மாசில் மணிவண்ணம் – 2 – வண்ணம் பார்த்த பத்து
11

கண்ட வண்ணமே கண் வண்ணமே
திறந்த வண்ணமே காம்பின் திறல்வண்ணமே திண்வண்ணமே
வந்த வண்ணமே ஊறித் திரண்ட வண்ணமே

ஊன் வண்ணமே உண்ட வண்ணமே கிடந்தது என் வண்ணமே
வாயிற் சிவந்த வண்ணமே கொட்டித் தீராப் பைம்பொன் வண்ணமே
கொண்டு வருதலெல்லாம் உன் கோன்வண்ணமே

12

வண்ணமுறு திங்கள்
வரும் வண்ணம் ஒரு திசை வண்ணம் தேடித் தவித்திருந்தேன்

திங்களொரு வண்ணம்
வரும் வண்ணம் என் கண்வண்ணம் கனிந்திருந்தேன்

பட்டபகற் வண்ணமதில்
எந்த வண்ணம் எந்த வண்ணம் என்றறியாதிருந்தேன்.

13

தேன் வண்ணத்தே நின் இடவண்ணம்.
ஈ வண்ணத்தே என் மடவண்ணம்.
பூ வண்ணத்தே அந்நாள்வண்ணம்.

இன்றோ நீ இனித்த வண்ணம்.
நானோ உன்னிடத்தில் உழன்ற வண்ணம்.
தெவிட்டா வண்ணம் திரிவதென் இறகின் உய்ய்ய் வண்ணம்.
அவ்விறகசைப்பது உன் நா வண்ணம்.

14

நாவிற் சொல்லவொனா துயர்வண்ணம்.
நின்ற வண்ணம்
நின்றே நினைத்த வண்ணம்
நினைத்தே இளைத்த வண்ணம் இன்புற்றிருந்தேன்.
இரந்த வண்ணம் உனக்கு ஈயும் வண்ணத்திருந்தேன்.

மீண்டும் எம்மை சிசுவண்ணம் ஆக்கி செலுத்தினாய்
கருவண்ணத்து அல்குல் தடத்தினுள்ளே
தூவண்ணத்துளி நான்
இருள்வண்ணங் குடித்து உமக்கே உம்மை ஈன்றளித்தேன்.

15

ஈன்றளித்த வண்ணம் நீ அங்கிருந்தாய்.
உன் செய்தொழில் நெய்த வண்ணம்
அணிந்த வண்ணம் அமைந்த வண்ணம்
உன் கைவண்ணம் காட்டுமொரு வண்ணம் நானிங்கே.

16

நான் நின்ற வண்ணம் எங்கே? சென்ற வண்ணம் எங்கே?
சேர்த்த வண்ணம் எங்கே? தீர்த்த வண்ணம் எங்கே?
தின்ற வண்ணம் எங்கே? வண்ணத்தில் என் வண்ணம் எங்கே?

அவ்வண்ணம் அறிந்து எவ்வண்ணம் இருப்பதிங்கே?
இருந்த போதும் உன் வண்ணம் இருப்பது எவ்வண்ணம்
என்று கேட்ட வண்ணம் கெட்டிருப்பேன் இங்கே.

17

இங்கே வண்ணமொரு வண்ணம் கொண்டது எவ்வண்ணம்? வண்ணம் கொடுத்த வண்ணம் எவ்வண்ணம்? அறிந்த வண்ணம் தெளிந்த வண்ணம் தெரிவிப்பது எவ்வண்ணம்? நாம் தேடிக் கிடப்பதென்னவோ கைக்கெட்டாத உன் ஆகாய வண்ணம்.

18

ஆகாய வண்ணம் நின்வண்ணம். நினைக்க நினைக்க நீர்வண்ணம். அண்ணாந்து பார்த்த வண்ணம் அலை வண்ணம். அதில் தேர்ந்த வண்ணம் தேடி எடுப்பது எவ்வண்ணம்? தோற்ற வண்ணம் தொட்டு அள்ளிய கைவண்ணம்.
கடையில் கை தங்கியதோ அவ்வாகாயத்து பொன் வண்ணம்.

19

பொன்வண்ணமே பொய்வண்ணமே பூவண்ணமே பெம்வண்ணமே பெருவண்ணமே சிறுவண்ணமே இல்வண்ணமே தொல்வண்ணமே மீவண்ணமே மிகுவண்ணமே வெளி வண்ணமே ஒளி வண்ணமே ஒரு வண்ணமே பற்பல உய்வண்ணமே திரு வண்ணமே தேம்பித்தினம் வரும் என் வண்ணமே

20

வண்ணத்திலெல்லாம் வண்ணத்தினோர் வண்ணமே நான் வாங்கி வந்த வண்ணமே நான் பெத்தெடுத்த பிஞ்சு வண்ணமே நான் பித்தெடுத்த பேய் வண்ணமே
வண்ணச் சொல்லே வண்ணப் பெருந்தகையே வண்ணச்சிறந்த வளர் மங்கையே வண்ணக் குழந்தையே வண்ணப்பெருநிலையே வண்ணத்திரு நிறையே உன்னிடம் வந்த வண்ணமே நான் வண்ணமாயினன் எம் வண்ணத்தரசே.

மாசில் மணிவண்ணம் – 3