நிறைய தப்பு பண்ணி வைத்திருக்கும் குட்டிக்காவியம்

1

இது தனக்கு தோன்றியதை தான்தோன்றித் தனமாக சொல்லிச் செல்லும் சொற்கள் எனில் ஆம் அது அவ்வாறே.

ஒரு டைரி குறிப்பாக இருக்குமெனில் ஆம் அது அவ்வாறே.

புதிதாக வந்த பூமி வாசிகள் தங்களைக் கண்டு கொண்ட கதை எனில் ஆம் அது அவ்வாறே.

இல்லை வெறும் ஏமாத்தலாட்டமும் முன்னும் பின்னும் முரணாக கிறுக்கிய பிதற்றலும் எனில் ஆம் அது அவ்வாறே.

வெறும் நாடகமெனில் ஆம் அது அவ்வாறே.

வெறுங் காகிதமெனில் ஆம் அது அவ்வாறே.

ஏனெனில் எப்போதும் அது அவ்வாறே.

நல்லவேளை இதைச் சொல்லி முடிச்சோம்.

இல்லயில்ல. ஆரம்பிச்சோம்.

2

இது கிரகம் நின்னோரா. காலம் சொல்வதற்கில்லை. தேவையுமில்லை. சும்மா ஒரு கதை தானே.

இங்கே பெரிதாக எதுவுமே கிடையாது. ஏனெனில் எதற்குமே பெரிதாவதை பற்றி ஒன்றுமே தெரியாது. சிறிதாக இருப்பதை பற்றியும்.

காலம் இங்கு பின்னோக்கி செல்லும். அதாவது தாத்தாவாக பிறந்து குழந்தையாக சாக வேண்டும். ஆனால் பிறந்தவுடன் உங்களுக்கு ஒன்றுந் தெரியாதென்பதால் நீங்கள் குழந்தையே.

குழப்புகிறது இல்லையா?

நாங்கள் பூமிக்கு வந்த போதோ இன்னும் குழம்பினோம். நாங்கள் என்றால் நான். அப்புறம் அவன். அதற்குமேல் கேட்காதீர்கள்.

எப்படி என்றால்? எல்லாம் விளையாட்டாகத்தான். விளையாட்டால் இத்தனை தூரம் வர முடியுமா என்பீர்கள் எனில் ஒரு சிறு ஊழ்நுட்பக் கோளாறு. சரியா?

நானும் அவனும் மல்லுக் கட்டிக்கொண்டிருந்த போது அந்த கல்லு குறுக்கே வந்தது. மூவரும் கீழே விழுந்தோம். மூவருக்கும் அடி. கல்லு அங்கேயே ஸ்பாட் அவுட்.  கதை முழுக்க அதை தூக்கி கொண்டு சுத்த முடியுமா? புதிய இடமான பூமி வேறு.

கோபத்தில் அவன் என்னை துரத்தினான். நான் ஓடி ஒரு பழைய டப்பாவை திறந்து உள்ளே அமர்ந்தேன். என்னைத் தேடி வந்தவன் நான் அமர்ந்திருந்த ஜன்னலோரம் தனக்கென்றான். மீண்டும் சண்டை.

எங்கள் குலுக்கல் தாங்காமல் மேலே பறக்க ஆரம்பித்தது அந்த டப்பா. அதன் குலுக்கலில் அவரவர் இடத்தில் அவரவர் அமர்ந்தோம். தூங்கி எழுந்து பார்த்தால் வேறு இடம்.

அது தான் உங்கள் பூமி. சரி நம் பூமி. அதிலின்று எங்களுங்கும் பங்குண்டு.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பூமியில் குழந்தையாக நான் பிறந்த பொழுது அப்பாவாக அவன் இருந்தான்.

பூமியில் ஜன்னலோர இருக்கையில் அமர்வது குழந்தையாம். அருகில் அமர்ந்தவர் அக்குழந்தையை பெற்றெடுத்தவராம். அல்லது பேணி வளர்ப்பவராம். (ரகசியம்: இரு இருக்கை மட்டுமே அப்பெட்டியிலிருந்தது. அவனுக்கும் ஜன்னலோரமே. ஆனால் அது திறந்திருக்கவுமில்லை. அவனுக்கு அது தெரிந்திருக்கவுமில்லை)

3

இப்படித் தான் நாங்களிருவரும் நின்னோராவின் முதல் அப்பா மகள் ஆனோம். இல்லை பூமியின் முதல் அப்பா மகள்.

அவன் கையிலெடுத்து முதன்முதலாக நாங்கள் எங்களைப் பார்த்து திகைத்து கொண்டோம். பூமியின் முதல் திகைப்பு.

எங்கு வந்திருக்கிறோம் என்ன செய்யவிருக்கிறோம் என்ற திகைப்பு. இதை எழுதி எடுத்து செல்ல வந்திருக்கிறோம் என்று அறியாதிருந்தோம் அன்று.

குழந்தையாக பிறப்பது இத்தனை தூரம் பிடிக்குமென்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை தூரம் வந்த பிறகு குழந்தையாவது எங்ஙனமென்றும்.

ஒன்று சேர்ந்தே தேடிடுவோம் என்றான் அவன். அவ்வண்ணமே என்றேன் நான்.

4

பிறந்த சிற்சில கணத்தில் சூரியனிடம் என்னை ஏந்திக் காட்டியது பூமி.  பூமியின் முதல் புன்னகை அல்லவா நான்?

பூமியோ புத்தம் புதியவிடம் எனக்கு. நமக்கு பிடித்த ஞாபகங்கள் வருமிடம் நமக்கு பிடித்த இடம் தானே. நின்னோராவின் நினைவு வரும் பூமி எனக்கு பிடித்து போனது. இங்குள்ளதனைத்தையும் நம்பி நான் புன்னகைத்தேன்.

மீதி நேரமெல்லாம் நின்னோரா செல்வதை பற்றிய அழுகை. வந்த சில நாட்களுக்குள் அழுகையை நிறுத்தி சிறிதே இமை மூடினால் கண் வளரும். கண் வளர்ந்தால் தூக்கம் கனவுகளைக் கொண்டு வருமென்றறிந்தேன்.

கனவுகள் எனக்கு நின்னோராவையும் அதன் நரிகளையும் கொண்டு வந்தது. ஒருநாள் அந்நரிகள் நின்னோராவை கொண்டு வர மறந்தது. நானும் கேட்க மறந்தேன். பூமிக்காரியான எனக்கு நினைக்க வேண்டியது நிறைய இருந்தது.

இடையில் இந்த அம்மா வேறு. எழுப்பி எழுப்பி பால் கொடுக்கிறாள். ஆனால் இதுவோ அப்பா மகள் கதை. அவளை இங்கு என்ன செய்வது?

5

பிறந்ததும் எனக்காக அவன் செய்ய வேண்டியிருந்தது பெயரிடுவதொன்றே.

