நோக்கற்றதின் நோக்கு

கவிதை யாதெனில் என இங்கு உரையாற்றும்படி என்னிடம் கேட்கப்பட்டது. எது கவிதை என்னும் கேள்வியை உள் வைத்து அல்ல, கவிதையை நீ எங்கிருந்து பார்த்தாய் அல்லது பார்க்க விழைகிறாய் என கேட்க நினைத்ததன் விளைவே இது. கவிதையை எந்த சாளரம் வழியாக நான் கண்டேன் எனச் சொல்வதே இங்கு பொறுத்தமானது.

காசியில் கங்கை படித்துறையில் கிடக்கும் கூழாங்கற்களை எடுத்து தெய்வமாக பிரதிஷ்டை செய்யும் வழக்கம் பற்றி நித்யா கூறுகிறார். இமய மலையிலிருந்து உருண்டு வந்த அந்த கூழாங்கற்களை நம் மொழிக்கு நிகராக கூறுகிறார். 2000 வருடம் கவிதை (அல்லது செய்யுள்) வழியாக உருட்டி எடுக்கப்பட்ட சொற்கள் கொண்டது தமிழ். 

நான் இதையே கவிதைக்கும் சொல்வேன். என்றுமுள கல் ஒன்றை ஒரு கணத்தின் கருவறையில் தன் புத்தம் புதிய நோக்கால் அதை மையமென நிறுவும் செய்கைக்கு ஒத்ததே கவிதை. அவ்வாறு கவிஞன் பிரதிஷ்டை செய்யுமிடம் பெருங்கற்றளியின் கருவறையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  அது காட்டுப் பொத்தையில் மரத்தினடியில் நடப்பட்ட வடிவற்ற வடிவங்கொண்ட கற்களாக இருக்கலாம் (விக்ரமாதித்யனுடையதை போல). சிற்பச் செதுக்குடன் கூடிய நெடிய சிலைகளாக இருக்கலாம் (பிரமிள்) . கூழாங்கற்களாகவும் (தேவதேவன்) கற்களாகவும் (இசை) இருக்கலாம். அல்லது பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று தனித்தெடுத்து வைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் (அனைத்து கவிஞர்களும்).

முதன்முதலாக ஒன்றை நோக்கவதன் கலையே கவித்துவம் என ஒரு பேச்சுக்கு சொல்ல முடியும். இயல்பிலேயே அந்த வாய்ப்பு அமைந்திருப்பதால் தான் குழந்தைகளின் சொற்கள், செய்கைகள் கவிதையை ஒத்திருக்கின்றன. அதன் மறுமுனையில் நாமும் கவிஞர்களை குழந்தைக்கு அருகிலிருப்பவர் என நினைக்கிறோம்.

ஆனால் கவிதை எழுதப்பட மொழியும் வடிவ தேர்ச்சியும் (ஆழ்மன ரீதியாகவேனும்) தேவைப்படுகிறது. குழந்தைகள் கவிதை எழுதுவதில்லை.  கவிஞர்கள் அதுவரை அடைந்த அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யும் போது (அல்லது அவர்களே அறியாமல் அது ரத்தாகும் போது) ஒன்றை புத்தம் புதிதாக நோக்கும் பார்வையை பெறுகிறார்கள். அந்த நோக்கே கவிதையை கொண்டு வருவதாக எனக்கு படுவதுண்டு.

எண்ணற்ற சாளர நோக்கு

சரி, ஒருவர் அப்படி காண்பதனைத்தும் கவிதையாகுமா?  காணும் நபருக்கு ஏதேனும் சிறப்பு இயல்புகள் உண்டா? இங்கேயே எனக்கு தேவதேவனின் கவிதை வரிகளே நினைவிற்கு வருகிறது. 

பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்திற்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன


என்றால் தவம் என பதில் வருகிறது அந்த கவிதையிடம் (தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்). இதை எந்த நோக்கமும் இல்லை என்று நாம் சற்று எளிதாக்கி புரிந்து கொண்டால் பெரிய தவறொன்றும் இல்லை தான். ஆக நோக்கற்றதின் நோக்கே கவிதையில் முடியும் என முடிக்கலாம்.

கவிதைக்கு நோக்கம் இருக்க முடியாது. அப்படி இருக்குமேயானால் அந்நோக்கம் நிறைவேறியதும் கவிதை இறந்து விடுகிறது என மா.அரங்கநாதன் சொல்வதாக லக்ஷ்மி மணிவண்ணன் ஓர் உரையில் கூறவதும் இது பற்றியே.

 சமீபத்தில் இருப்பின் நெசவு எனும் தன் நேர்காணலில் அஜிதன் ‘கவிதை உலகின் முன் நின்று தான் கண்ட அழகை பேசுகிறது’ என்கிறார். அது எனக்கும் நெருக்கமான ஒரு பார்வை தான். ஆனால் அந்த அழகு எப்படி கவிதையின் கண்ணில் படுகிறது? அல்லது கவிதையின் கண்ணில் படுவது எப்படி அழகாகிறது என்றே நான் சொல்ல விழைகிறேன். கோபமென்றாலும் தீமையானாலும், நான் ஏற்கனவே கூறியது போல நோக்கமேதும் இல்லாமல் அதை நோக்குவதன் மூலமே கவிதைக்கு அழகு சாத்தியமாகிறது.

