1

ஏதென்று அறியாமல்
அழ ஆரம்பித்தபோது
செய்த பிழைகள்
ஒவ்வொன்றாக
என்னிடம் வந்தன

இத்தனைப் பிழைகளா?
நான் பார்த்ததேயில்லையே?

உலகில் உள்ளோர்
உலகில்
ஒரு அவரச வேலையென
அவர்கள் பிழைகளையும்
என்னிடம் விட்டுச் சென்றனர்

அவர்கள்
மனம் திரும்பி வரும் வரை
இந்தப் பிழைகளை
அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
நான்

2

அமர்ந்த உன் கோலம்
கண்ட பிறகு
எனக்கு வேறு நினைப்பில்லை

உலகை மறந்து
ஒளிந்து வருகிறேன்
உன் அருகே

உனக்கு முன்பே
உன் முலைக்கண்
ஏறிட்டுப்
பார்த்து விடுகிறது
என்னை

அதற்கு முன்பே
தொட்டறிவேன் நானதை.

3

தோல் துடித்தேன் நான்
அறுக்கப்படும் என் தலையை எண்ணி

கண் அலைந்தேன் நான்
அறுக்க வரும் ஆளை எண்ணி

கால் உலைந்தேன் நான்
முடிவுறும் ஒன்றை எண்ணி

குருதி ஓடி முடிக்க எண்ணி
என்னில் அமைந்தது நான்

4

உன்
நிலத்தை பார்த்துக் கொள்ள
எதிரியை செறுத்து நிறுத்த
இணையை கண்டு சொல்ல
அந்த மரத்திற்கு
நீ
ஓடிப்போய்
ஊற்றி வருவதென்னவோ
ஒரு
சிறு நீர்


5

கோடைக்கால இரவின் மழையால்
பனித்த ஒரு காலை

பறவைகளின்
கீச்சொலியை ரசித்தவாறு
ஒன்னுந் தெரியாமல்

என்பிலதனைத் தேய்க்க
தன் வண்டியை எடுக்கிறது
அறம்

6

கட்டி எழுப்பினோம்
நம்மை
ஒட்டி தழுவினோம்
நம்மை
கிட்ட நெருங்கினோம்
நம்மை
எட்டி எய்தினோம்
நம்மை
திட்டி விலக்கினோம்
நம்மை
எட்ட ஏங்கினோம்
நம்மை
மீண்டுங்
கட்ட துவங்கினோம்
நம்மை

நம்மை னோம்
நம்மை

7

கிடத்திய கை
தொட்டிலைத் தொட்டபடியே கிடந்தது

பால் துளித்த கை
வாயில் இட்டபடியே கிடந்தது

சர்ப்ப கருமேனி
வானை வளைத்தபடியே கிடந்தது

கிடந்த என் மேனி
கிடந்தபடியே கிடந்தது

8

நீரே
கழுவி எடுப்பது
அழுக்குகளை

நீரே
அழைத்து செல்வது
அழுக்குகளை

நீரே
கடலில் சேர்ப்பது
அழுக்குகளை

நீரே
தூய ஆவி யாக்குவது
அழுக்குகளை

9

சூனியத்திலிருந்து
ஒன்றுக்கு வர
அது
எவ்வ்வ்வ்வ்ளோ
தண்ணீர் குடிக்க வேண்டும்

10

நிற்பதுவும்
நகர்வதுவும்
நடப்பதுவும்
பறப்பதுவும்
வாழும் வீட்டில்
நான்
வரும் வழி இருக்கிறது.
வரும் வழியில் தான்
என் வீடுமிருக்கிறது

11

அடைக்கப்பட்ட
போத்தல் தண்ணீரிலிருந்து
மெல்லத் தலை காட்டுகிறது
பசிய குளம்

12

பார்த்தாகி விட்டது
மங்கலான இப்பசுங்காட்டை

உற்சாகம் கொப்பளிக்கும்
இந்த மாலை இருளில்
நமக்கு வேண்டியிருக்கிறது
சிறிது சிறிதான
நிறைய
மஞ்சள் வெளிச்சமும்
யாரும் யாருடனும்
பேசும்
சிறிய சத்தமும்

