குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 4

14

ஆழியிருள் ஒளியலை. இருளில் துவங்குகிறதனைத்தும். அலையில் வந்து சேர்கிறதனைத்தும்.

இருள் ஒரு கரு என அறிக. அதிலிருந்து கொணர்வதே ஒளி என கொள்க.

நான் இருள் காணாது இங்கு வந்தேன். வந்தவிடத்தில் இருள் காணவும் ஒளி பேணவும் நின்றேன்.

ஆம் இருளிலாது இவ்வுலகிலை. என் இருள். அவன் இருள். முடிவிலி இருள்.

கனவில் தோன்றும் இருள் நோக்கி நான் என் கையசைப்பேன். விழிப்பில் தெரியும் ஒளியை கையணைப்பேன்.

இருளும் ஒளியும் ஒன்றென அருந்துபவை மனத்தின் மதலை. அங்கு ஒளியோ இருளோ இல்லை. அங்கு தூயதும் அழுக்கும் இல்லை. அங்கிருப்பது அங்கிருப்பதே.

அங்கிருந்து எடுக்கிறது ஊற்று. அதை வணங்கி திளைப்போம். ஊற்றிலிருந்து ஓடி வருகிறது வாழ்வு. வாழ்வை பகிர்ந்து உண்பேம்.யானும் அவனும். நீயும் நானும். நாமும் அனைத்தும்.

என்னிலிருந்து உன்னிலிருந்து ஊற்று எடுத்து ஓடுக களியும் பித்தும் ஒளியும் இருளும்.

ஆம் என்றே ஆகுக அனைத்தும்.

15

நான் இருளை நம்பினேன். ஒளிவருமிடமது என தெரிந்து அதன் முன் நின்றேன்.

அவளிடமிருந்து ஒன்றே வரக் கண்டேன். அதையே ஒளி எனக் கொண்டேன். ஒளியிலாத ஒன்றே ஒளியாகும். இருளிலாததே இருள்.

வாழ்விலாததே வாழ்வு. வடிவிலாததே வடிவு. பூமியிலாததே பூமி என அறிந்தேன். அங்கிருந்தே வந்தன அனைத்தும். அதையே இங்கு வைத்து வாழ்ந்தனர் பூமியினர். அதையே தொழுது உழன்றனர்.

ஆம் அதையே நாங்களும் அறிந்தோம். அது வந்து அறிந்தது அதை இங்கு. அதுவே அறியும் அனைத்தும்.

ஆம் அறிந்தது அதுவே என்றாகுக.

16

பொய்யிலிருந்து பிறக்கிறது ஒளி. ஒளியிலிருந்து உண்மை. அவள் இடையறாத பொய் என திகழ்ந்தாள்.

ஆனாலும் பொய் வாங்கும் கலம் என அருகில் நின்றிருந்தேன் நான்.

உண்மையுள்ளவன் பொய் அஞ்சுவான். ஒன்றுமறியாதவனுக்கோ கலத்தில் விழும் ஏதொன்றும் பெருவரம்.

தாகத்திலிருப்பவனுக்கு அது நீரே. அருந்தியவன் அறிந்ததே மெய். அருந்த தயாரயிருப்பவனுக்கு தாகம் இல்லை. தயங்கியவனுக்கோ தாகம் தீரந்தபாடில்லை.

ஊற்றருகில் நின்று தாகமெடுத்து அலையும் மனிதர்களே!

ஊற்று ஓடித் திரிகிறது உங்கள் வீட்டு கூடங்களில். ஊற்று உறங்குகிறது உங்கள் வீட்டு தூளியில். ஊற்று வந்து ஊட்டுகிறது தன் வாயின் எச்சிலை. எடுத்து பருகுக அவ்வமுதம். நாவில் சுவையற்றதே அவ்வுண்மை. தொண்டையில் இறங்குபோதே அது சுவை. உடலில் அது மதுரம். நினைவில் அது அமிழ்தம்.

நினைத்து நினைத்து எடுத்து பார்க்கும்போது அது மரகதம். மணி. அரியதோர் பொக்கிஷம். அதை அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி உங்கள் வீடு வந்திருக்கிறது. கொள்க. நான் கொண்டதை சொல்கிறேன். அதையேனும் கொள்க!

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 4”