தனி
இருட்டில் வழியறியாது நடந்து சென்றார்கள் அவளும் அவர்களும்..
“நாம் ஏதோவொரு கனவிற்குள் வந்து விட்டோம். இருள் அதிகமாக உள்ளது இங்கே”
“ஒரு சிறு விளக்கிருந்தால் எதையாவது பார்க்கலாம். அதோ அங்கு ஒரு அகழ்”. காற்றில் நடுங்கிய படி எரிந்து கொண்டிருந்தது அது.
“அந்த சின்னஞ் சிறுவனின் முகச்சாயல் என்னை போல உள்ளதே.
அவன் எதையாவது அஞ்சி நிற்கிறானா.. அய்யோ எரிவது அவனல்லவா.. காப்பாற்ற வேணுமே..
நான் அவனை அணைக்க முடியாதா?”
“வேண்டாம் அவனை நீ அணைத்தால் இக்கனவை நாம் அறிந்து கொள்ள முடியாமலாகும். அது அவனிலிருந்து வரவிருக்கும் உனக்கும் இழப்பே…”
“இல்லை.. இது பாவம்.. அவன் அங்கே தனித்து எரிகிறான்.. அறிதலுக்காக நான் பார்த்து நிற்பதா..”
“வேறு வழியில்லை.. இன்று அவன் உலகில் நீ இல்லை. உன்னால் இங்கு நின்று நோக்கவே முடியும். உனக்கு இக்கணம் அருளப்பட்டிருப்பதே அதற்குத்தான். இவ்வாய்பை தவற விடாதே. இன்னும் சில கணங்களில் நாம் நம்மிடத்திற்கு திரும்பியாக வேண்டும்.”
அவனை போன்ற சாயல் தெரியும் முகம் அவருக்கு. பெரிய அந்த ஒற்றை தட்டில் உணவுண்ணுகிறார். ஒடிஞ்சலான வெளிறிய ஒரு பெண் பரிமாறுகிறாள்.
வலுத்த கூக்குரலோடு அவர் சோறு நிறைந்த தட்டை வீட்டின் கூடத்தில் விசிறி அடித்தார். விசிறிய அன்னத்தோடு கிடந்த அந்த பெரிய ஒற்றைத் தட்டை நோக்கிபடியே நின்றான் அவன்.
பக்கத்தில் வேறு ஒரு கதவு. திறந்தால் இவள் சாயலில் அவன் ஒரு தூணோரம் நின்றான்.
அன்று யாருமற்ற அவ்விரவில் அந்த தட்டில் உணவுண்ண அவர் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. தூரத்தில் அவரை தேடும் குரல்கள்.
சிறிதே வளர்ந்த பிள்ளைகளுடன் தனித்து வாசலில் அப்பெண் நின்றிருந்தாள். அப்பெண்ணின் ஆழத்தில் எவ்வுணர்வுமின்றி அவன் அம்மா அமர்ந்திருந்தாள். அக்கிணற்றுக்குள்ளே எட்டி பார்க்கும் உயரமில்லை அவனுக்கு.
அவன் வீட்டுக் கதவுகள் மட்டும் நிறைந்த ஒரு தெருவில் தன்னையே அகழ் ஆக்கி அவள் நடந்தாள்…
“அறியாச் சிறுவன். அந்த ஜன்னலோரு இருக்கையை அவனுக்கு மறைத்தேனே.. நானா அவனை இக்கனவுகளில் வைத்தேன். என் தெய்வமே சிறு பெண் அறியாமல் செய்தேன். என் தவறுக்கு அவன் அங்கு தனித்தெரிவதா?”








One response to “குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 10”
[…] அடுத்து […]