1

வெறும் அழகை
வைத்து வைத்து
நிறைத்தேன்

உண்ண ஒரு பருக்கை
உனக்கு நான்
கொண்டு தாராத பொழுது

2

தனித்தமர்ந்திருக்கும் உனக்கு
ஏதேனும் தர வேண்டுமோ நான்
வலு ஒழிந்த கைகளெனக்கு

ஒருவேளை
விரும்பி நீ கேட்டால்
ஒரு சீக்கை அடித்துக்
காண்பிக்க முடியுமோ என்னவோ?

3

பொங்கி வரும்
சுடர் சோதியே
சொல்லொன்று தாராயோ

காலத்திலிருந்து காலத்திற்கு
பொங்கி வரும்
பெம்பொய்கையே

சொல்லிலிருந்து சொல்லுக்கு
சொல்லிலிருந்து சுடருக்கு
வழி சொல்லாயோ

சொல்லோய்ந்து
சுடரோய்ந்து
உயிருயிராவது
எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?

4

இவ்வாழி உயிர் உனக்கு
அளித்ததென்ன
அறிய வேம் நான்

ஆதியாதி உயிர் உன்னிடம்
பெற்றதென்ன
பெறிய வேம் நான்

உனை உசாவ வந்தேம்
ஈயாமலெங்குஞ் செல்ல ஒப்பேம்

உனை ஆக்கிய காலம்
அனுப்பியிங்கு வந்தேம்
எனை ஆக்கிய யாம்
அறிந்தளித்தே செல்வேம்

5

கூத்தி விண்கூத்தி
வினை வனையும்
குயவனொடு முயங்கிச் சிரிக்கும் கூத்தி

நினதாட்டம் அறிவேன்
நின்ற சோதி நின் உருவ நிழலறிவேன்

இயம்ப கொடிதெனினும்
இயம்புலதறிவேன்
வல்வினை எனக்கு வனையத் தெரியினும்
உனை ஓம்புதலறிவேன்

அறிவேன் அறிவென்று ஏதேதெனினும்
அறியாதலறிவேன்

6

வந்த காலம் முதல் கை ஏந்திவிட்டேன்
வைக்க இங்கே உள்ளதென்ன

மண்ணை என் குருதி என வைத்தாய்
குடித்துப் பொறுத்தேன்

வளி என்வளை அறுக்கும்படி வைத்தாய்
வாழந்து பொறுத்தேன்

வெளி என் தலை சுமக்கும்படி வைத்தாய்
நின்று பொறுத்தேன்

ஊழ் கொண்டு வந்தேன் இம்முறை
பாழ் கொண்டு போவேன் இம்முறை
பசி பொறுக்கேன்
வைத்துக்கொண்டு வைத்திளிக்கும்
நெஞ்சங்குலை பிய்தெடுப்பேன்
ஏனாதி காலம் ஏந்திய கையில்

7

கொலை உருவே

குலுக்கி வரும் உன்
கொம்பில் குந்தியிருந்தது துளி குருதி
சிலைத்து வரும் உன்
காதில் தப்பியிருந்தது துளி குருதி

அறிக நீ
என் நெஞ்சத்தின்
அத்துளி போதும்
உன் காதில் திமிறிப் பேச
உன் கொம்பில் அமர்ந்து ஆள

8

எப்போதுமே

சூல் இருள் நெரிக்கிச்
சரிகிறது என் விந்து

இருள் பிறப்பிக்கிறது
இருள் பிறப்பிக்குமிருள்

செத்தவிந்து
எங்கோ முளைக்கிறது
சூல் அறுத்துக் கொட்டும் சூல்

9

கழுமாடத்தின் அம்பு
உய்ந்து உய்ந்து
தேடியது ஆகாயத்தை

அதை மறைத்த வலியில்
என் உடல் வற்றிச் சோர
ஒருநாள்
இருவருக்கும் திறந்து கொண்டது
நாங்கள் போய்ச் சேர வேண்டிய
ஆகாயம்