இப்பூமியில் அம்மா அளித்த பாலுக்கு நிகராக அவன் அப்பெயரை எனக்கு அளிக்க வேண்டியிருந்தது.

அப்பெயரை நான் உங்களுக்கு சொல்ல போவதில்லை. அம்மா அளித்த சீம்பாலை உங்களுக்கு சொல்ல முடியுமா? நான் பிறக்கும் முன்பே அவன் நெஞ்சில் எனக்காகவே ஊறி வந்த சீஞ்சொல்.

வாழ் நாளெல்லாம் நான் அதை உறிஞ்சினேன். எனக்குரிய அமுது அது. ஒருவேளை அவன் அளித்த முதல் முத்தம். பூமியின் முதல் முத்தம்.

6

இது நான். அதாவது அவன். நின்னோராவில் அப்படியொன்றும் அழகிய பெயரில்லை எனக்கு. அவள் பூமிக்கு வந்த கணமே எனக்கு பெயரை அளித்தாள்.

அதன் பொருட்டே அவள் மண்ணிலிறங்கும் வரை நான் என் முன்னிருந்த எச்சாளரமும் திறக்காதிருந்தேன். அதன் வழி எனக்கில்லாத வேறு பெயர் வந்து விட்டால்?

யாத்திரையில் இருப்பவனுக்கோ பெயரில்லை. பாலை நடுவிருக்கும் குளிர்ந்த கல்மண்டபம் எனக்கு அப்பெயர். அதிலேயே தங்கி அதையே தொட்டு முகர்ந்து நாவில் நனைத்து அவ்விரிவெலாம் கண்டு வாழ்ந்திருப்பவன் நான். அவள்கண் பூமியில் சுரந்த அப்பெயரோ நீர். பூமியின் முதல் அழுகை.

சிறிதும் பெரிதும் அறியாதவன் வேண்டிப் பெற்றதல்லவா பெயரளித்த அவ்வுயிர்? கிடைத்த அவ்வுயிரால் பூமியை நான் மிக விரும்பினேன். அரிதான ஒரு பொருளை நாம் கண்டெடுக்குமிடம் நமக்கு பிடித்த இடம் தானே. அடுத்த நாளும் ஆவலுடன் அவ்விடத்திற்கு செல்வோம் இல்லையா?

ஆனால் எனக்கு நான் கண்டெடுத்த அவ்வுயிரே அவ்விடம். தினம் அங்கு சென்றேன். என் வாழ் நாளையே  நான் அங்கிருந்து எடுத்து என் கையில் வைத்து உருட்டி உருட்டி பார்த்தேன்.

7

புதிதாக பிறந்திருப்பதால் எங்களுக்கு பூமியின் சிக்கல்களும் புதிது.

மற்றவர்களும் இங்கு அப்படி வந்தவர்கள் தானே. அவர்களுக்கு எதிலுமே சிக்கல் இருப்பதில்லை. கேட்டால் எல்லோருக்கும் எல்லாமே தெரிந்திருந்திருக்கிறது.

அவர்கள் கற்றதுவோ, நாங்கள் ஒன்றைச் செய்யும்போது செய்வதறியாது தவித்து எங்கள் அருகில் நின்றது. நாங்கள் கற்றதுவோ, அறியாது நாங்கள் ஒன்றை செய்த பிறகு எங்கள் அருகில் வந்தது.

8

பூமியில் வேடங்களைத் தேர்வதில் மட்டும் எங்களுக்குள் என்றுமே சச்சரவு. சிக்கு விழுந்த கயிற்றின் வெவ்வேறு முனை எங்கள் வேடம்.

அவன் முத்தமெனில் நான் எச்சில். நான் எச்சில் எனில் அவன் நாக்கு. அப்புறம் அவன் அவன் நாக்கு. நான் என் நாக்கு.

நான் கரடியென்றால் அவன் குட்டி. நான் குட்டியென்றால் அவன் வேறொரு குட்டி. எப்படியானாலும் விளையாட்டு ஒன்று தானே.

வேடத்தை விட்டு தருவது அவனுக்கோர் விளையாட்டு. வேடம் கிடைத்ததும் விளையாட்டை விட்டுத்தருவது எனக்கோர் விளையாட்டு.

விளையாட்டை விளையாடாமலிருப்பது இருவருக்குமோர் விளையாட்டு.

9

என் கண்கள் ஒரு வண்ணந்தின்னிக் குழி. அதில் வண்ணங்கள் வந்து விழுந்தபடியே இருந்தது.

வண்ணத்தில் வயதுமில்லை. அது என்னோடு பிறந்து என்னோடு மடிவது. வண்ணமே எனக்கு ஊட்டியது. வண்ணமே எனக்காக ஊறி வந்தது. வண்ணமே அதை வாய் உறுஞ்சியது.  இவ்வுலகமோ வண்ணத்தின் மேல் வண்ணம்வைத்து திடமேற்றபட்ட வெளி.

உள்ளதனைத்தும் வண்ண வேறுபாடுகள். சருமத்தில் வண்ணம் வந்துதித்து மறைவதே நாள்.

வண்ணம் வனைந்தெடுத்து வண்ணந் தாங்காமல் அலைவுறுவதே உடலில் உயிர். உலகில் நீர். அவ்வண்ணமே எனக்கு அவன்.

10

ஒலியாலானது இவ்வுலகு. வண்ணமோ வெறுந்தோற்றம். வண்ணத்திற்குள் உள்ளது வெளி. வெளியிலோ காற்று. காற்றோ தூய ஓசை.

ஒலியால் நான் அவளை தொட்டு தூக்கினேன். அவளோ என் செவிநிறைந்து கிடந்தாள்.

ப்ச்ச்ச் என உதடு பிரியும் ஒலி. உறக்கத்திலிருந்து கனவு பிரியும் ஒலி. கனவிற்குள் ஓடியதன் நெஞ்சம் ஏறியிறங்கும் ஒலி.

முகத்தசைகளின் ஒலிமாற்றமே நாளின் பருவம். அழுகையே பற் பல வண்ணம்.

முலை ஊறுவதன், வயிறு நிறைவதன் ஒலியே புவி ஈர்ப்புவிசை. ஒலியில் ஓடுகிறது உயிர். ஆனால் அவ்வொலியோ சொல்வதற்கு ஏதுமின்றி உறங்கி தள்ளுகிறது இப்பூமியை. தூங்கி எழுந்தும் உலகை கேள்வியாய் கேட்டு தள்ளும் ஒலி அவள்.

11

நான் தான் இந்தக் கதை பேசுகிறேன். விட்டால் என்னை கண்டு கொள்ளாமல் இப்படியே மாறி மாறி புகழ்ந்து தள்ளுவார்கள் இப்பூமியை. இனி கதையை கதை தான் தள்ள வேண்டும் போலிருக்கிறது.

அவரவரை பற்றி பேசும் ஆவலில் கதை சொல்பவர்கள் எப்போதும் என்னை மறக்கிறார்கள். இம்முறை என்னை சொல்ல நானே வந்திருக்கிறேன்.

