மாசில் மணிவண்ணம் – 6 – நிறை பெற்ற நால்
41

நின்னதுவோ நிறைமங்களம். கண்டதுவோ கண்காணா மங்களம்.
கனிவும் முனிவும் நின் ரூபமங்களம்.
கற்கண்டு தெளிந்த கண்ணாடி நின் நாச்சுவை மங்களம்.
பொற்கண்டு புண்ணிய காம்பு நின்னரு மங்களம்.
புற்பூண்டு நிலமே நின்மேனி மங்களம்.
பொழுதே பொருளே பைங்கருணை நின் பசும்பட்டுக்குழல் மங்களம்.

அமுதே அழகே ஐயொளிரும் அல்லிக்கனியே மங்களம்.
செம்பொன் கடலே அருஞ்சொற்றரசே மங்களம்.
சந்தன குழைவே குங்கும கொழுந்தே சங்கமநிலையே மங்களம்.

42

களமாய்தம் களத்தில் கண்ணாய்தம்
காம்பாய்தம் கனியாய்தம் விரலாய்தம் விரிவயிறாய்தம்
நின் வயிற்றில் சுடராய்தம். சொல்லாய்தம். பொல்லாய்தம்.
காலாய்தம் காலத்து அமிழ்தாய்தம். ஆழிச்சுடர் அழியாதாய்தம் மங்களம்.

43

மங்கை நான் கண்ணாபரணம் கண்டிருந்தேன் மங்களம்.
பெண்ணாபரணம் பெறுதற்கே பேதை நின்றிருந்தேன் மங்களம்.
ஐய! நின் தோல் துகளாராபரணம் துய்த்திருந்தேன் மங்களம்.
உன் வன்னத் துகிலாபரணம் உலகெங்கும் உய்த்திருந்தேன் அக்கண்காட்சி மங்களம். விண்ணாபரணம் வீசியேறிந்திருந்தேன் நின் பாதமண் மங்களம்.

44

களவர்ணத்து பாற்கண் பொற்காம்பே மங்களம். கடைக்கண் சிற்றூளி மங்களம். கொப்புள்கண் காத்த கொடிநான் உன் கோமேதகம் மலர்வயிற்று மங்களம்.

வந்துதித்த வைரப்பொன் ஒளிர் அதிகாலை உன் அல்குல் மங்களம்.
அந்திபுலர்ந்த அந்நாள் செம்பொன் சென்றுசேரும் உன் அல்குல் மங்களம்.

வடிவே வடிவான வழியம்பலத்தே மங்களம்.
நனி கோன் நாயகத்தே மங்களம்.
ஆனந்த புற்சிறகே மங்களம்.
அனாதி சிற்றழலே மங்களம்.

ஐவர்ணத்து விடமே நின்னழகு மங்களம்.
மெய்வர்ணத்து இடமே நின்னெழில் மங்களம்.
மைவர்ணத்து தடமே நின்காட்சி மங்களம்.
மாசில் மணிவர்ணத்துச் சுடரே சுபமங்களம்.


(பல் ஊழியூழி நின் பாத பங்கயமே
எமக்கு நிறைவு)