மாசில் மணிவண்ணம் – 3 – அழைப்பு விடுத்த ஆறு
21

மழையரசே
குக்கில் உனை கூத் கூத் கூத்தென அழைத்தினை

மையரசே
செம்பூத்து உனை ஊத் ஊத் ஊத்தென அழைத்தினை

வானரசே
உன்னிடம் வாங்கி நிறைக்க வையமே தன் கலம் வைத்தினை

நிறைகலம் எம் ஊன் எரித்து ஒருவிளக்கு அவள் ஆக்கினை
சுடர்மாரிக்கடியில் நான் என்னையே வைத்தினை

கொண்டு வருக அவள் காம்பு
கொட்டு கொட்டென கொட்டு வருக அவள் சீற்றம் 

ஆடி வருக அவள் பாதம்
தீண வருக அக் கைகாம்பு
சூழ்ந்து வருக அக்குழற்நுனிக் காம்பு
தைக்க வருக அக் கண்காம்பு
வருக வருக வானத்து கண்காணாத காம்பு

22

கண்காம்பு அழியவிட்டேன் ஐய!
நின் நிறம் மறந்ததன்றோ

அக்கூர்காம்பு அழியவிட்டேன்
நின் கமழ்காற்று மறந்ததன்றோ

அக்கைகாம்பு அழியவிட்டேன்
தீணிய நும்மிடை மறந்ததன்றோ

மண்ணெல்லாம் அழியவிட்டேன்
நின் காற்காம்பு மறந்ததன்றோ

சொல்லெல்லாம் அழியவிட்டேன்
நின் நாநுனிக் காம்பு மறந்ததன்றோ

எனை எங்கோ விட்டுவைத்தேன்
நின்காம்பு மறந்தறியாதன்றோ

........ (2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டது)


23

அன்றோ அவ்வண்ணமே அழிதற்கு அறியாது
அவ்வண்ணமே இன்றெண்ணி இங்கிருந்தோம்.
இன்றோ இன்னுந் தீர்ந்த பாடில்லை.

நாளெல்லாம் எம்மேல் படைகொண்டு வாருதே.
என்றோ ஒருநாள் நாள் அறுக்க நாள்கொண்டு
நீ வருகிலாயின் நாளெண்ணி அழிவேம்.
வந்ததாயின் அந்நாளில் அழிவேம்.

24

வேம் பாலை விழுந்த கூழாங்கல் யாம்.
அக்கூழாங் கல்லினுள் நீர்வண்ண வித்து யாம்.
உன் பொன் நிறமென்னை பாலையாய் பொடிக்குமோ?
உன் காற்றீரமென்னை வனமாய் கமழ்த்துமோ?
யாமழைப்பது எப்புள் சிறக்கை? என்னுள்ளிருப்பது எக்குருவியின் கருப்பை?
இப்பாலையில் இட்ட ஆகாயத்து பொற்புள்ளே நீ எங்கே?



........ (2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டது)


25

எங்கே செல்லுதினாய் எஞ்செல்வமே?
உலகெல்லாம் ஓடி செல்லுதினாய் எம்முலகமே. 
பொன்னெல்லாம் போய் தேடிதினாய் எம்பொன்னே.
ஊழெல்லாம் உழன்றுதினாய் எம் நல்லூழே.
சொல்லெல்லாம்  சுடர்ந்தினாய் எம் சுடரே.
பொய்யெல்லாம் புனைந்தினாய் எம் பொற்பே.
மண்ணெலாம் நடந்தினாய் எம் பொற்பதமே.
அவ்வடுத்த பதம் தாங்கினோன் நானன்றோ?
உம்மடுத்த புனைவிருந்த மெய் யாமன்றோ?
உலகத்தடுத்திருந்த உம்முலகம் நானன்றோ?

26

நான் தாகித்த வண்ணமே வருக என்னிடம். 
நான் தொலைத்த வண்ணமே வருக என்னிடம்.
நான் தேடிய வண்ணமே வருக என்னிடம்.
வண்ணமே வருக என்னிடம்.
தனித்த வண்ணமே வருக எம்மிடம்.
நாம் செய்வித்த நம்வண்ணமே வருக வருக வந்தது நம்மிடம்.


மாசில் மணிவண்ணம் - 4