10

நச்சு தோய்த்த அம்பொன்றை
விழுங்கினேன் சிறு வயதில்

வெளி எடுக்க முடியாமல்
அரற்றிக் கொண்டேயிருந்த அம்பு
போக்கிடம் அற்றுப் போகாமலிருக்கவே
என்னுள் வைத்திருந்தேன் நான்

11

நீல நிற விடம்
எனக்கு மிக விருப்பம்

வயிறு நிறைய
உண்டு பசியாறிய பிறகும்
நடுசாமத்தில்
மீண்டும் அதை உருட்டுவேன்

12

அழியக் கடவதாக

சொல் மீதமர்ந்த
சொல்

கல் மீதமர்ந்த
கல்

தொல் மீதமர்ந்த
தொல்

அழியக் கடவதாகுக
அழியக் கடவது

13

உன் கோல் வந்து
கொட்டும் முன்பே
அதிரும் ஓசை எழுப்புகிறது
என் தோல்

அடித்த போதோ
இன்னிசை

14

தன் தோலையே இசைத்து
ஆடும் இவ்வுயிர்
எந்த வாத்தியம்?

15

குருதி வாற
ஆருனை அடித்தாரோ
நீ உறங்கத் தாலே லோ

முகமும் வாட
ஆருனை ஏசினாரோ
நீ உறங்கத் தாலே லோ

மனமுங் கூச
ஆருனைப் பேசினாரோ
நீ உறங்கத் தாலே லோ

குரவளையில்
ஆருனை அறுத்தாரோ
நீ உறங்கத் தாலே லோ

இதெல்லாம் எப்படிதா செஞ்சாரோ
செஞ்சதும் எங்க போய் நின்னாரோ
ஏழ மனம் அவருந்தூங்க தாலே லோ

தாலே லோ

16

இல்லும் இருப்பும் அல்ல
அம்மா
ஊண் ஊட்டுதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

அறமும் மறமும் அல்ல
அம்மா
ஊஞ்சல் ஆட்டுதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

சொல்லும் திறமும் அல்ல
அம்மா
தால் ஆட்டுதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

நோவும் சாவும் அல்ல
அம்மா
துயில் எழுப்புதலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

உருவும் மருவும் அல்ல
அம்மா
கண் காணித்தலன்றி
வேறொன்றும் அறிந்திலேன்

வேறு ஒன்று இல்லை
அம்மா
வேறொன்றும் அறிந்திலேன்

17

அஞ்சுஞ் சுடர் எரியுதடி
சின்னஞ் சிறு எனக்கு
மிஞ்சுஞ் சிரிப்பு மீறுதடி
கள்ளங் கனி உனக்கு

துஞ்சுஞ் சுரம் தெரியுதடி
நெஞ்ச முழு தெனக்கு
மஞ்சனப் பொழில் ஆவுதடி
பிஞ்சு மலர் உனக்கு

விஞ்சுஞ் சரம் வீசுதடி
வைரத்தடி வில் எனக்கு
வஞ்சஞ் சீறி வருகுதடி
நஞ்சரவ விரல் உனக்கு

எஞ்சும் உயிர் ஊறுதடி
எரியுஞ் சீர் எனக்கு
தஞ்சஞ் சேர்க்க மறுகுதடி
தாயின் மார் உனக்கு

அம்மம்மா ஆரமுதே
வாய்த்ததடி உன்னிருப்பு
ஊடிவரும் என்னரசே
வண்ணமடி என்னிருப்பு

போதுமடி உன் களி களிப்பு
காந்துதடி என் துளி துளிப்பு

18

செல்லப்பேறு நீ எனக்கு
வாலில் ஆடும்
வண்ணக் குழவி நீ எனக்கு
நாவில் தொடும்
நல்ல தணுப்பு நீ எனக்கு
காணா போது
காத்திருப்பு நீ எனக்கு
என்னையே பார்த்திருக்கும்
கண்ணின் மணி நீ எனக்கு

கண்ணம்மா
என்னவெல்லாம் நான் உனக்கு???

