கண்ணில் புகைந்திட்டு கமழ்

அந்த கண்களை நான் பார்த்தபடி நின்றிருந்தேன். மையின்றி ஆனால் அதே கூர்மையுடனிருந்தது. நான் அவர் வந்திருப்பதை நம்ப முடியாமல் சமையலறைக்குள் மெல்ல ஓடிவிட்டு கூடத்திற்கு மீண்டேன்.

என் அக்காவிற்கும் அவருக்கும் சொல்லிக் கொள்ள முடியாத சேய்மை ஒன்றிருந்ததை நுணுக்கமாக கண்டு பிடித்ததால் அவளை முந்தி செல்வதாக எண்ணி என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.

அவர் இடது கண்ணில் ஊதியணைத்த சிறுவிளக்கு புகை போல ஒரு திட்டிருந்தது.  அத்திட்டு எனக்கானது, அதுவே என்னை காண வந்திருக்கிறதென எண்ணி கொண்டேன். கண்கள் அசையும் போது ஒரு ரகசிய கண்மனி என நிலையாக அது அங்கிருந்தது. அதன் ஒடடுமொத்த பார்வையும் என் மேல் கவிந்திருந்தது போல. 

நான் அதை ஏமாற்ற மறைவாக அங்குமிங்கும் உலாத்தினேன். அவர் இமைகள் கண்மண் தெரியாமல் சிமிட்டுவதில் அப்புகை திட்டு என்னை தேடுவதை அறிந்ததும் மீண்டும் அவர் முன்னில் செல்வேன். 

அவர் குரலாகவே அவரை என்னால் பார்க்க முடிந்தது. தன் சகோதர்களுடன் அமர்ந்திருந்தவர் ஒரு முறை கூட பேசவில்லை. நான் பாடுவரென்று கூட காத்திருந்தேன். ஆனால் என் வீட்டில் யாரும் அதை எதிர்நோக்கியது போல் தெரியவில்லை. 

குழப்பை அவர் உதடுகள் உண்பது சாயம் பூசும் நளினத்துடன் இருந்தது. இரு கவளம் சோறும் கொஞ்சம் குழம்புமே அவருக்கு போதுமானதாக இருந்தது. எந்த நேரமும் அவர் அழ போகிறார் என நான் ஆழமாக நம்பினேன். அவர் அழும் போது கட்டியணைக்கும் முதல் ஆளாக நானிருக்க வேண்டும் என்பதால் மிக அண்மையிலேயே நின்றிருந்தேன். 

வாரோம்மா என கரகரத்த குரலில் அவர்கள் சொல்லி செல்லும் போதும் அவர் எங்களை நோக்கி தலை அசைத்தார். நான் அந்த புகைத் திட்டை நோக்கினேன். அது அலைபாய்ந்ததா? நான் அப்படி நினைத்துக் கொண்டேனா?

நான் மாலை வருவதற்காக எண்ணிஏங்கி காத்திருந்தேன். மாலை அணைய ரகசியமான பயம் ஒன்றை உணர்ந்து அங்கு போகாமல் தவிர்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவர் குரல், நேற்றைய அவரின் கையசைப்பு அதை தவிர்க்க எனக்கு வழி ஏதும் இருக்கவில்லை. 

குளிர் பரவிய மணலில் வெறும் கொட்டகையை நோக்கி  அமர்ந்திருந்தேன். இன்று வழக்கம் போல ஒப்பனை செய்யுமிடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கும் அவருக்கும் மட்டும் தெரிந்த ஒரு ஒப்பந்தம் போல நான் அங்கு செல்லாமல் நேராக கொட்டகை முன்பில் அமர்ந்து அவருக்காக காத்திருந்தேன். 

பின்னால் அப்பாதங்களின் சதங்கை ஒலி. நான் ஒரு ஓநாய் குட்டி தன் காதை விதர்ப்பதை போல என் உடலை உணர்ந்தேன். அவர் ஆடை அன்றொரு சிவப்பு வண்ணம். வந்து கொட்டகையுள் முன்னின்று ‘ ஆக ‘ என அக்குரல் ஒலித்தது. “மன்ன! நீங்கள் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? நானோ பேதை பெண். உலகேதும் அறியாதவள். 

அய்யோ….. என் கால்களின்று கலங்குதே… வரும் தீம்பை நினைந்து உலையுதே….  கெட்ட கெட்ட சொப்பனமாய் காது தன்னில் கேட்டுகுதே…” என தன் புடவை தலைப்பை கையிலெடுத்து கொண்டு கால்களால் மண்ணில் சுற்றி அழுதாடினாள் அவள். 

அவள் காட்டி அழுத வரவிருக்கும் அப்பெரும் அழிவை, ஊழியின் முடிவை பார்த்து நான் அமர்ந்திருந்ததை நானே கண்டு உள்ளுக்குள் அஞ்சி நடுங்க தொடங்கியிருந்தேன். 

தவிப்புடன் நான் அந்த புகை திட்டை தேடினேன். இருக்கிறதோ இல்லையோவென கண்கள் அலைந்திருந்து சுற்றிவந்தது அவள் சுற்றல். ஒரு கணத்தின் மீச்சிறு பகுதியில் அவள் மட்டும் சுழன்று ஆடியிருக்க அப்புகை திட்டு மென்மையாக ஆனால் காத்திரமாக எனை தீண்டி புன்னகைத்து அங்கேயே நின்றது. 

“விழுந்துட்டான். பாருங்க. ஏய்! அந்த சின்ன பையன எழுப்புங்கப்பா ” குரல்களை கேட்டுக் கொண்டே மண்ணில் நான் நிறைவும் நிம்மதியுமாய் தூங்கினேன்.