27
நம்மிரு காம்பும் நம்மிரு காம்பிற் முட்டி
நம்மிருவர் உடைத்து நம்மிருவர் அழித்ததே.
கலங்குவதோ கண்ணீர் மலங்குவதோ?
தரையில் படுத்து இலங்குவதோ?
கருந்தந்தம் தூக்கி வருங்களிறு
என் கலம் தன் கை எடுத்தாடுதே.
கண்ணயராது காப்பருளிய காம்பின்று
என்மேல் கன்னக்கோல் வைத்தாடுதே.
28
ஆடுதே என் நாவிற் உன் நா. கண் தேடுதே என்மேலெங்கும் நின்முலை.
ஓடுதே என்மேலெங்கும் உன் பிடிக் கைதந்தம். நெஞ்சினை நெரித்ததே நின்னெஞ்சு.
இவ்வந்தர ராவில் இவ்விரு நெஞ்சில் நான் என்ன நினைக்குவேன் எம்மனோரே?
உன் ஒத்தாசையன்றி வேறிலாது
அழிவிற்கென நாம் அங்கிருந்தோம் களித்து.
29
களித்துக் காய்ந்த தளிரிலை மேல் காட்டு நெருப்பு நின் கதிர்வாளி
வந்தென்னை சேர்த்ததே செம்பொன்னே ஆயினம்.
சேர்ந்தவன்று செம்பொன் உருக்கினோம்.
செம்பொன் சேர்த்து செம்பொன் அளித்தோம்
இங்கெலாம் இன்நிறத்துப் பொன்.
30
பொன் ஆக்க சேர்வதனைத்தும் பொன்னல்லோ
பொன்னை சுடராக்க சேர்வதனைத்தும் சுடரல்லோ
விண்ணல்லோ வித்தல்லோ
விசும்பில் சேர்வதனைத்தும் உன் யாக்கை யாதுமல்லோ?
குற்றுயிரும் கொலையிரும் உன்னை சேர்வதல்லோ.
அல்லோ என்றலற வந்ததல்லோ நாள்.
31
நாளின் கொற்றவன் மறைத்த நும் முலை
சுடரக் கண்டு எனை அளித்தேன்
அண்ணலே என்னை ஏமாற்றினீர்.
கொற்றவன் மறையும் வரை
எம்மை கொனற்வேம் என்றென்னை ஏமாற்றினீர்.
கொற்றவா நாள் கொண்டு வந்தென்னை காப்பீரோ?
உம் கை கொண்டு வந்தென்னை காப்பீரோ?
அல்லேல் நாளவன் காண்பது நாளை இளைத்த என் என்போ
என்பெரிந்த அவ்விடமோ
அவ்விடம் பூசிய அவள் நிறமோ
அந்நிறம் பொலிந்த நீறோ
அந்நீறு பூத்த உம் என்போ
32
என்பிலாது எழுந்த கன்னங்கரு ஈட்டியிரண்டு
கூரலகு தனியல்ல அதுவே குத்தும் கண்ணிரண்டு
ஒழிய அம்பொன்றில்லை அதுவே அம்பறாதூணி ரெண்டு
எடுக்கவோ தொடுக்கவோ ஆளிலை
அதுவே காலன் தன் கையிரண்டு
33
இருவேறு படையணி இங்கே
இயக்கி வருகுவது அவள் ஒருத்தி
இருவேறு பொழுது இங்கே
நடத்தி வருகுவது அவள் ஒருத்தி
போர்ச்சங்கம் ஓயாது இங்கே
காலங்கொண்டு வருகுவது அவள் ஒருத்தி
களம் இருந்து களங்கண்டு
கொலையுண்டு கொன்றது அவள் ஒருத்தி
34
ஒன்றிலாது ஓய்ந்த உயிர் தேடி திரியும் எம்முடல் பார்த்தீரோ?
அன்றி அவ்வுயிர் பார்த்தீரோ? அன்றி அவள் தான் பார்த்தீரோ?
அங்கு நடந்தது பார்த்தீரோ?
வழியற்று நான் நின்றது பார்த்தீரோ? பார்த்தது அவளிடம் பகர்ந்தீரோ? அப்பொழுதேனும் அவள் கண் இரங்கியது கண்டீரோ?
அன்றி பொல்லாத் தீங்கென்னை எரிக்க நின்று பார்த்தீரோ?
35
பாருமின் கண் எடுத்து களி நடனம்
இரஞ்சுமின் கையெடுத்து கொற்றவள் இரங்குமின்
ஓடுமின் காலெடுத்து அவள் வாருமின் அய்யோ அவள் வாருமின்
காணுமின் காணுமின் கொலைக்களம்
கண்டவர் மாண்டவர் குவிந்த திருத்தளம்
கண்டவர் கண்டது
செவ்வண்ண கால்த்தடம்
36
கால் கண்டோம் இல்லை கை கண்டோம் இல்லை
அதிலொரு துகள் கண்டோம் இல்லை
மன்னே உன் தோல் கண்டோம் இல்லை
அதிலொரு மால் கண்டோம் இல்லை
பொன்னே கண்டோம் இல்லை பொருளே கண்டோம் இல்லை
காண எங்கும் கண்ணே கண்டோம் இல்லை
எரி பரந்தெடுத்த உன் தீ கண்டோம்
எரியும் எம் இல் கண்டோம் சொல் கண்டோம் அச்சுடர் கண்டோம்
கண்டோம் நும்மேனி எரியும் எம்மேனி
கண்டோம் மேனி எறிந்த மேனித்துகளிடை.
மாசில் மணிவண்ணம் - 5