37
துகளாயிரம் உகளாயிரம் தீ உண்டது எம் பகலாயிரம் இருளாயிரம்.
மேனிமேற் தீ கொண்டது மேனியாயிரம்.
தீமேனி விளைந்ததோர் ஆயிரம் மேனி.
பொம்மேனி உருக்கி பொன்னோடையிற்
தீம்பொன் முளைத்து பொன் பூத்து பொன் காய்த்து பொன் விழுந்து பொன் குவிந்த பொன்னில் பொன்னளந்தோம் அப்பொன்னுக்கே.
38
பொற்சிறத்து புட்சூல் வானவள். பைங்கரத்து புற்சூல் நிலனவள். களிசூல் வெளியவள். சூழ்சூல் நீர்வானத்திடையவள். சூல் காக்கும் புள்ளவள். சூல் நோக்கும் புள்ளவள். சூல் கொண்டவள். சூல் கொண்ட சுடரவள். சுடர் கொண்ட சூல் அவள். சூல் கொண்ட சூலெல்லாம் அவள்.
39
அவள் ஊசல் ஒன்றாடும் திசை ஒருதரம் நான். அவள் பாதம் ஒன்றூதும் பொடிந்துகள் ஒருதரம் நான். அவ்வூசல் கண்டெழுந்த காம்பு ஒருதரம் நான். அவ்வூசலில் ஆடிவரும் காம்பு ஒருதரம் நான். முலை மேலமர்ந்து ஆடும் அவ்வூசலே ஒருதரம் நான். அவ்வூசலாட்டும் ஒன்றே ஒருதரம் நான்.
அமர்ந்த அப்பலகைசைவோ? அக்கயிற்றசைவோ அக்காற்றசைவோ காற்றருகிருந்து பார்த்தசைவோ? வேறெதுவோ? நானேதுவோ நான்?
40
நான் நிறைந்ததுவோ நிறையாததுவோ? அழற்ந்ததுவோ அன்றி நீ பிறழ்ந்ததுவோ? நீ அடைந்ததுவோ ஆண்டதுவோ உன் அறியாக் கண்மணியதுவோ? நான் உன்னேதுவோ உன்னதுவோ? அழைத்ததுவோ? அழுததுவோ அண்டி நின்றதுவோ? நீ அணைத்ததுவோ அன்றி அஞ்சினதுவோ? நான் எதுவோ? ஒரே ஒருதரம் நின்னதுவோ? அவ்வொரு கணமேனும் நின்னதுவோ?
மாசில் மணிவண்ணம் – 6