இவர்களை இங்கேயே சுற்ற விடுவது நல்லதல்ல. பொறுப்பற்ற இந்த புது பூமிவாசிகளை எதையாவது காட்டி என்னை நோக்கி நகர்த்த வேண்டும். நகர்வே நான். நிற்பவனிடம் பேச எனக்கு நேரமில்லை.

நானொருவன் இங்கிருப்பதை நீங்கள் மறக்க வேண்டாம். பூர்வகுடிகளான நீங்கள் கதையை மதிப்பவர்கள். இந்த நின்னோராகாரர்களோ மரியாதையற்றவர்கள்.

11

இதில் கதையெல்லாம் ஒன்றும் இல்லை. எழுதப்படும் எல்லாவற்றிலும் தான் இருக்க வேண்டுமென்ற போராசை அந்த கதைக்கு.

எங்களை கூறவே நாங்கள் இங்கு வந்தோம். இது எங்கள் கதை. வேறு கதையை ஏன் உள்ளே விட வேண்டும்?

இது தான் 11 . 11 க்கு முன்னிருப்பது எப்படி 11 ஆகும். இதிலிருந்தே கதை சொல்வதெல்லாம் பெரும்பொய் என ஊர்ஜிதமாகிறது பார்த்தீர்களா? நீங்கள் அதைப் படிக்க வேண்டாம். படித்து இங்கு வந்தால் திரும்ப போய் மறக்க வேண்டியிருக்கும்.

கதை உங்களை பொறுப்பாக நடக்கும்படி கேட்பான். ஓரிடத்திலேயே நீண்ட நேரம் உட்கந்திருக்க வேண்டுமென்பான். எப்படியும் ஐம்பது பக்காகலாவது ஆகும். அவசரமென்றால் அடக்க முடியுமா நம்மால்? அவனை சேர்க்காமல் இருப்பதே நலம்.

12

அம்மாவுக்கு நான் கிருமிகளோடே பிறந்தேன். கிருமிகளும் அவள் வயிற்றிலிருந்தே வந்தன.

இங்கு அனைவரும் இறப்புடனே பிறக்கிறார்கள். இறப்புடன் வாழவும் செய்கிறார்கள். அம்மா அதை அஞ்சினாள். அவனோ அதை நினைத்து அஞ்சவே அஞ்சினான்.

நானோ ஓய்ந்த வேளையிலெல்லாம் என் கையிலெடுத்து எனக்கு ஊட்டினேன் அக்கிருமிகளை. அதற்காகவே முதன்முறை தண்டிக்க பட்டேன். இவ்விவகாரத்தில் அவன் கூட அம்மாவின் பின்புறம் போய் ஒளிந்து நின்றான்.

அப்பாவில் எப்பவும் ஒரு கெட்ட அப்பா உண்டென்பதை அன்று அறிய ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் அந்த ஜன்னலோர இருக்கையை அவனுக்கே அளித்திருக்கலாம் என தோன்றாமலில்லை.

இப்பூமியே ஒரு பெரும் கிருமிக் கட்டுமானம். இப்பூமியை எங்கும் தொடாமல் பார்க்கவா பாவம் பிள்ளைகள் அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்கிறார்கள்?

13

ஒஓ.  இவ்வளவு நேரம் இங்குதான் இருந்தான். தண்ணீர் குடிக்கவோ, சிறு நீர் கழிக்கவோ சென்றிருப்பான்.  கொஞ்சம் பொறுமையுடன் காத்திருங்கள். இதோ வந்துவிடுவான். நான் பக்கத்து அத்தியாயத்தில் இருக்கிறேன்.

14

ஆழியிருள் ஒளியலை. இருளில் துவங்குகிறதனைத்தும். அலையில் வந்து சேர்கிறதனைத்தும்.

இருள் ஒரு கரு. அதிலிருந்து கொணர்வதே ஒளி என கொள்க. நான் இருள் காணாது இங்கு வந்தேன். வந்தவிடத்தில் இருள் காணவும் ஒளி பேணவும் நின்றேன்.

ஆம். இருளிலாது இவ்வுலகிலை. என் இருள். அவன் இருள். முடிவிலி இருள்.

கனவில் தோன்றும் இருள் நோக்கி நான் என் கையசைப்பேன். விழிப்பில் தெரியும் ஒளியை கையணைப்பேன்.

இருளும் ஒளியும் அருந்துபவை மனத்தின் மதலை. அங்கு தூயதும் அழுக்கும் இல்லை. அங்கிருப்பது அங்கிருப்பதே. அங்கிருந்து எடுக்கிறது ஊற்று. ஊற்றிலிருந்து ஓடி வருகிறதை பகிர்ந்து உண்போம். நீயும் நானும். நாமும் அனைத்தும்.

என்னிலிருந்தும் உன்னிலிருந்தும் ஊற்று எடுத்து ஓடுக களியும் பித்தும் ஒளியும் இருளும். ஆம் என்றே ஆவது அனைத்தும்.

15

நான் இருளை நம்பினேன். ஒளிவருமிடமது என தெரிந்து அதன் முன் நின்றேன்.

அவளிடமிருந்து ஒன்றே வரக் கண்டேன். அதையே ஒளி எனக் கொண்டேன். ஒளியிலாத ஒன்றே ஒளியாகும். இருளிலாததே இருள்.

வாழ்விலாததே வாழ்வு. வடிவிலாததே வடிவு. பூமியிலாததே பூமி என அறிந்தேன். அங்கிருந்தே வந்தன அனைத்தும். அதையே இங்கு வைத்து வாழ்ந்தனர் பூமியினர். அதையே தொழுது உழன்றனர்.

அதையே நாங்களும் அறிந்தோம். அதுவே அறிந்தது என்றானது.

16

பொய்யிலிருந்து பிறக்கிறது ஒளி. ஒளியிலிருந்து உண்மை. அவள் இடையறாத பொய் என திகழ்ந்தாள்.

பொய் வாங்கும் கலம் என அருகில் நின்றிருந்தேன் நான். ஒன்றுமறியாதவன் கலத்தில் விழுவதொன்றும் பெருவரம். தாகத்திலிருப்பவனுக்கு நீர். அருந்தியவனுக்கு மெய். தயங்கியவனுக்கோ தாகம்.

ஊற்றருகில் நின்று தாகமெடுத்து அலையும் மனிதர்களே! ஊற்று ஓடித் திரிகிறது உங்கள் வீட்டு கூடங்களில். ஊற்று உறங்குகிறது உங்கள் வீட்டு தூளியில். ஊற்று வந்து ஊட்டுகிறது தன் எச்சிலை. எடுத்து பருகுக. நாவில் தெளிவற்றதே அவ்வுண்மை. தொண்டையில் இறங்குபோதே அது சுவை. உடலில் அது மதுரம். நினைவில் அது அமிழ்தம்.

