குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 5

17

பூமியில் உயிர்கள் பெறவதனைத்தும் வேறொன்றின் எச்சில். மண் புழுதன் எச்சிலையே இப்பூமி உண்கிறது. சூரியனின் எச்சிலே இலைகள் உண்ணுவது. இலைகளின் எச்சிலே பூவாகி பூமியில் கொட்டுகிறது. புள் பூண்டு எச்சிலே கனிகளில் வன்னமிக்கிறது. கனிகளின் எச்சிலோ ஊன் ஆகிறது.

விலங்குகளின் எச்சிலே ஊண் என நாக்கில் சுவைகிறது. மானிடரின் எச்சிலே மண் வாயில் இனிக்கிறது.

எச்சிலே முத்தம். எச்சிலே அமுதம். எச்சிலிலிருக்கிறது உயிர்தொகை. எச்சிலிலிருக்கிறது புவி வாழ்வு.

அவள் தவழ்ந்து தவழ்ந்து எச்சிலை நிறைத்தாள் கட்டாந்தரையில்.  குளிர்தண் அது தொட்டது அனைத்துயிரையும். கட்டாந்தரையே பூமியானது.

எச்சில் ஊறிய வாயில் அவள் எடுத்து போட்டதன்றோ இவ்வுலகம். மண் எடுத்திட்டாள். மணி எடுத்திட்டாள். எறும்பு எடுத்திட்டாள். ஏனைய அனைத்துமிட்டாள்.

அவ்வமுதில் ஊறி அழியாதிருந்தது இப்புவி. சாரமளித்து அவள் துப்பிய பின்பே இங்கவை உயிர் பெற்றன.

மண் வளமானது. மணி துலங்கியது. எறும்போ பெருகியது. ஏனையதெல்லாம் என்றென்றைக்குமானது.

அவள் துப்பும் எச்சிலே உனை வாயிலிட்டு வாழ்வாங்கு வாழ்வோம்.

18

பாலாழியின் தண்ணீர் முழுக்க அவள் மணிக் கதவின் தாழ் திறந்து ஊற்றிய வண்ணமிருந்தது.

அவள் எதையும் நனைத்த வண்ணமே கிடந்தாள். துர் என ஒரு நாற்றம் ஒலித்த வண்ணமிருந்தது அவள் துணியில். அவ்வொலிக்கோ ஒரு வண்ணமில்லை. மஞ்சள் வந்ததொரு முறை. பசும்பொன் வந்தது மறுமுறை. கன்னங் கரும்பொன் வந்தது முதல்முறை.  செக்க சிவந்திருந்த பொன் வந்தது என்றோ ஒருமுறை.

எத்தனை பெரிய ஊற்றாயினும் ஊறி வருவதெல்லாம் உப்பு. கடலை கடைந்தவன்று உப்பே அமுதமாகி வந்தது. வாயில் வழிந்து வருகிறது அமுதம். கீழே திறந்து ஓடுகிறது ஓயாத அலைவிக்கும் கடல்.

கடலிலிருந்து அமுதை கடைந்தெடுக்கும் இம் மத்துயிர் ஓர் இடத்தில் நிற்க ஒன்னுமா? கடைசலென நாலாபுறமும் சுற்றி சுழலும் ஊழே அவளுக்கு.

உப்பும் அமுதமும் ஒன்றாக்கி மீண்டும் ஆழியாக்கி அதில் கை தப்பி குளிக்கும் இவ்வுயிர் என் முன் நடிப்பது புவியின் பூர்வீகத்தையல்லவா?

நிலமும் நீரும் ஒன்றென வாழ்ந்தறிந்தவள் அவள். வெளியும் தீயும் பார்த்தறிந்தவள். ஒலியும் வண்ணமும் கேட்டறிந்தவள். அறிந்திங்கு வந்தவள். ஆதலால் கற்க ஏதுமிலாது காலாட்டி துயின்றவள்.

அருகில் அடியமர்ந்திருந்தவன் அவன் .

அடுத்து

One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 5”