சூது பவளம் கண்டேன் அல்லேன் – ஜெயமோகன் வெளியீடு

வணக்கம் நண்பர்களே

2026 புத்தாண்டு அன்று (1-1-2026) அந்தியூர் வெள்ளிமலையில்  நித்ய வனம் எனுமிடத்தில் ( முழுமையறிவு வகுப்புகள் நடக்குமிடம் ) என் முதல் நூலான சூது பவளம் கண்டேன் அல்லேன் எழுத்தாளர் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது. இதுவரை நித்யவனத்தில் நூல் எதுவும் வெளியிடப்பட்டதில்லை இதுவே அங்கு வெளியிடப்படும் முதல் நூல் என்றார் ஈரோடு கிருஷ்ணன். ஜெயமோகன் வெளியிட அந்தியூர் மணி பெற்று கொண்டார்.  வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் மற்றும் புகைப்படக் கலைஞர் ஏ வி மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஜெயமோகன் நூலை வெளியிடுகிறார்

வெளியிடுவதற்கு முன்பு ஈரோடு கிருஷ்ணன் இந்நூல் பற்றிய சிறிய அறிமுகத்தையும், சில கவிதைகள் பற்றிய தன் வாசிப்பையும் பகிர்ந்து கொண்டார். வெளியீட்டிற்கு பின் நான் மிகச் சுருக்கமான ஏற்புரை ஒன்றை வழங்கினேன்.

ஏற்புரையின் எழுத்து வடிவம்

அனைவருக்கும் வணக்கம். இன்று குரு நித்யாவின் பெயராலான  நிலத்தில் இந்நூல் வெளியிடப்படுவது எனக்கு நிறைவை அளிக்கிறது. வெளியீடு பற்றி நாங்கள் எதுவும் சிந்திக்காத போது தானாவே இது அமைந்தது எனக்கு மகிழ்ச்சி மற்றும் இதை ஒரு ஆசி எனக் கொள்கிறேன்.

குக்கூ சிவராஜிடமே இக்கவிதைகள் நான் முதலில் அளித்தேன். தன் அலைச்சலான வாழ்க்கையில் அதை அவர் ஒன்றரை மாதம் சென்று முழுதும் படித்து முடித்தார். எனக்கு அழைத்து தனக்கு நெருக்கமான கவிதைகள் பற்றி பேசியபடி ” இப்ப நித்யா உயிரோட இருந்தா, பாருய்யா தமிழ் ல நாங்க இதெல்லாம் எழுதிருக்கோம் னு கொண்டு போய் அவர் கையில் கொடுப்பேன் ” என்றார். இச்சொல் எனக்கு என்றுமே மிக முக்கியமானது.

நித்யாவிற்கு பல மாணவர்கள் உண்டென்றாலும் நமக்கு மிக அருகே இருக்கும், நமக்கு மிக நெருக்கமான நித்யாவின் கை ஜெயமோகன் தான். வெண்முரசை யாத்த கைகளுக்கு தான் இந்நூல் சமர்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு கைகளும் ஒன்றாக சேர்ந்து இன்று இந்த நூலை பெற்றுக் கொண்டது.  நித்யாவின் கைகளில் அது சேர்ந்து விட்டது என நிறைவு கொள்கிறேன். வேதகாலம் அல்லது அதற்கு முன்பிருந்து தொடர்ந்து வரும் நம் ஞான மரபின் ஆசியென்று இதை கருதுகிறேன்.

க.மோகனரங்கனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது இதையெல்லாம் எழுதி முடித்தபிறகு ஒரு காலியான பாத்திரம் போல் உணர்கிறேன் என்றேன். அவ்வாறு இருப்பது நல்லது தான் உடனே வேறொன்றை எழுதியாக வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை என்றார். ஆனால் இந்நூல் வெளியீடு பற்றி கிருஷ்ணன் நேற்று முன்தினம் சொல்லி முடித்த கணம் நான் அறிந்தேன்  நான் காலியாக இருக்கவில்லை. என் தோள்களில் அமர்ந்த இப்பறவையுடன் எடைமிகுந்து நான் திரிந்திருக்கிறேன். சுமையாக அல்ல மகிழ்வுடனேயே அதை என் தோள்களில் வைத்திருந்திருக்கிறேன்.  ஆனால் இன்று அப்பறவை தான் அமர வேண்டிய மரத்தின் சரியான கிளைகளில் சேர்ந்து விட்டிருக்கிறது. என் தோள்களில் இருந்ததனாலேயே என்னால் சரியாக பார்க்க முடியாமலான அப்பறவையை நானும் உங்களுடன் சேர்ந்து நின்று நிம்மதியாக எடையேதுமின்றி அந்த தூரத்து மரத்தில் பார்த்து ரசிக்க முடியும். அதுவே நிறைவை அளிக்கக் கூடியதல்லவா ? நன்றி.

( உரை நிறைவு )

நூல் வாங்க   commonfolks.in ,    panuval.com

வரும் ஐனவரி 31 2026 சனிக்கிழமை அன்று சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் அறிமுக விழா திருநெல்வேலி பாளையங்கோட்டை யில் அய்யம் பெருமாள் ஹாலில் நடைபெறுகிறது . மூத்த எழுத்தாளர்களான கல்யாண்ஜி , லட்சுமி மணிவண்ணன் , க.மோகனரங்கன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். பேச்சாளர் சங்கர் ராம், கவிஞர் மதார் , கட்டுரையாளர் இளம்பரிதி (வழி இணையதள ஆசிரியர் ) ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

அனைவரும் வருக . நன்றி

அறிமுக விழா அழைப்பிதழ்

விழா சார்ந்து தகவல்கள் தேவைப்படுவோர் 8344496842 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். நன்றி.