நினைத்து நினைத்து எடுத்து பார்க்கும்போது அது மரகதம். மணி. அரியதோர் பொக்கிஷம். அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி உங்கள் வீடு வந்திருக்கிறது. கொள்க. நான் கொண்டதை சொல்கிறேன். அதையேனும் கொள்க!

17

பூமியில் உயிர்கள் பெறவதனைத்தும் பிறிதொன்றின் எச்சில். மண் புழுதன் எச்சிலையே பூமி உண்கிறது. சூரியனின் எச்சிலே இலைகள் உண்ணுவது. இலைகளின் எச்சிலே பூவாகி கொட்டுகிறது. புள் பூண்டு எச்சிலே கனிகளில் வன்னமிக்கிறது. கனிகளின் எச்சிலோ ஊன் ஆகிறது. ஊன் எச்சிலே மண் வாயில் இனிக்கிறது.

எச்சிலே முத்தம். எச்சிலே அமுதம். எச்சிலிலிருக்கிறது உயிர்தொகை. அவள் தவழ்ந்து தவழ்ந்து எச்சிலை நிறைத்தாள் கட்டாந்தரையில். கட்டாந்தரையே பூமியானது.

எச்சில் ஊறிய வாயில் அவள் எடுத்து போட்டதன்றோ இவ்வுலகம். மண் எடுத்திட்டாள். மணி எடுத்திட்டாள். எறும்பு எடுத்திட்டாள். ஏனைய அனைத்துமிட்டாள்.

அமுதில் ஊறி அழியாதிருந்தது இப்புவி. சாரமளித்து அவள் துப்பிய பின்பே உயிர்கள் உயிர் பெற்றன.

மண் வளமானது. மணி துலங்கியது. எறும்போ பெருகியது. ஏனையதெல்லாம் என்றென்றைக்குமானது. அவள் துப்பும் எச்சிலே! உனை வாயிலிட்டு வாழ்வம்.

18

பாலாழியின் தண்ணீர் முழுக்க அவள் மணிக்கதவின் தாழ் திறந்து ஊற்றிய வண்ணமிருந்தது.

அவள் எதையும் நனைத்த வண்ணமே கிடந்தாள். துர் என ஒரு நாற்றம் ஒலித்த வண்ணமிருந்தது அவள் துணியில். அவ்வொலிக்கோ ஒரு வண்ணமில்லை. மஞ்சள் வந்ததொரு முறை. பசும்பொன் வந்தது மறுமுறை. கன்னங் கரும்பொன் வந்தது முதல்முறை.  செக்க சிவந்திருந்த பொன் வந்தது என்றோ ஒருமுறை.

எத்தனை பெரிய ஊற்றாயினும் ஊறி வருவதெல்லாம் உப்பு. கடலை கடைந்தவன்று உப்பே அமுதமாகி வந்தது. வாயில் வழிந்து வருகிறது அமுதம். கீழே திறந்து ஓடுகிறது ஓயாத அலைவிக்கும் கடல்.

கடலிலிருந்து அமுதை கடைந்தெடுக்கும் இம் மத்துயிர் ஓர் இடத்தில் நிற்க ஒன்னுமா? நாலாபுறமும் சுற்றி சுழலும் ஊழே அவளுக்கு.

உப்பும் அமுதமும் ஒன்றான ஆழியில் கைதப்பி குளிக்கும் இவ்வுயிர் என் முன் நடிப்பது புவியின் பூர்வீகத்தையல்லவா?

நிலமும் நீரும் ஒன்றென வாழ்ந்தவள். வெளியும் தீயும் ஒன்றெனப் பார்த்தவள். ஒலியும் வண்ணமும் ஒன்றெனக் கேட்டவள். ஆதலால் கற்க ஏதுமிலாது காலாட்டி துயின்றவள். அருகில் அமர்ந்திருந்தவன் நான்.

19

‘அம்மாவுக்கும் அவள் அம்மாவுக்கும் அம்மாவானவர்கள் எல்லோருக்கும் வந்தது அவர்களை ஆள் செய்விக்கும் ஓராள்’ என்று கதை சொல்ல ஆரம்பித்தான் அவன்.

‘டேய். அதை அம்மா சொல்ல வேண்டும். அன்றெல்லாம் என்னோடு விளையாடியவன் நீ. நாம் எதையும் மறைக்க வேண்டியதில்லை. மற்றும் இந்த கதையோடு நீ சேர்வது எனக்கு பிடிப்பதில்லை. அவனுக்கு நிறைய புழுகினிகளே நண்பர்கள். நாம் அப்படியா?’ என்றாள் அவள்.

நின்னோராவில் நமக்கு உண்மையும் பொய்யும் சொல்லத் தெரியாது. நம் கதையில் பொய்யோ உண்மையோ இருந்தால் யாருக்கும் அது புரியாது. பூமியில் கெட்டு போகாத எதுவுமே இல்லை. நீயின்று பூமியிலிருக்கிறாய். மறந்து விடாதே.

இனி இந்த எழுத்தையும் நானே சரி செய்ய வேண்டுமா? இந்த பூமியில் எல்லாமே என் தலையிலேயே விழுகிறது. அமுதும் உப்பும் கடைந்து அதை சட்டியில் ஆக்கி வைத்து இப்போது நானே உங்களுக்கு ஊட்டியும் விட வேண்டுமா? அவனவன் கையிலெடுத்து மென்றால் என்ன?

ஆம். அம்மாவுக்கு வேலை. அவனுக்கு விளையாட்டு. யார்தான் செய்யவில்லை வேலை?  அவன் பூமிக்கு புதுசு. அப்புறம் சின்னஞ்சிறியவன். பாலகன்.

கொஞ்சம் அத்தியாயம் கடந்தால் எல்லாம் சரியாகி விடும். கதையோடு சேர்ந்து கொஞ்சம் மழுங்கி விட்டான். இனி அந்த கதைப்பயல் இந்த வாசலை மிதிக்கட்டும். அவன் காலை உடைக்கிறேன்.

சரி இதையே பார்த்து படித்து வேறெங்கும் போகாமல் எங்களுடன் சுற்றுகிறீர்களே. உங்களுக்கெல்லாம் என்ன வேலை?

போகட்டும். இருந்து கேட்டுவிட்டே செல்லுங்கள். பிறகு இது உங்களுக்கு கிடைக்காது போகலாம். திரும்பும் போது இக் குறிப்புகளை நான் நின்னோரா கொண்டு செல்வேன். அங்கே இதுபோன்ற எண்ணம் பொறிக்கப்பட்ட தாள்கள் இல்லை. ஒன்றிரண்டை விற்கவும் செய்யலாம்.

20

‘டேய்.. இனி இப்படியே தவழ்ந்து கொண்டிருக்க முடியாது. அதுவும் நான் கிடப்பது முழுக்க எச்சிலும் வீச்சமடிக்கும் சிறுநீரும். கேட்டால் அமிழ்தம் உப்பு என்று கதை வேறு.இன்னும் ரெண்டு மூன்று அத்தியாயம் வரை பார்ப்பேன். அதற்குள் நான் பேசியாக வேண்டும். நடப்பதை பிறகு பார்ப்போம்.’