13

இப்போதைக்கு
உன் உடலிலேயே இருக்கட்டும்
அந்த வால்

உறைந்து நின்ற
உன் முன் வந்ததும்
நானதை ஆட்டுகிறேனே

14

நான் அழித்த வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

நான் காத்த வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

நான் பெற்ற வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

என் வல்லதும் கண்டு
அச்சங் கொண்டேன்

15

நம்
அழுக்குகள்
வாழ விரும்புகின்றன

கண்ணில் படாமல்
அகற்றி வைக்கப்படும் போதும்
அவை
தேர்ந்தெடுப்பது
நாமறியாத நம் இடுக்குகள்

அவை
நம்மைவிட்டு விலகுவதுமில்லை
நம் கை விடுவதுமில்லை

16

வானம் உனக்குரியது

பெருங் கண்ணாடி ஜன்னலில்
நீ வந்தமரும் வானமும் உனக்குரியது

உனக்குப் போக
மீதமிருக்கும் வானம் அத்தனையும்
எனக்குமுரியது

17

தண்ணீர் குடித்துச் சென்றன
இரு அணில்கள்

இம்முறை
தன்னைக்
குளமென நினைத்து
பொங்கிப் பிரவாகித்தது
வெஸ்டர்ன் டாய்லட்

18

தன்னை மறந்து போயிருந்த
பெரிய கண்ணாடியில்
கண்ணாடித் தனத்தை
கண்டு கொண்டது
குட்டிக் கண்ணாடி

ஓர் அபூர்வ கணத்தில்
குட்டிக் கண்ணாடியில்
தன்னைப்
பார்த்து விட்டது
பெரிய கண்ணாடி

19

இறப்பை
நான் விளையாடி பார்த்தேன்

சுளுவில் முடிந்து விடுமாயினும்
நீட்டி வெகுநேரம் களித்தேன்

வீடு அடைந்த என்னை காணாது
அழுது ஆற்றி நின்றனர் சுற்றோர்

களைப்பில் மீண்டும்
நான் இறப்பைத் தூங்கிப் பார்த்தேன்

20

மரத்தில்
சல சலத்து
மிதந்தன இலைகள்

சத்தங் காட்டாமல்
ஆகாயத்தில்
ஓடிற்று ஒரு நதி

21

எங்கு செல்வதென அறியாமல்
தன் கைப்பிடிக்க ஆளிலாமல்
சாலை கடக்க முடியாமல்
முன்னுக்கு ஒரு தூரம்
பின்னுக்கு ஒரு தூரம்
தத்தளித்தது
யாரோ விட்டுச் சென்ற
ப்ளாஸ்டிக் பை

22

வறியார் நிலத்தில்
கண்டதும் கழிதும்
பூத்து மிதந்தது
மடவார் குளம்

23

தன்னை
பாதங்களில் வைத்து
நடமாடுகிறது
இவ்வுலகம்

24

ஏய்
கீச்சுக்குருவியே!
நேற்றிரவு
உனக்கும் மழை
எனக்கும் மழை

25

3 x 3 புள்ளிகளின் மேல் நகர்த்தி விளையாட
ஆளுக்கு 3 கற்கள்

உன் கற்களை
உன்னிடத்தில் வைத்தாய்
என் கற்களை நான்
என்னிடத்தில்.

நம்மிருவர் கற்களும்
நம்மிருவர் நேர்கோட்டில் இருந்தது

நம்மருகே ஒரு நேர்கோடு
நேர்கோடில்லாமல் காத்திருந்தது

26

உள்ளே செல்ல
பூட்டியிராத கதவை
திருகி திருகிப் பார்த்தது
சாவி

வெளியே வர
அடம்பிடித்து நின்றது
தாழ்

27

கண்ட இடத்தில்
கழட்டி போடுவதற்கென்றே
பாம்பு போட்ட சட்டை ஒன்றை
வீட்டில் வைத்திருக்கிறேன்

28

மரத்திற்கு இலை
இலை
மரத்திற்கு வேர்
வேர்

மரத்திற்கு மரம்
மரம்

29

மழை வந்ததும்
மரத்திற்கு
ஓடின உயிர்கள்

மரம்
மரத்திற்கு
நின்றது

30

குடைக்குள்
என் இடை வரை இருந்த
உனக்காக
உன் தலை வரை குனிந்து
குட்டியானேன்

வெளியிருந்த அனைத்தும்
கூடவே குனிந்து
குட்டியானது

31

புத்தம்புதிதில்
உன்னை
சேய்மையில் நின்று பார்த்தேன்

நாட் செல்ல
அண்மையில் நின்று பார்த்தேன்

அன்றொருநாள்
உன் அடியில்
நாமிருவரும் நின்று பார்த்தோம்

பிறிதொருநாள்
அவரவர் இடத்தில்
அவரவர் மரமாக நின்றோம்.

