அன்னம் செய்விக்கும்
அருங் கலமென அமைந்தேன்

மண்ணை 
உந்தி சுழித்தேன்

ஈரப்பசையால் 
என் ஆயுள் கொண்ட மட்டும்
மண்ணையெல்லாம் இழுத்துப் பிடித்தேன்
 
உலைமேல் காய்ந்து கொதித்து
வாய்விளம்பி நிறைந்தேன்

காலம் வந்ததும்
மண்ணொடு மண்ணானேன்

அமையும் முன்
எதற்கும் நிற்காத
எங்கும் சென்று சேராத
ஒரு சக்கரத்தில்
பலகாதம் சுற்றிய பிறகே
ஆக்கியவன் கைகளில் குழிந்தேன்

அன்றி அவன் கை குழிந்ததோ?