‘ஒருவேளை தவறு நடந்து விட்டால்?’

‘அய்யோ….நான் என் கால் வைத்து நடப்பதைப் பற்றி சொன்னேனடா. நடப்பதற்கு முன் பேசுவதென்பது இங்கே வழக்கத்தில் உள்ளது தான். நீ அதுபற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.’

‘கதை என்று தன்னையே தூக்கி குதிப்பானே அந்தப் பயல் இப்படித்தானே பலதும் சொல்லி இவர்களை நம்ப வைக்கிறான்’

21

நடப்பதே நடக்கும். நடக்காதது பேசும். அவள் சொன்னதே நடந்தது.

தால் எடுத்து வைத்து அவள் வீடு முழுக்க நடந்தாள். ஓர் ஓர் அடிக்கும் சரிக்கினாள். உதடு குவித்து ஊதி காற்றில் கால் வைத்து அவள் நடை பழகினாள்.

அவள் முதல் அடியை கண்டவர் கேட்டவர் யாருமில்லை.  எப்போதும் தெய்வம் எடுத்து தருவதில்லையா அது?

இங்குள்ள அனைத்திற்கும் அவள் பெயரிட்டாள். பூச்சி பூண்டுகள் அவளிடம் மீண்டும் மீண்டும் பெயர் வாங்க அன்றன்று இறந்து மீண்டும் பிறந்து வந்தன..

பறவைகளோ அன்றொரு பெயர் வாங்க அலகில் புதுப்புது ஒலி எழுப்பிப் பார்த்தன.

பூமியோ ஒரு பெயர் போதாமல் தன்னை கல்லாகவும் மண்ணாவும் கடலாகவும் அதிலெல்லாமுள்ள உயிராகவும் ஆக்கி அவளிடம் வந்தது.

கதிரவனோ ஒவ்வொரு நாளும் வேறொருவன் என வேடமிட்டு நடித்து வந்தான் அவளிடம்.

நிலவோ  ஒற்றை ஒரு பெயருக்காக இரவெல்லாம் அவள் வீட்டு வாயிற் படியில் விழுந்து கிடந்தது.

அவள் இட்ட பெயர்களே மொழியாயின.  அவள் விரல் மண்ணில் அலைந்ததே சொல்; நீரில் அலைந்ததோ பொருள்; காற்றில் வனைந்தது கவி. அவ்விரல் வெட்ட வெளியிலிருந்தது மெய்.

தனி

இப்பூமியில் காமத்தில் நிறைந்திராதவனுக்கு அவனில் பிறக்கும் காமமே காமம். அதையே அவன் கையிலெடுத்துக் கொஞ்சினான். முத்தி முழுக்காட்டினான். எச்சிவாய் உண்டான். அருகில் அணைந்து துயின்றான். தன் கண்ணெல்லாம் வைத்துக் கண்டான்.

அக்காமமோ அவனை காமுறும். காமத்திற்கே அளித்தவன். இரு இருள் முயங்கி ஒரு சுடராகும் காமம். மலர் அறியாது முயங்கி மீண்டுவந்து மலரமரும் சுகந்தம் அக்காமம். நாளும் புதிதாவது மலர். முயங்குவதோ அதே திகழ்.

அன்னையும் பிள்ளையும் என அவர்கள் இங்கு காமங் கொண்டாடித் தீர்த்தனர்.

அதில் முளைத்து சொட்டியது முலை. முலையில் சொட்டியது அமுது. அமுதின் கடையில் நின்றது சிறு நஞ்சு.

நஞ்சொன்றும் அமுதொன்றும் மாந்தி களித்தனர் அவரவர் முலைகளில்.

தன் முலை தானென்றான அக்காமத்தை கொண்டாடுக!

22

வவ் வவ் வவ் வு  ஊ ஊ  ஊ

வவ் வவ் வவ் வு ஊ ஊ  ஊ

என்னதிது என்னதிது என்னதிது

ஹ்ப் ஹ்ப் ஹ்ப் ஹ்ப் புது வாசம்.

பூமியின் முதல் வாசமா?

அதுவே தானா?

ஆகா இதுவொரு குட்டி.

ஆமாம் ரொம்ப குட்டிக் குட்டி.

இல்லை நல்லா மோந்து பார்ப்போம்.

ஓகோ எனக்கு தாங்கவில்லை.

உண்மையிலேயே இதுவொரு குட்டி.

என்னுடைய புது குட்டி.

நான் விளையாடத்தான் கொணர்ந்திருக்கிறார்களா? நினைத்தேன்.

வண்டி அங்கு வரும் போதே மோப்பம் பிடித்தேன். எனக்காக ஏதோ வாங்கி வரும் வாசனை வந்தது.

போதும் ஓடியதை நிறுத்துவோம். சந்தோஷத்தில் எனக்கு தலை கிறு கிறுப்பது போலிருக்கிறதே. அந்த பக்கத்து வீட்டு குட்டை வாலனுக்கு சொல்ல வேண்டுமே.

டேய் டேய் டேய் வவ் வவ் வு ஊ ஊ . குட்டை வாலா ஆவ் ஆவ் வு ஊ ஊ.

எங்க வீட்டில் புது குட்டி. எனக்கு குட்டி. இந்த வீட்டு அப்பா கொண்டு வந்தார். ரொம்ப குட்டியான குட்டி.

ஆகா அவர்கள் எல்லாம் எங்கே? குட்டி படுக்கையில் போட்டிருப்பார்கள். நான் போய் பார்க்க வேண்டாமா? நகருங்கள். நகருங்கள். என் குட்டி. என் வீடு. என் வீட்டு அப்பா. இது என் சோபா. தெரியுமா?

இந்த குச்சிதான். எடு எடு சீக்கிரம். இதை கொண்டு போனால் உண்மையாகவே அக்குட்டி விளையாட வரும். குச்சியோடு வந்துட்டேன்.  வந்துட்டேன். குச்சி குட்டியான குச்சி. குட்டிகோட விளையாட தான் குச்சி.

‘………  ……  …….. … …’

வளர வேண்டுமா? நான் சோபாவில் படுத்து காத்திருந்தால் அவள் அம்மாவிடம் பால் குடித்து பெரிதாவாளா? பெரிதாகவில்லை யெனில் ஏன் கை காலை இப்படி ஆட்டுகிறாள். இவர்கள் யாரும் இல்லா போது தனியாக அவளிடமே ஒருமுறை கேட்டு பார்க்க வேண்டும். வீட்டில் இப்பவெல்லாம் ரொம்ப ஏமாற்றுகிறார்கள் நம்மை.

வவ் வவ் வவ் டேய் டேய் டேய் குட்டை வாலா

உன் வீட்டருகில் ஏதோ புது வண்டி பார் வண்டி வண்டி டா டேய் யி ஊ ஊ ஊ.. நல்லா பார்…

23

ஆம். அவள் தான். நம் புதியவள். எத்தனை புத்தம் புதியவள் பார்த்தாயா?