மொழியில், அதாவது சொற்களில், அதன் வைப்பு முறையில், பொருள் படும் நுண்ணிய அலகில், குறைந்தபட்சம் ஒலியமைவில் புதியதாக ஏதேனும் ஒன்று எழுந்து வந்திருந்தால் அது கவிதையை நெருங்கி விடுகிறது. அதுவரை பயன்பட்டு வந்த மொழி ஒரு காட்சியை (உணர்நிலையை) விவரிக்க முடியாது திகைத்து நிற்கும் தருணமே இந்த புதுமை நிகழ வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. ஆகவே காரில் ஓட்டுனர் மாறும் போது சிறிதே திருகி கோணம் மாற்றப் படுகிற கண்ணாடியைப் (side mirror) போல கவிதை செய்பவனும் அவன் இசைவுக்கு ஏற்ப  மொழியைத் திருப்ப வேண்டியதாகிறது. ஓட்டுனர் எவரானாலும் அவர் கோணம் எதுவானாலும் அவர்கள் அனைவரும் அடைய எத்தனிப்பது கவிதையின் காட்சியை மட்டுமே. இந்த குறிப்பிட்ட தேவை எழாமல் செய்யப்படும் மொழித் திருகல் உண்மையில் காட்சியை மறைப்பதாக முடியும்.

முற்றிலும் புதிய ஒன்றை அறிவிப்பது தான் கவிதையா என்றால் இல்லை. ஏற்கனவே பலமுறை எடுத்து இயம்பப்பட்டதை புதிய ஒரு சாளரம் வழியாக முதன்முறை பார்ப்பவன் புதிய ஒன்றையே பார்க்கிறான். அதை அவன் கணிதம் வழியாக அளித்தாலும் அது கவிதையே. சுழியம் அழகிய ஒரு கவிதை அல்லவா? ஐன்ஸ்டீனை நித்யா கவிஞர் என்றும் எண்ணினார் இல்லையா?

நோக்கமின்மை இருந்தாலும் கவிதையில் கவிஞனின் பாவனை (ஃபாவம்) தவிர்க்க முடியாதது. இளமையை படைக்கும் ஆண்டாள். அலைதலும் இருத்தலும் இரண்டிற்கும் இடையிலும் உழல்தலும் என விக்ரமாதித்யனின் பல்வேறு பாவனைகள். வற்றிய முலைகளுடன் பேயாக படைக்கும் காரைக்கால் அம்மையின் பாவனை. தீவிரத்தில் ஆர்வங்காட்டாத சிறுவன் எனும் இசையின் பாவனை. இந்த கவிஞர்களுக்கு மேலும் பல்வேறு பாவனைகள் உண்டு. நான் எனக்கு பிரதானம் என தோன்றிய வற்றையே இங்கு சொல்கிறேன். ஆக கவிதை செய்பவனுக்கு நோக்கமில்லை என்றாலும் அவன் புனைந்த பாவனைகள் ஏராளமுண்டு. கவிதை செய்பவனின் பாவனையை நோக்கம் என நாம் குழப்பிக்கொள்ள வாய்ப்பிருப்பதாலேயே இதைப் பற்றி இங்கு விரிவாக கூறிப்பிடுகிறேன்.

காலம் மாறுவதால் நின்று நோக்கும் இடமும் கோணமும் மாறி காட்சியும் மாறி விடுகிறது. அதனால் தான் அந்த என்றுமுளது பற்றி தொடர்ந்து கவிதை எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறது.

குக்கூ சிவராஜ் ஒரு முறை என்னிடம் பேசும்போது

ஏய் ! கீச்சுக்குருவியே
நேற்றிரவு
உனக்கும் மழை
எனக்கும் மழை

எனும் என் கவிதையை மிகவும் சிலாகித்து பேசவும் நான் திகைப்படைந்தேன். இது உண்மையில் அவ்வளவு பெரிய கவிதையா? முதலில் இது கவிதையா?

என் நண்பன் அருண்மொழி சொன்னது போல ஒரே மரத்தின் அடியில் அந்த இரவை கழித்த இருவர் மட்டுமே பேசிக் கொள்ள முடிந்த கவிதை இது. சிவராஜ் போன்ற ஒருவரே அந்த குருவியிடம் கணியனின் வரியொன்றை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ சொல்ல முடியும். சிவராஜ் அதை சொல்வதற்கு மீண்டும் இன்றைய கவியொருவன் தேவையாகிறான். வெது வெதுப்பான அறையில் தூங்கி எழுந்தவர்க்கு இது கவிதையாகும் தூரம் செலவேறியது.