32

எங்கிருந்தோ வந்த
குருதியின் மேல்
ஒரு குருதி முளைத்தது

கிளைத்துப் படர்ந்து நின்ற
அதனடியில்
குருதி முளைக்காமல் பார்த்துக்கொண்டது

அக்குருதிமேல்
எங்கிருந்தோ வந்து விழுந்தது
முளைக்குமொரு
துளியினும் துளி
பசுங்குருதி

33

மரம் போலாவர்
மரத்தின் அடி
அமர்ந்தவர்
நின்றவர்
போனவர்
வந்தவர்
புணர்ந்தவர்
அருந்தவர்

34

ஓசையில்லாமல்
கைகள் குவித்து
உடல் குறுக்கி
ஓர் ஓர் அடியாக
கால் வைத்து
விருட்டெனப் பறந்தது
நாம்

35

கம்பி வேலியின்
கண் வழியாக
இங்கும் அங்கும் சுமந்து
அங்கும் இங்கும்
பறந்து கொண்டிருந்தது
ஒரு பூச்சி

36

நம்
சந்திப்பு புள்ளியில்

நீ
காத்து நின்றதன்
எச்சம்
பறந்து சென்றிருந்தது

நீ
பறந்து சென்றதன்
எச்சம்
காத்து நின்றிருந்தது

37

அண்டையர்களிடம்
நீயும்
உன் கூட்டமும்
நெஞ்சு நிமிர்த்தி
இரு றெக்கை விரித்து
தத்தி தாவி
கீச்சலிடுவது
நீயல்லாதவர்க்கு
ஓர் ஜுகல் பந்தி

38

என்னோடு
விரிந்து நின்ற உனக்கு
தர முடிந்ததெல்லாமொரு
முத்தந்தான்


39

தூங்கிவிட்டதென
நடிக்கும் இலையில்
தொட்டால் சிணுங்கி எழுகிறது

40

ஆக்கவும்
காக்கவும்
நானிங்கு வந்திலேன்
நோக்கவும்
களிக்கவும்
நானிங்கு வந்திலேன்
அசைக்கவும்
அழிக்கவும்
நானிங்கு வந்திலேன்
ஆற்றவும்
அழுகவும்
நானிங்கு வந்திலேன்

இங்கிருந்தேன்
நானிங்கு வந்திலேன்

41

இவ்வுலகைக் காத்தேன்
இவ்வுலகம் கொன்று புசித்து
இவ்வுலகைக் காத்தேன்
இன்றில்லேல் அன்றில்லேல்
இவ்வுலகம் கொன்று புசிக்கவென
இவ்வுலகைக் காத்தேன்

42

விரிதிரு
மண்ணும் அல்லேம்
சூழ்திரு
வானும் அல்லேம்
காற்றும் அல்லேம்
கனியும் அல்லேம்
சொல்லும் அல்லேம்
சுடரும் அல்லேம்
என்னும் அல்லேம்
உன்னும் அல்லேம்
ஏனிந்த பாடோ அம்மா
அல்லல் அல்லேம்