அம்மா.. அவளுக்கு வால் ஒன்றையும் காணோமே?

என்னழகு அணிப் பிள்ளாய்! வால் பண்ணும் வழி அவள் அறிவாள். அது என்றும் அவளுடனிருக்கும். வெளித் தெரிவதையே நறுக்க முடியும். அது அவள் உள்ளில் வளர்ந்து பூப்பெய்துவது என் செல்லமே.

அம்மா… அப்போ என் வாலும் நறுக்கப்படுமா?

இல்லை குட்டி பயலே! நீ மரத்திலிருந்து மரம் தாவுகிறாய். வால் இல்லாமல் நீ இங்கு உயிர் வாழ முடியாது. அதுவே நீ பெரிதாகும் போது வலிபெற்று உனை காக்கும். தொய்வற்றவனாக எந்நிலையிலும் சரியாதவனாக அந்தரத்தில் நிலை நிற்பவனாக உன்னை ஆக்கும்.

வாலை பேணுக.  உன் வழித்தொடர்ச்சி பிறிதொரு வாலின் வன்னத்தூவி. அங்கிருந்து வந்ததே நம் வால்.

உலகின் எந்த குட்டியும் ஒரு வாலே. அதனுயிர் முதலில் மின்னுமிடம் வால்.

நமக்காக மண்ணில் படிந்து வானைத் துழாவும் சுடர் அது.

அவள் வாலே !

அவள் முலையுண்டு வளர்க!

அவள் ஊன்னுண்டு சுடர்க!

அவள் வாலே!

அவளுக்கு அவளை காட்டுக!

அதிலிருந்தே அவள் வழி தேர்க!

அதுவே வழித்துணை என அமைக!

‘அம்மா… அதனால் தான் நான் எப்போதுமே என் வாலை கட்டியணைத்து உறங்குகிறேன். இது என்றுமென் செல்லம். என் குஞ்சுக்குட்டிவால் உனக்கு உம்மா’.

24

வீட்டிற்கு வந்து விட்டாளா நம்மவள்? யாரேனும் அவளை பார்த்தீர்களா?

அவள் கண்களை பார்த்தீர்களா? நான் பொறுக்கி வரும் அழகியவொரு தானியமல்லவா அது?

அவள் மூக்கை பார்த்தீர்களா?

நான் ஏறி சருக்கியாடும் மணல் மேடல்லவா அது?

அவள் கொவ்வாய் பார்த்தீர்களா?

நான் கொண்டு வரும் அரியகனியல்லவா அது?

அவள் விரல்களை பார்த்தீர்களா

நான் மென்றுவரும்  நுனிபுல் அல்லவா அது?

அவள் பொன்கேசம் கண்டீர்களா

நான் குடும்பம் வைத்து வாழும் வீடல்லவா அது?

ஓ…அவள் பாதங்கள் பார்த்தீர்களா?  நான் ஊர்ந்து விளையாடும் ஒரு ரோஜாப் பூவல்லவா அது?

அய்யோ….அவள் மேனியை பார்த்தீர்களா? நான் சுற்றி பறக்கும் பொன் பூத்த மலைக்காடுல்லவா அது.

ஏய்…அவள் சிறு நீர் கண்டீர்களா? நான் குடித்து  நிறையும் அமிழ்தகுளமல்லவா அது.

டேய்…அவள் குருதி யாரேனும் கண்டீர்களா? நான் சுவைத்து மிகிழும் இன்னுணவல்லவா அது.

என்ன அங்கே சத்தம்.. தினமும் அதிகாலை அந்த மலை நடுவிலிருந்தெழும் நான் கண்ணார காணும் கண்ணல்லவா அவள். நான் ஓய்ந்து உறங்கும் வேளை உறங்காத என் கண்ணேயல்லவா அவள்? தெரிந்து கொள்ளுங்கள்! அவளை வருத்துவோரைக் காய்வேன். அவளை பேணுவோரை முத்திக் குளிர்வேன். நானே அவள் கண்காணிப்பு.

தனி

வேடிக்கை பார்த்து நிற்பவர்களே!!                                                       

வானம் இவளை தினம் பாரத்து அந்த மாட்டுக்கு அங்கிருக்கிறது. இவளேயொரு வானவேடிக்கை அன்றோ? 

மாறி மாறி வேடிக்கை பார்த்து கொள்வதில் தானே வேடிக்கை. மாறாதிருப்பது தன்னை வேடிக்கையாக வைத்துக் கொள்வதில்லை. 

இங்கே அமர்ந்து உலகை வேடிக்கை பார்த்து மகிழ்வது மழுங்கிய கண்மணி அல்லவா ? கூர்ந்த பார்வையே உங்கள் கண்மணியை அழ செய்கிறது.

அந்த கண்மணியை திறந்து பாருங்கள். அவை வெளியில் அலையட்டும். மூடி வைக்காதீர்கள். ஏனெனில் உங்களையும் உலகையும் நீங்கள் இருட்டாக்குகிறீர்கள். 

வேடிக்கையென்பது வெளியில் இருந்து உள்ளே வருவதா இல்லை உள்ளேயிருந்து வெளியே பார்ப்பதா? எல்லா உயிர்க்கும் இரண்டு கண்கள் அல்லவா?

தனி

வழியறியாது நடந்து சென்றார்கள் அவளும் அவர்களும்.

“நாம் ஏதோவொரு பழைய கனவிற்குள் வந்து விட்டோம். இருள் அதிகமாக உள்ளது இங்கே” என்றாள் அவள். “ஒரு சிறு விளக்கிருந்தால் எதையாவது பார்க்கலாம். அதோ அங்கு ஒரு அகழ்”. கதவு திறந்திருந்த ஒரு வீட்டினுள் காற்றில் நடுங்கிய படி எரிந்து கொண்டிருந்தது அது.

“அந்த சின்னஞ் சிறுவனின் முகச்சாயல் என்னை போல உள்ளதே.

அவன் எதையாவது அஞ்சி நிற்கிறானா.. அய்யோ எரிவது அவனல்லவா.. காப்பாற்ற வேணுமே. நான் அவனை அணைக்க முடியாதா?”

“வேண்டாம் அவனை நீ அணைத்தால் இக்கனவை நாம் அறிந்து கொள்ள முடியாமலாகும். அது அவனிலிருந்து வரவிருக்கும் உனக்கும் இழப்பே”

“இல்லை.. இது பாவம்.. அவன் அங்கே தனித்து எரிகிறான்.. அறிதலுக்காக நான் பார்த்து நிற்பதா..”

“வேறு வழியில்லை. இன்று அவன் உலகில் நீ இல்லை. உன்னால் இங்கு நின்று நோக்கவே முடியும். உனக்கு இக்கணம் அருளப்பட்டிருப்பதே அதற்குத்தான். இவ்வாய்பை தவற விடாதே. இன்னும் சில கணங்களில் நாம் நம்மிடத்திற்கு திரும்பியாக வேண்டும்.”

