சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு

கவிஞன் ஒருவனும் அல்லன்
 
ஒரு கவிப்பார்வை முளைத்து மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகி பூவெடுக்கும் சித்திரம் இந்நூலில் உள்ளது. கனிந்துள்ளதா அம்மரம் என்று காலம் சொல்லும். இல்லையென்றால் பின்னாளில் கனியலாம். ஒருவேளை மரம் என்பதற்கு மரம் போதும் என்ற காலம் கனிந்துவிட்டதா? 
 
அம்மரமோ, வெயில்தேடி தம் கதி மாற்றிய பல்வேறு கிளைகளுடன் உள்ளது. ஆயினும் அதன் அடி ஒன்றே.  ஒவ்வொரு கிளையும் எதிரெதிர் திசையில் எழுந்தாலும் மரமெங்கும் மலர் கமழ் ஒன்றே. எதனொன்றின் அடிப்படையிலும் தொகுக்கப்படாமல், எழுதிய வரிசைப்படியே அமைந்த இக்கவிதைகளின் ஊடாக ஒரு பயண வழித்தடம் உண்டு. சேருமிடமோ அவரவருடையது.  

சங்ககாலம் தொட்டே சந்தை இரைச்சலின் நடுவே விவரந்தெரியாமல் நின்றிருக்கும் மரபு நம் கவிதைக்கு உண்டு. யார் யாரோ அதற்கு அன்னமும் கூரையும் அளித்து வந்திருக்கிறார்கள். இனியும் அளிப்பார்கள். இந்நூல் தன் மரபறியும். எனக்கோ என் மனைவி அளிக்கும் பருக்கையும் நிழலுமே போதுமானது.

மதார் அளித்த குறிப்பு


 
ஒரே சமயத்தில் மூத்தவராகவும் சமகாலத்தவராகவும் திகழும் லக்ஷ்மி மணிவண்ணன் இந்நூல் வெளிவர காரணமானவர். புதிய கவிஞர்களை கண்டெடுப்பதற்கும், முன்னிறுத்துவதற்கும் வாசகர்களாக நாம் அவருக்கு கடன்பட்டுள்ளோம். கவிதையின் பொருட்டு சகோதரனென அனைத்து உதவிகளும் புரிந்த மதாருக்கு என் அன்பு. எழுதப்பெற்ற அன்றே வாசித்து உரையாடும் நண்பர்கள் அருண்மொழி, வேல்முருகனுக்கு நன்றி. தம் கருத்துகளால் உதவிய க.மோகனரங்கன், குக்கூ சிவராஜ், ‘வழி’ இணையதள ஆசிரியர் இளம்பரிதி ஆகியோருக்கு நன்றி.
 
வெண்முரசை யாத்த கைகளுக்கு இந்நூல் சமர்ப்பணம்.  ஜெ. விற்கு என் முத்தம்.
 
இந்நூலில் கவிதையின் பாதத்தடம் உண்டு. அதை தொடர்ந்து சென்ற ஒரு சாமானியனின் சொற்களும் உண்டு. அதன் வழியாக கவிதையும் உண்டு. அது நம்மனைவருக்கும் உரியது. 
 
கவிஞன் ஒருவனுமல்லன்
வேறுபலவும் உண்டு 
இங்கு உலகு புரப்பதுவே. 

வி சங்கர்.
15-12-2025