தமிழில் இலக்கியத்தை எழுதவோ வாசிக்கவோ செய்பவர்கள் இனி எங்கும் தங்களை ஒளித்துக் கொள்ள வேண்டிய தேவை குறைந்து வருகிறது. இன்று இலக்கியம் ஒரு தரப்பாக அதை அறியாதவர் கண்களுக்கு காண கிடைக்கிறது. ஞானபீடம் பெற்றதுக்காக மொத்த தமிழ் இலக்கிய சூழலிலிருந்தும் வைரமுத்து மீது எழுந்த எதிர்ப்பும், அது ஓரளவு கவனிக்கப்பட்டதுவும் ஒரு சான்று.
அது போலவே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து முடிந்த வாழும் தமிழ் (Living Tamil lit fest) மாநாடும் பிறிதொரு சான்று. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் தமிழின் பல்வேறு அறிவுத் தரப்புகளாலும் நிகழ்த்தப் படும் என்ற நம்பிக்கை தெரிகிறது.
நம் முன்னோடிகளோடு ஒப்பிடும் போது நமக்கு மிக வசதியான ஒரு சூழல் (நம் காலத்துக்குரிய பிரச்சனைகள் இருந்தாலும்) வாசிக்கவும் எழுதவும் அமைந்திருக்கிறது. இச்சூழலை பொறுப்புடன் பயன்படுத்தி, அதன் பயனை சூழலுக்கு திருப்பி அளிக்க வேண்டிய கடமை எனக்குள்ளது என்றே நான் நம்புகிறேன். அவரவர் கையெழுத்தை அவரவரே இட முடியும் இல்லையா?