வீட்டினுள் அவன் சாயல் தெரியும் முகம் கொண்டவர் ஒரு பெரிய ஒற்றை தட்டில் உணவுண்ணுகிறார். ஒடிஞ்சலான வெளிறிய ஒரு பெண் பரிமாறுகிறாள். வலுத்த கூக்குரலோடு அவர் சோறு நிறைந்த தட்டை வீட்டின் கூடத்தில் விசிறி அடித்தார். விசிறிய அன்னத்தோடு கிடந்த அந்த பெரிய ஒற்றைத் தட்டை நோக்கிபடியே நின்றான் அவன்.

பக்கத்தில் வேறு ஒரு கதவு. திறந்தால் இவள் சாயலில் அவன் ஒரு தூணோரம் நின்றான். அன்று யாருமற்ற அவ்விரவில் அந்த தட்டில் உணவுண்ண அவர் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. தூரத்தில் அவரை தேடும் குரல்கள்.

சிறிதே வளர்ந்த பிள்ளைகளுடன் தனித்து வாசலில் அப்பெண் நின்றிருந்தாள். அப்பெண்ணின் ஆழத்தில் எவ்வுணர்வுமின்றி அவன் அம்மா அமர்ந்திருந்தாள். அக்கிணற்றுக்குள்ளே எட்டி பார்க்கும் உயரமில்லை அவனுக்கு.

அவன் வீட்டுக் கதவுகள் மட்டும் நிறைந்த ஒரு இருண்ட தெருவில் அவள் நடந்தாள். “அறியாச் சிறுவன். அந்த ஜன்னலோரு இருக்கையை அவனுக்கு மறைத்தேனே.. நானா அவனை இக்கனவுகளில் வைத்தேன். என் தெய்வமே சிறு பெண் அறியாமல் செய்தேன். என் தவறுக்கு அவன் அங்கு தனித்தெரிவதா?”

25

நடந்து பழகிய அவளோ ஒளிந்து விளையாடினால் அவள் பாதத்தடம் நான் காண்பது எங்ஙனம்?

நடப்பதெல்லாம் ஒளிந்து கொள்ளத் தானா? உன் பாதங்கள்  நோகுவதில்லையா? இருந்த இடத்திலேயே ஒளிந்து கொள்ள கூடாதா?  ஒளிந்து கொள்ள இத்தனை தூரம் நடந்தாக வேண்டுமா?

என்னவனே.. கேள்…

நான் ஒளிந்து கொள்வது உன்னைக் காணத்தான்.

நான் இருந்தால் யாரும் என்னிடம் வருவதில்லை. ஆகையால் நான் ஒளிந்து கொள்கிறேன்.

ஒளிந்து கொள்வதாலேயே நான் என்னை தேடுவதில்லை. தேடுவதால் நீ என்னை கண்டு கொள்கிறாய்.

தேடுவது ஒரு விளையாட்டு. அரண்டவன் எதையும் தேட முடியாது. விளையாடுபவன் தேடுவதனைத்தையும் கண்டு கொள்கிறான். கண்ட பின்பும் அவன் வீடு செல்ல விரும்புவதேயில்லை. விளையாட்டை நிறுத்துவதும் இல்லை.

26

விளையாடடி என் செல்வமே ! உன் ஈரத் தடங்களை நானே அழித்தேன். உனை யாரும் கண்டு கொள்ள முடியாது என்றது கதிரவன்.

மண்ணில் உன் தடங்களை நானே அழித்தேன் என்றது காற்று. தேவி ! உன் பாதவொலிகள் என்னிடமே என்றது வெளி. காட்டெரியே ! நீ நின்ற கால் தடம் அழித்தது நானே என்றது நீர்.

நீ தவறி செல்லும் தடங்களை உன் பாதம் தேரும் முன்பே எரித்தழிப்பது நானே என்றது அவள் காதில் ஒரு நெருப்பு.

இறுதியாக வானம் அவளிடம் வந்தது.

அப்படியாயினும் அவன் உன்னிடம் சேர்வதை நிறுத்த முடியாதென அறிந்து கொள். மண்ணிலிருந்து அவன் நோக்குவது மேலுள்ள ஆகாயத்தை அல்ல மகளே. அவன் நோக்குவது உன் தடத்தை கூட அல்ல.

அவன் நோக்குவது உன் பாதங்களின் வளைவை. அவ் வானவளைவு அவனுக்கு காட்டுகிறது உன் திசையை. அதிலுள்ள நட்சத்திரங்கள் சொல்கிறது நீ ஒளிந்திருக்கும் இருளடைந்த முடுக்குகளை. அதில் எழுகிறது அவன் கதிரவன். அக்கிதரவன் இயம்பித் தருகிறான் உன் பாதங்களின் ஈரத்தை.

இமை தாழ்த்தி குனித்து நிலத்தில் ஒருவன் காணும் ஆகாயத்தை மறைக்க எங்களுக்கு ஒப்புதல் இல்லை என் செல்லமே. இங்குவரை உடன் வந்தவன் அவன் அல்லவா? அவனன்றி உனை அறியும் ஆள் உண்டா?

சுடர் ஒளிந்து கொள்ள ஏலாதம்மா..  அவனோ எதையும் பற்றியிருக்காத  குளிர்ந்த மண்ணகழ்.  உன்னை கண்டு பொருத்தி கொள்ளும் ஊழ் அவனுக்கு.

அகழ் பொருத்தாதவரை இருட்டில் அதனோடு விளையாடிய களிப்பே நமக்கு. அகழ் எரியும் போது சுடெரெல்லாம் சுற்றி இருப்பவர்க்கு.

தனி

ஆளற்ற பெருங்காட்டில் ஏறு தந்தையென தனித்தலைய நேரும் போது கொம்புகளிருந்தும் கூர்மையிழந்த அன்னை போலாகிறது. தசை முழுக்க முலை கமழுந்தகைமை கொண்டதாகிறது .

வீரியமிருந்தும் செல்லடி நோக்கி நடக்க  வேண்டிய ஊழ் கொண்டதினால்

தலை தாழ்த்தியிருக்கும் ஏறு ஒரு தந்தை என காடு அறிகிறது.

27

மேலுள்ள கூடாரத்தை முடைந்தவனின் கவன சிதறலே நமக்கு ஒளி.  அவன் கை பிசகலே  நமக்கு உள்வரும் காற்று. அவன் கை தவறி விழுந்ததாயிருக்கும் இப்பூமி. அவன் உடைத்து போட்டதில் உள்ளதே நட்சத்திரங்கள்.

பிழைகளுக்கு நேற்று இல்லை. அவை நாளை நோக்கி செய்யப்படுகின்றன.

அவள் கை தவறுதலாக ஆக்கியது எத்தனை?

அவள் தெரியாமல் செய்தது எதை ?

உங்களுக்கு தெரியாமல் செய்ய தெரியாது அல்லவா?