அல்லேம் அன்றி
வேறேதும் அல்லேம்
அல்லேம் அதுவும் அல்லேம்

43

நம்
தோல் நம்மைத் தழுவியது
நம்
தோல் நம்மைத் தடைத்தியது

நம்
தோல் நம்மைப் போர்த்தியது
நம்
தோல் நம்மைக் குளிர்த்தியது

நம்
தோல் நம்மை தோல் துளைத்தியது

44

வெளி மீபெரிது
குருவி நாம்
இங்கு வந்தோம்

காடு விடுத்து அதில்
சிறு வீடு செய்தோம்

வீடு விடுத்து அதில்
சிற் றகம் செய்தோம்

அகம் விடுத்து அதில்
சிறு சேக்கை செய்தோம்

சேக்கை விடுத்து அதில்
சிறு கூடு செய்தோம்

குறுகிப்படுத்து அதில்
சிறு குருவி ஏய்தோம்

45

வீட்டுக்கும் ஆகாயத்திற்கும்
ஓர் ஊஞ்சல்
அன்றாடம் ஆடி வருகிறது
என் குருவி

வீட்டில் வீடோ
ஆகாயத்தில் வீடோ
அறியேன் நான்

என் செய்வேன்
இன்றெங்கும் திரும்பவில்லையே
என் குருவி

46

தாகமெடுத்துப் பறந்தது
ஒரு சின்னக் குருவி

குடிக்க ஒரு சொட்டு இல்லாமல்
அந்தரத்தில் அங்குமிங்கும்
அழல்ந்தாடியது

அனிச்சையாய் திறந்த
அதன் அலகில்
இனித்து அமைந்தது இவ்வெளி

47
கைமாறி கைமாறி
என்னிடம் வந்தேன் நான்

என் கையிலிருந்தது
அத்தனை ரேகை

48

தாள மாட்டாமல்
என்னை கொஞ்சம்
குறைத்து வைத்தேன்

மௌனம் தாழாமல்
என்னை கொஞ்சம்
கூட்டி வைத்தேன்

வைத்து வைத்து
வெந்து தணிந்து
என்னை கொஞ்சம்
என்னை வைத்தேன்

49

சக்கர பொய்கையில்
நீராடி வந்திருந்தேன்

கரையணையும் இடம்
அறியவே
நீராடி வந்திருந்தேன்

நின்ற இடத்திற்கே
நீந்தி வந்திருந்தேன்

நீந்தி வந்த இடத்திலெல்லாம்
நின்று வந்திருந்தேன்

50

தணிந்த மென்பஞ்சு
சேக்கை
உன் தனம்

குனித்த செஞ்சாந்து
நிறக் குருவி
நான் அங்கே

பறக்க அறிகிலேன்
பசியும் மறக்கிலேன்

உண்டு உண்டு
உன் சூட்டில்
கண் வளர்த்தேன்

சிறகு விரிந்த அவ்வேளை
உடல் உந்தி
ஆகாயமடைந்தேன் நான்


51

கொய்மலர்த் தேவும்
கொங்கை மலர் கருங்காம்பும்
கொப்புள் தேக்கிய எச்சி நீரும்
முத்தி முத்தித் தூக்கினேன்
போதவில்லை போதவில்லை
எனக்கிது போதவில்லை

அன்றலர்ந்த அல்குல் முடியும்
மன்றுமணி சென்றுவருங் காலடியும்
தொன்று தொட்டு
சேர்ந்திலங்கிய பிட்டமும்
திங்கள் தொறும் குன்றிவரும் அட்டமும்
அணைத்து அணைத்துச் சேர்த்தேன்
நிறையவில்லை நிறையவில்லை
எனக்கெதுவும் நிறையவில்லை

மொத்தங்கண்டு
மொந்தமளந்து
மொத்தஞ்சூழ்ந்து
மொத்தம்விடுத்து
மொத்தம் தீர்ந்தன்றே ஆயினும்
நிறையவில்லை நிறையவில்லை
இங்கேதும் நிறையவில்லை

52

மீச்சீக்கிரம்
கொல்லப்படுகையில்
மீச்சீக்கிரம்
பிறக்கின்றன
மீச்சீக்கிரத்தில்
மீச்சீக்கிரம்
வாழ்கின்றன

53

கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்
கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்

