண்டேன்
அல்லேன்
கண்டேன் அல்லேன்
ஊஞ்சலொன்று
ஓயாது ஆடக் கண்டேன்

அல்லேன் கண்டேன்
ஆட்டுமுன்
கை ஆடக் கண்டேன்
அல்லேன் கண்டேன்
என்னிரு
கண்ணாரக் கண்டேன் (நிறைவு)

பிற தொகுப்புகளை வாசிக்க