19

காலமொரு
இசைக் கருவி செய்து பார்த்தது
அக்கருவி அடங்கிப் பார்த்தது
அக்கருவி அழுது பார்த்தது
அக்கருவி உறுமிப் பார்த்தது
அக்கருவி மௌனம் காத்தது
அக்கருவி அக்கருவி பார்த்தது
அக்கருவி இசைத்தது
எதையும் பார்க்கவில்லை

20

வெளியே வருக உங்கள் பாண்டங்கள்
நான் வந்திருக்கிறேன்
கொள்க என்னிடம்

வெளியே வருக உங்கள் பாடல்
நான் வந்திருக்கிறேன்
இசைக என்னிடம்

வெளியே வருக உங்கள் ஆனந்தம்
நான் வந்திருக்கிறேன்
கூடுக என்னிடம்

வெளியே வருக உங்கள் பாதங்கள்
நான் வந்திருக்கிறேன்
சேர்க என்னிடம்

வெளியே வருக உங்கள் வெளி
நான் வந்திருக்கிறேன்
வெளியே நம்மிடம்

21

தேய்த்து தேய்த்து
சாணை தீட்டியதில்
ஒன்று கூர்மையானது
ஒன்று கூழாங்கல்லானது

22

நாம்
வந்த வழியில்
செத்து மிதந்தன பாதங்கள்

செத்த பாதங்கள்
சுமக்க வேண்டியதில்லை
நடக்க வேண்டியதில்லை
பசிக்க வேண்டியதில்லை
சாக வேண்டியதில்லை

செத்த பின்
அவை வேண்டியதில்லை

23

என் இல் துடைத்து வைத்திருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

சிறு விளக்குச் சுடர் ஏற்றியிருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

மணல்மேடுகளைப் பார்த்திருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

ஞாயிறும் திங்களும்
என் தலை மேல் போட்டிருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

தேடாத இடம் தேடியிருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

தேடிய இடத்தில் காத்திருக்கிறேன்
இன்று உன்னைக் காணவில்லை

24

ஒரு பழைய வேட்டைக்காரன்
ஆக வேண்டுமென்றிருந்தேன்

மிகப்பழையவன்

உயிர்களும் உலகங்களும்
உண்டாகும் முன்பு
இங்கு வந்து தங்கியிருந்தவன்

தினமும் நான் அவனை
கனவில் காண்கிறேன்
அவனும்
எனக்காக அங்கு
பசியோடு காத்திருந்தான்

25

என்னுயிர்களே
உங்கள் இருபாதங்கள் தூக்கி
காற்றில் இருத்துங்கள்

பாத விரலொன்று மட்டும்
மண்ணுக்குத் திரும்பட்டும்
உடலும் உயிரும்
அத்து வானத்தில் அலையட்டும்

வெளியில் நிற்க
ஆடுதலன்றி
வேறு வழியுண்டோ உயிரே

26

இரந்து கொள்கிறேன்
ஈயாதிருக்கும் படி செய்

27

ஆடை களைய நேரமில்லை
உடலுயிர் வீசியெறி
அவன் முகத்தில்

கால காலத்திற்கும்
உன் இல் சுற்றி
அலைவான்

28

அங்கொரு பாதம்
இங்கொரு பாதம்
எங்கொரு பாதம்
ஏதொரு பாதம்
எங்கும் நிற்க வலுவில்லையே
எம்பெருஞ்சோதியே

