ஜேன் குடால் நினைவிற்கு முத்தம்

ஜேன் குடால் (Jane Goodall) அக்டோபர் 1 2025 அன்று இயற்கையாக மரணமெய்தினர். அவருக்கு அஞ்சலி.

விலங்கியலாளர் மற்றும் முதனியலாளராக (primatologist)  அவருடைய சிம்பன்ஸிகளின் உணர்வு நிலைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தரவுகள் மிகவும் முன்னோடியானது. மிக இளம் வயதிலேயே தன் தந்தை பரிசளித்த ஜூப்லி எனும் குரங்குகுட்டி பொம்மையை சுற்றத்தார் ஜேன் அப்பொம்மையால் பயந்து விடக் கூடு மென் நினைத்தபோது அவர் அதை மகிழ்ந்து ஏற்றார். ரஸ்டி எனும் தன் வளர்ப்பு நாய் வழியாக அவர் விலங்குகளுக்கு தனித்த உணர்நிலைகள் உண்டென்பதை தன் இளம் வயதிலேயே கண்டுகொண்டதாக பின்னர் பகிர்ந்துள்ளார்.

ஜேன் குடால் தன் வளர்ப்பு நாயுடன்

அவர் ஒரு neurodivergent என கருதப்படுகிறார். மனித முகங்களை பிரித்தறிய அல்லது கண்டறிய முடியாத ஒரு வகை நரம்பியல் குறைபாடு அவருக்கிருந்தது. Face blindness (Prosopagnosia) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒருவேளை இதன் காரணமாகவே அவரால் சிம்பன்ஸிக்களிடம் நெருங்கி பழக முடிந்திருக்கலாம்.

அவர் காடுகளில் வாழந்த சிம்பன்ஸி குடும்பத்தால் தங்களில் ஒருவர் என ஏற்கப்பட்டு அந்த குடும்பத்துடனே வாழ்ந்து அவர்களை பற்றிய பெரும் ஆராய்ச்சி தகவல்களை அளித்தார். அவ்வகையில் சுதந்திரமாக தன் சொந்த வாழ்விடங்களில் வாழும் விலங்குகளை உடனிருந்து தங்கி ஆராய்ச்சி செய்வதில் அவர் முன்னோடியாக கருதப்படுகிறார். சிம்பன்ஸிக்களுக்கு அவர் பெயரிட்ட போது ஆராய்ச்சியுலகம் அதை வலிமையாக எதிர்த்தது என்பது இன்று நம்மால் நம்ப முடியாமல் கூட இருக்கலாம்.

1986 ஆம் ஆண்டு வெளியான ‘The Chimpanzees of Gombe: Patterns of Behavior‘ மற்றும் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘Through a Window: 30 Years Observing the Gombe Chimpanzees‘ ஆகிய இரு புத்தகங்களும்   மனிதர்களைப் போன்ற பாலூட்டிகளை பற்றிய அறிவியல் துறையில் (primatology)முக்கிய சாதனைகளாக கருதப்படுபவை.

அவர் அன்னை அன்றைக்கு கிட்டதட்ட ஆண்களின் உலகமாக இருந்த இத்துறைகளில் ஜேன் குடால் ஈடுபட பெரிதும் துணை நின்றிருக்கிறார். Vanne Morris-Goodall எனும் பெயரில் அறியப்பட்ட அவர் அன்னை ஒரு நாவலாசிரியர்.

ஜேன் குடால் சிம்பன்ஸிக்களுடன் இத்தனை நெருங்கி பழகிய போதும் ஒரு நேர்காணலில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான விலங்கு எது என்னும் கேள்விக்கு நாய் என்றே பதிலளிக்கிறார். ஆம் என நாய் பிரியனான நானும் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் நாய்கள் அனைத்தும் (ஒரு நாய் கூட விதிவிலக்கு அல்ல) மனிதபிரியர்கள். 

ஜேன் குடாலிடம் கடவுள் பற்றி கேட்கப்பட்டபோது “கடவுள் யார் அல்லது என்ன என்பது பற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் இயற்கையில் இருக்கும்போது அதை உணர்கிறேன்.அது எனக்கு போதும் ” என்றார்.

விலங்குகளின் மேல் பெரும் பிரியமும் ஒருவகை இணைக்கமும் கொண்டுள்ள என் மகள் வருங்காலத்தில் ஜேன்  குடால் போல ஒரு விலங்கியாளராக வேண்டுமென்பது என் உலகியற் பகற்கனவுகளில் ஒன்று. என் மகள் மேல் ஜேனின் ஆசிகள் இருக்க வேண்டுமென  எண்ணிக் கொள்கிறேன்.

என் அன்பு ஜேனுக்கு முத்தம்.