கவிதையில் காலந்தொறும் தன் கதி மாறியும் விலகியும் செல்லும் நதி ஒன்று இருப்பதை நாம் காண நான் இங்கு எனக்கு பிடித்த மூன்று கவிதைகள் மூலம் விளக்க முயற்சிக்கிறேன். நான் ஒன்று போலிருக்கும் மூன்று கவிதைகளை பற்றியே பேசுகிறேனே ஒழிய அதை எழுதிய கவிஞர்களை நிறுத்து அளவிடும் முயற்சி அல்ல இது. இப்படி எடுத்துக் கொள்ளப்படும் கவிதைகளை சில சமயம் ஒரே கவிஞர் எழுதியிருக்கவும் முடியும்.

1.

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை
.. ( தேவதேவன்)

2.

ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
ஒரு துளி காட்டை

சேர்ந்து பின்
செல்லுமிடமெல்லாம்
சலசலவென பேச்சு
………. (ஆனந்த் குமார்)

3.

தலை அறுபடும் முன்
வானை பறந்து பார்த்தது
ஒரு மீன்

விழுந்ததும்
உவந்து
தன் தலை அளித்தது
அத்துனூண்டு வானம்
………. (வி சங்கர்)

முதல் கவிதையில் மரணம் பறத்தலாக ஆகி, அடுத்த கவிதையில் பறந்து ஒரு கணம் காட்டை பார்ப்பதாகி, கடைசி கவிதையில் பறக்கும்போதே வானமாகும் இடத்தில் வந்து நிற்கிறது கவிதை என ஒரு பேச்சுக்கு சொல்லலாம் தான்.

தேவதேவன் கவிதையில் ரெண்டு மூன்று துள்ளலுக்கு பிறகு அங்கே மீன் மரித்து பின் பறவையாகிறது. எப்படி துள்ளினாலும் மீன் அல்ல பறவை தான் பறக்கிறது. ஆனந்த் குமாரின் கவிதையிலோ அந்த ஒரு துளி (அதுவும் ஒருவகையில் மீனே) துள்ளும் போது காடாகி விடுகிறது. ஆம் இனி அது வெறுமொரு துளி மட்டும் அல்ல. காடாகிய மொத்தம். மீண்டு அந்த காடு கடைசியில் சேர்வதோ தன் துளியிடம். சலசலப்புடன் அது ஒழுகிச் செல்கையில் காடானதன் தடயம் அதன் நினைவில் எஞ்சயிருந்தாலும் அது நினைவு தானே அன்றி நிலை அல்ல.

 வி. சங்கரின் கவிதையில் மரிக்கும் முன்பே அந்த மீன் ஒரு துண்டு வானம். அது தன்னைத்தான் பறந்து பார்க்கிறது. இங்கே அந்த கணநேர துள்ளல் நீண்டு நிலைத்து விடுகிறது. தரையில் விழுந்து மரிக்கும் முன்பும் அந்த சிறிய துளி ஒரு துண்டு வானமாகவே எஞ்ச விழைகிறது. அடுத்த காலகட்டம் அந்த துளியை என்ன செய்ய காத்திருக்கிறதோ? 

Sun tunnel

இறுதியாக, நான்ஸி ஹால்ட் என்ற அமெரிக்க கலைஞர் பற்றி நான் சில சொல்லியாக வேண்டும்.  உட்டா (utah) எனும் விரிந்த அமெரிக்க பாலைநிலத்தில் ஓர் ஆள் புகுமளவு மிகப்பெரிய கான்கிரீட் பைப்பகளை x வடிவில் அமைக்கிறார். Sun tunnel (சூரிய துளைப்பாதை ) என பெயடரிப்பட்டுள்ள அதன் வழியாக தினம் தோன்றி மறையும் சூரியனை நாம் பார்க்கலாம். என்றென்றைக்கும் உள்ளதெனினும் ஒவ்வொரு கணமும் நாம் அதில் காணும் சூரியன் தன் எண்ணிலா வண்ண வேறுபாடுகளுடன் பிறிதொன்றுதான்.

நண்பர்களே கவிஞன் என்றுமுள அந்த ஒன்றை, கணம் கணமென காலத்திற்கும் மாறும் அதன் எண்ணிலா வண்ண வேறுபாடுகளை, மொழியிலொரு துளைப்பாதை இட்டு நம்மை பார்க்க செய்கிறான். என் நோக்கில் நான்ஸி ஒரு மாபெரும் கவிஞர். நான்ஸியின் அருகிருந்துதான் என் அழகிய சிற்சாளரங்கள் வழியாக கவிதையை நான் காண்கிறேன். அதன் வழியே தான் உங்களுக்கும் காட்ட விழைகிறேன்.

நன்றி

(2026 புத்தாண்டிற்கு முதல் நாள் வெள்ளிமலையில் ‘கவிதையென்பது யாதெனில் ‘ எனும் கேள்வியை முன்வைத்து நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)