படிய ஒரு
ஈர விளக்கு
ஈயும் எம்பெருஞ்சோதியே

29

ஆழிப்பொய்கையின்
நட்டநடுவே
எரிந்துகொண்டிருக்கும் திரி நான்

30

உஞ்சனை
ஓர் சொல் தாராயோ

வஞ்சனை
ஓர் சொல் தாராயோ

நெஞ்சனை
ஓர் சொல் தாராயோ

செய்தனை
ஏதும்
செய்திலனை யாம்
ஓர் சொல் தாராயோ

அஞ்சினை
ஏதும்
அஞ்சிலனை யாம்
ஓர் சொல் தாராயோ

ஓர் சொல் ஓர் சொல்
உய்வுறும் ஓர் சொல்
இரந்திலனை யாம்
ஈய்ந்தனை
ஓர் சொல் தாராயோ

31

உன்னை உனக்கு தூது வைப்பேன்
வேறாருமறிகிலேன்

ஏங்கல் எந்தோழி உன்மேல்
உன்னை உனக்கு கண்டுரைப்பேன்
வேறாருமறிகிலேன்

வரும்வழி கடுவெளி
உன்னை உனக்கு வழி கேட்பேன்
வேறாருமறிகிலேன்

அங்குமிங்கும் செலவு மீதூரம்
உன்னை உனக்கு கொண்டுசேர்ப்பேன்
வேறாருமறிகிலேன்

32

என்னில்
எடுத்து உண்ணுக
ஊன் ஒரு பருக்கை

என்னில்
எடுத்து தீட்டுக
என்பு ஒரு ஈட்டி

என்னில்
எடுத்து முடைக
நரம்பொரு யாழ்

என்னில்
எடுத்து மீட்டுக
தோலொரு ஓசை

என்னில்
எடுத்து நிறைக
என்னில்
எடுத்ததொரு நான்

33

திரியும்
தீயும்
அகலும்
நான்

இருளும்
ஒளியும்
சுடரும்
நான்

சோறும்
சோதியும்
சேருமிடமும்
நான்

பாழும்
பேறும்
ஒதுங்குமிடமும்
நான்

எம்பும்
நிறைவும்
எல்லாமும்
நான்

34

எங்கிருந்தோ ஒரு கை
மண் ஒரு கை
கல் ஒரு கை
காற்று ஒரு கை
நாம் ஒரு கை
வண்டு ஒரு கை
உருட்டியதில்
ஜாலியாய் உருண்டு வந்தது
வண்டுருட்டான் பழம்

35

தொட்டறிய ஏலாத
மலர் கமழ் தடம்
உன் பாதம் போன வழி

நடத்த ஏலாது
உடன் கமழுந் தடம்
நான் வந்த வழி

36

வெறுந்தீயில்
வர்ணந் திகழ் சுடர் வரைந்தினேன்

மரிக்குந்திரியில்
வன்னங் கமழ் சுடர் பொருந்தினேன்

அலையுந்தருவாயில் தேம்பியுந்தன்
கன்னங் கருஞ்சுடர் புகுந்தினேன்

திகழென திகழுமுந்தன் சுடர்
காணுமந்த
கண்ணுஞ் சுடர் இழந்தினேன்

தோற்றமோ காட்டிலனய்
தேற்றவோ வந்திலனய்
ஆற்றவோ இருந்திலனய்

ஏற்றி ஏற்றி எரிக்குமெந்தன் சுடர்
எனையே அறிந்திலனய்
தெற்றெதுவோ தெரிந்திலனய்
மற்றெதுவோ மறந்திலனய்
உற்றெதுவோ உறந்திலனய்

பெற்றெதுவோ பெற்றிலனய்
இற்றெதுவோ இரந்திலனய்
சுட்டுஞ் சுடரதுவோ
எட்டுஞ் சுடரெதுவோ
ஈயினும்
எற்றெதுவோ நிறைந்திலனய்

37

முதலில் கை பொத்தி
புத்தகத்திலிருந்த கரடிக் குட்டிகளை
வளர்த்த
நீ எடுத்துக்கொண்டாய்

பக்கத்தில் வளர்ந்திருந்த
ஜோடி நரிகளே
மிஞ்சியது எனக்கு

வரும் நாட்களில்
என் நரிகள்
குட்டி போடுமென்பதால்
உன் கரடிக் குட்டிகளையும்
சேர்ந்தே வளர்க்க முடிவு செய்தோம்
நாம்

38

விசும்பு வானம்
எம்மோடு
நிற்க கண்டோம் இல்லை

நீல நிறத்திடை
நாம் இருந்தோம் இல்லை

அகலும் நிலத்திடை
சூழ சுடர்ந்தோம் இல்லை

எங்கெங்கு காணினும்
சூறை
அங்கெங்கும்
நம் பாதம்
நின்றோம் இல்லை

ஆற்றியிருந்து
என் அடுத்த பாதம்
எடுத்தபோது
நம்மில்
நாம் இல்லை

39

எடுத்து வைத்த
என் ஒரு பாதம்
எங்கே
இவ்வெம்பாலை மண்ணில்?