எங்கிருந்து வருகின்றன
எறும்புகள்

கால ங் கால மாய் கால ங் கால மாய்
கால ங் கால மாய் கால ங் கால மாய்

54

சர்ப்ப புஜங்களின் மேல்
சாய்ந்தாடும் கூந்தற்குழவி நாகம்

முலையினின்று
கருநாக்கு நீட்டி நிற்கும் நச்சரவம்

அஞ்சுதலை விரித்து
முத்தாடும் கைபுஜங்கம்

வீரிய விடம்
சுருண்டு படுத்துறங்கும்
ஈரங்காந்தும் மணிப்பூரம்

இடையில் பத்தி விரித்து
சிவக்கும்
பாதாள ரூபம்

இவ் ஆலம் மேல்
கொடி சுற்றி அமுது கோத்து நெரிக்கும்
என் கால கால களிமாநாகம்

55

வானும் நீரும் அற்று
அல்லால்
அறமின்றி அமையாது
அறம்

56

குழிக்குள்
குழிக்குள்
இருந்ததொரு
குழி காணா குழி

அங்கிருந்து
வெளி வெளியாய்
வெளி வெளியாய்
வெளிவந்தது வெட்டவெளி
57

உன் இடை வனைதியோ
உன் குழல் திருப்புதியோ நங்காய்

உன் கைகள் புனைதியோ
உன் புவனம் முழுதியோ நங்காய்

எரிமேல் வந்து மருட்டுதியோ
உரிமேல் வந்து உருட்டுதியோ நங்காய்

ஊஞ்சலாடும் உன் பாதம்
ஊறு உற்றால் நோகுதியோ நங்காய்

பேஞ்சலாடும் என் பிரேமை
பெய்யென பெயக்கண்டு சாகுதியோ நங்காய்

கண்ட நாள் முதல்
பேந்த பேந்த விளிக்குதியோ
ஊந்த ஊந்த விலக்குதியோ நங்காய்

நுனி மென்ற நாவினன்
சொல்ல ஒரு சொல்லுண்டு

நங்காய்

58

புள்ளி புள்ளியாய் விழுங்கி
பாம்பானது
புள்ளி

பாம்பாக பாம்பாக
நெருங்கி வந்தது
பாம்பை பாம்பு விழுங்கும்
புள்ளி

59

தலை அறுபடும் முன்
வானை பறந்து பார்த்தது
ஒரு மீன்

விழுந்ததும்
உவந்து
தன் தலை அளித்தது
அத்துனூண்டு வானம்

60

செல்லஞ் சிறுகிளியே
அல்லம் உன் அடியேன்

துஞ்சித் துயில் எழுமதியே
இல்லம் உன் அடியேன்

பிஞ்சிப் பிறிதறியா களவே
அல்லம் உன் அடியேன்

கன்னி காதற் செவ்வியே
இல்லம் உன் அடியேன்

உன்னி உலகு அளவே
அல்லம் உன் அடியேன்

அம்மி ஆமடி அருவே
இல்லம் உன் அடியேன்

அடியே அடியே
உன் அடியே..ன்

61

கால் தூக்கி நீ வைத்திடும் போதில்
அவன்
கோல் தூக்கி கொன்றிடும்

இடை ஓய்ந்து நீ நின்றிடும் போதில்
அவன்
சடை தோய்ந்து தண்றிடும்

அவன்
பிறை காய்ந்து வன்றிடும் போதில்
உன்
நிறை மாந்தி சென்றிடும்

தனமொடு தாங்கி நிற்கும்
நின் கரிவேழ ஆடம்
அவனொடு ஆடி நிற்கும்
நின் சிறுங்கன்னி கோலம்

காட்டி காட்டி
கண் நிறையுஞ் சிறுக்கி
அவன் அறிவேன் நான்
அவன் அல்லோ நான்

62

இன்னில் இன்றில் இம்மை
எந்தே விளித்து
கன்னி உனக்கு ஊசலாட்டு

ஐய
கண் மலைக்கும் உம்மை
கண்ணேறு கழித்து
கண்ணே உனக்கு ஊசலாட்டு

தும்பு இலா பரிபாதம் ஆடுதன்றே
மண்ணேறு கழித்து
மருவே உனக்கு ஊசலாட்டு

புடவி பொய்க்கும் அரு அழகன்றே
புவியேறு கழித்து
கன்றே உனக்கு ஊசலாட்டு

கொன்னை வாய் ஊதுங்குழலன்றே
என் ணேறு கழித்து
பொன்றாய் உனக்கு ஊசலாட்டு

எம்பும் என்னுயிர் சுமந்தலைதினோய்
எம் நெஞ்சஞ்சேர்த்து
ஊசலே உனக்கு ஊசலாட்டு

எம்பாவாய் எய்ய
விய்யென்றவளை விண்ணிலிருத்தினோய்
எங்கொஞ்சல் சேர்த்து
களிகாற்றே உனக்கு ஊசலாட்டு

அங்கிருந்து அவளை இங்களித்து வைத்தினோய்
வெளி எங்கெங்கும் சேர்த்து
விண்ணாழியே உனக்கும் ஊசலாட்டு

63

எம்மோ மூச்சில் விளித்தோம் நுமை
உயிரிலினி உடல் நிக்க ஒன்னுமோ

அம்மோ வாச்சொல் பாடினோம் நுமை
வாயிலினி ஒருவாய் உண்ண ஒன்னுமோ

ஊசல் தொட்டு ஆட்டினோம் நுமை
எந்தோளிலினி நும்கை நிக்க வாருமோ

காலொடு கால் வைத்து ஆடினோம்
கால் இனி மண்ணில் வைக்க ஒக்குமா

பொம்மோ
பெருவெளி நிறைய வைத்தோம் நுமை
விசும்பிலினி வெளி நிக்க ஒன்னுமோ

மதலை எனத் தேடிவருவோம் நும்முலை
ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா