1
மாசில் மணிவண்ணம்
எழும் முன்னை எழுந்தேன்
என் துகள்வண்ணம்
ஆங்கே வாரும் வழியுண்டோ
கதிரில் உன் கனிவண்ணம்
எழும் முன்னை எழுந்தேன்
என் நிழல்வண்ணம்
ஆங்கே வாரும் வழியுண்டோ
வழியில் செல்வண்ணம்
எழும் முன்னை எழுந்தேன்
என் நிறைவண்ணம்
ஆங்கே வாரும் வழியுண்டோ
2
உண்டோ இல்லையோ ஒருங்குதையல்
கூறும் முன்னை எழுந்தேன்
கண்டோ இல்லையோ கரையும் புள்
காணும் முன்னை எழுந்தேன்
தீண்டோ இல்லையோ வைகறை
திகையும் முன்னை எழுந்தேன்
இன்றோ இல்லையோ கண்ணில்
கண்டது முன்னை எழுந்தேன் இனிஇலன்
3
இலன் என்றென்னி
இங்கு எம்மை கைவிட்டீரோ
உளன் உருகி
உம்மை உரசித் தேய்த்து
மருந்துண்டேன் மறந்திட்டீரோ
கலம் காண பொறுக்காது
நிலம் நீந்தி
என்னுயிர் வருகுமென்று
அங்கே இருந்திட்டீரோ
வல்வழி விட்டீரோ
வரும்வழி விட்டீரோ
அல்வழி யாயினும்
அங்கு வர விதித்து விட்டீரோ?
4
விட்டது விட்டிலங்கி தொட்டதுவோ நும் தோள்நிறம்
எட்டது எட்டியது என் கண்பட்டதுவோ நும் நிழல்நிறம்
மற்றது மாற்றிலாதது உமக்கு உற்றதுவோ எம் உருநிறம்
இற்றது இறுதியிலாதது உமக்கு பெற்றதுவோ எம் பெயர்நிறம்.
5
பெயர் ஒழிந்தேன் உயிர் ஒழிந்தேன் உலகின் வழி ஒழிந்தேன்
உனை சேர்ந்திடேல் இனி எதை ஒழிவேன் எம்மோரே!
நும் மொஞ்சிக்கிடையில்
துஞ்சிக் கிடக்கும் வழி ஒழியேன்
திண்டிறல் தீமையாயினும்
தேம்பா நின்முகம் கண்ணுதற் ஒழியேன்
6
ஒழியேன் ஒழிந்ததுவும்
பெற்றதுவும் பேணினதுவும்
சுற்றெதுவும் துடைத்திட்ட
என் கோலமோ
கொட்டுதற்கு வாய் திறந்த புள்ளலகு
அகன்றதுவும் அருங்கனி ஆனதுவும்
கண்ணிரண்டில் திரண்டதுவும்
கண்திறக்க தேடுவதுவும்
ஊன் திறந்த உன்காம்பு
7
காம்பினால் தாங்க ஒன்னுமா
காம்பிலுண்ணும்
கனியெடை
காற்றினால் தாங்க ஒன்னுமா
கனிபெக்கும்
பூவெடை
களிப்பினால் தாங்க ஒன்னுமா
நம் காற்றிடை
ஊற்றினால் திரும்ப முடியுமா
ஊற்றிடை
வேற்றினால் நீ விலக்கினால்
திரும்ப முடியுமா நெஞ்சம்
நெஞ்சிடை
8
நெஞ்சுக்கிடையில் காதம் பலகோத்த ஓர்ஆரம்
அத்தெறிந்தும் அறுந்த பாடில்லை அத்தனை காதம்
முடிச்சிட்டு அணிந்தேன்
முத்தி சேர்ந்த ஒய்யாரம் அதில்
சேர்ந்த எவ்விரண்டு முனை
நம் காதம் நாமறியோம்
9
அறிந்திருந்தோம் அளி நாறும் அவ்வழி
துணிந்திருந்தோம் ஆளிலை அவ்வழி
உம்மை வறண்டிருந்தோம் அவ்வழி
கடைக் கண்ணீரம்
உமிழ்ந்திருந்தோம் அவ்வழி
வையத்திருந்தோம் வானத்திருந்தோம் ஆயினும்
வழியிலிருந்தோம் அவ்வழி
10
வழிகோலும் உம் வாசனை
காத்திருந்தோம்
காற்றை அன்று வரக் காணோம்
முலை நெடுக
ஒன்னாயிரம் ஓடை அதிலாறு
ஆக்கியிருந்தோம்
கன்றை அன்று வரக் காணோம்
சீம்பாழி தேக்கி திகையாது
பார்த்திருந்தோம்
களவாங்கும் உன்
பூசை அன்று வரக் காணோம்.
மாசில் மணிவண்ணம் - 2