உடன் ஒற்றி
நடக்க இன்று
ஒரு தடம் இல்லை

40

திக்கு அற்ற காட்டில்
நான்
என்னைத் துழாவினேன்

கைக்குச் சிக்கியதோ
கழண்டு கிடந்த
ஒரு கால் குறடு

41

ஏய்த்து எனை விட்ட வெளி மேல்
போய்த்துப்பினேன்

எச்சிக்கு
எங்கு போகும்
என் சுள்ளி

42

தனித்திருக்கத் தெரியுமோ
உனக்கு

கேடு கெட்டதே
வெறுங் கெட்ட வார்த்தையோடு
தனித்திருப்ப தெப்படியெனத் தெரியுமோ
உனக்கு

43

என் கொம்பிலும்
குளம்பிலும்
குத்திக் கிளறிப் பார்த்தேன்

உன் நெஞ்சாங் குருதியில்
நான் இல்லை

44

தலச்சன் எனக்கு
குட்டியெல்லாம்
வந்து முடிந்ததும்
என் குழியிலிருந்து
கடையாக
பிறந்தது
செத்தை நஞ்சு

45

தீம்புனல் தேக்கி நிறுத்தி
திவ்யம் பல செய்யாழி
அலை கொண்டுவாரும்
அமுதங் காணீரோ

அலகில் அலகு கோர்த்து
அஞ்சதற்கேதுமின்றி
அருந்தும் புள்குருவி
அமுதங் காணீரோ

புவியில் புவி சேர்த்து
புடவி நெய்தெடுக்கும்
கண்காணா கடைசல்
அமுதங் காணீரோ

தாலில் தால் வைத்து
உயிர் ஒன்றித்திருக்கும்
உண்ணும் ஊண்ஈர
அமுதங் காணீரோ

காற்றோடு செவி சேர்த்து
தினைவன புள்ளினம்போல்
நுழையும் நுண்ரீங்காரங்கோடி
அமுதங் காணீரோ

எம் தடந்தேரும் எம்மோரே
அடி அடிக்கு
அமுதங் கண்டு குடித்து
நிறைநெஞ்சம் நடந்தாளீரோ

எடுத்தது எடுத்தாளீரோ
மடுத்தது மடுத்தாளீரோ

புள்ளினங்காள் புவியினங்காள்
கல்லினங்காள் களியுயிரினங்காள்
கண்விசும்பும் விண்விசும்பின் வெளியினங்காள்

பல்லாண்டு பல பல்லாண்டு
பாதஞ் சீர் வைத்து
மண்ணில் இருந்தருளீரோ

ஓதம் ஓடும் உடற்பாதம் நின்று
பார் நடத்தும் பாழ்
அமுதம் பார்த்தருளீரோ

46

விண் தடம்மேல்
முதலமர்ந்த புள்
உனக்கு முத்தி

வன்முலை மேல்
முதலெழுந்த கண்
உனக்கு முத்தி

தண்அலை மேல்
முதலிருந்த நஞ்சே
உனக்கு முத்தி

கடை கடைந்து
கண்டெடுத்த அமுதே
உனக்கு முத்தி

ஊழ் கடந்தெனை
இங்குவைத்த எதுவோ
உனக்கு முத்தி

ஒன்றியிருந்து
ஒன்றை முதலெடுத்த
எனக்கு முத்தி

எனைச் சேர்த்த
நாமல்லார்க்கும்
முத்தி முத்தி