ஆகாயத்தை நெய்தவனுக்கு காற்றை எடுத்த செல்ல தெரிந்திருந்தால் என்ன செய்திருப்போம். அவன் மறந்து வைத்து சென்றதல்லவா இதனைத்தும்? அவன் தெரியாமல் செய்தது அல்லவா நாம்?

‘தெரியாமல் செய்து விட்டேன்’ எனச் சொல்லும் அவளை நீங்கள் இன்னுமா அறியவில்லை?

28

காலங் கடத்துவோனே!

நீ அவள் கையில் வந்ததெப்படி?

பல் துலக்கவும் குளிக்கவும் உண்ணவும் காலங் கடத்துபவள் ஆயிற்றே! அவள் கையில் நீ வந்ததெப்படி?

எல்லாவற்றையும் தன் கையாலயே காலங் கடத்துகிறாள் அவள். கனிகளை காலங் கடத்துவது யார்? உயிர்களை காலங் கடத்துவது யார்?

அன்னை காலங் கடத்துவதால் குழவிகள் மண்ணில் வருகின்றன. குழவிகள் காலங் கடத்துவதால் வருகின்றனர் அன்னையர்.

விதைகள் காலங் கடத்தியதால் வந்தன கனிகள். கனிகள் காலங் கடத்தியதால் வந்தன  விதைகள்.

தோற்றவர்கள் அழுது காலங் கடத்துகிறார்கள். காலங் கடத்துபவர்களோ விளையாட்டிலேயே இருக்கிறாரகள்.

அவனோ பூமிக்கு வந்ததிலிருந்து அறிவை காலங் கடத்துகிறேன் என்கிறான்.

அம்மாவோ இருவரையும் காலங் கடத்துபவர்கள் என வைதபடி காலங்கடத்துகிறாள்.

29

அப்பப்பா!  எனக்கே ஒரு மாதிரி இருக்கு . கடைசி மூனு அத்தியாயத்துல கொஞ்சம் அதிகமாயிட்டது. இத்தனை தூரம் அத்தியாயங்களை கவித்தனமாக ஓட்னதுல ஒரே அயர்ச்சியா இருக்கு.

இடையில் இந்த கதை வேற போன் காலா போட்டு கொன்னுட்டான். கதையா எழுதுறவங்கள சுத்தீட்டு இருந்தவனுக்கு என்னோட போன் நம்பரை எவன் கொடுத்தானோ?

இந்த புத்தகத்தைக் கொண்டு போய் பத்தரமா சேத்தீட்டு சேந்தாப்புல ஒரு மாசம் லீவு எடுக்கனும் டா சாமி.

எல்லாருங் கேட்டுக்குங்க….

இந்த அத்தியாயம் ஒரு அத்தியாய நேரம் இங்க நிக்கும்.

யூரின் போறவங்க போயிட்டு வந்திருங்க. சப்படறவங்க சாப்பிட்டு வந்திருங்க. இனி அத்தியாயம் நடுவுல எங்கையும் நிக்காது. நேரா நின்னோரா தான்.

30

விடைபெறல் 

ஆரம்பகாட்சி

கதை : எப்ப நின்னோரா திரும்பறதா உத்தேசம்?

அவன் : எனக்கு தெரிஞ்சத எழுதி இந்த குறிப்பேட்ட முடிச்சிட்டு கிளம்பலாம்னு இருக்கேன்.

அவள் : நாம தேட தானே இங்க வந்தோம்? இப்ப என்ன திடீர்னு உனக்கு தெரிஞ்சுருச்சுனு சொல்ற? நாம எதுக்கு முடிக்கணும்? இந்த அத்தியாயமெல்லாம் போய் பாத்து ஒருத்தர் தனக்கு தேவையான முடிவ தானே கண்டு புடிக்கட்டும்.

கதை : இல்லயில்ல. அவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு.  நீங்க இத என் வழியா தான் முடிச்சாகனும். இல்லனா உங்கமேல சந்தேகம் வரும். இத்தன தூரம் நீங்க சொன்னதெல்லாம் இவங்களுக்கு சரியா புரியாம போய்ரலாம்.

அவள் : இவங்கலாம் இத ஏதோ மொழிபெயர்ப்புல படிக்கிறாங்கனு நினைக்கிறேன். இன்ன வரையிலும் முகத்தில எந்த சலனமும் இல்லயே.

கதை : அவங்க என்னத் தேடி வந்தவங்க. எனக்காக காத்திருக்காங்க. நான் கைய தூக்கி முடிஞ்சுதுனு சைக சொல்லாம எங்கயும் போக மாட்டாங்க.

கதை : நீங்க கவித்துவத்த நம்பியிருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் இந்த குறிப்பேட்டிலிருந்து என்னை மட்டுந்தான் வெளியே எடுத்து பாப்பாங்க. போற இடமெல்லாம் என்னை பத்தி தான் பேசுவாங்க. அதையெல்லாம் பார்த்துகிட்டு நீங்க ஓரத்தில நிக்க வேண்டிவரும். வரலாறு முழுக்க இந்த கதை தான் நடந்திருக்கு. என்னை ஆரம்பத்திலேயே சேர்த்திருந்தா சுலபமா இந்த குறிப்பேட்டை முடிச்சிருப்பேன்.

அவள் : உன் நாடகத்த நிறுத்து. நானே நாளைக்கு உங்களயெல்லாம் நீங்களே தேடிக் கண்டுபுடிச்சாக வேண்டிய அந்த இடத்துக்கு கூட்டி போறேன். போதுமா?

                        (திரை முடியது)

31

என் அன்போரே!

அவ்விடம் என்னில் என்றுமிருப்பது. அவ்விடத்தில் விளையாட எனக்கொரு வெளியுண்டு. நீங்கள் என்னை மட்டும் எனக்களித்தால் போதும். பல்லாயிரம் பாத தடங்கள், அது நடந்த சொற்களஞ்சியங்கள், பயங்கரமான பள்ளத்தாக்குகள், நீர் தவழ்ந்தோடும் நதி வழிகள் அங்குண்டு. 

பிறக்கும் முன்பே அவ்விடத்தில் சேர்ந்தாயிற்று நான். என்னுள் எனக்காக சமைத்து வைக்கப்பட்டிருக்கும் இன்னுணவு அவ்விடம்.

தனி

அந்த பெரிய ஒற்றைத் தட்டை நான் மறந்திருந்தேன் என வெகுநாள் நினைத்துக் கொண்டிருந்தேன். சிற்சில வேளைகளில் அந்த ஒற்றை தட்டில் நான் கோபத்தை உண்டேன்.

கோவம் தின்னும் என்னை அவள் கண்கள் நேரிடையாக சந்திக்கும்போது அத்தட்டில் பரிமாறப் பட்டிருந்திருந்த வெறுப்பில் ஒரு துளி தொட்டுக் கொண்டேன்.

தொடக்கத்தில் அத்தட்டின் உணவை உண்ட கணமே வாயுமிழ்ந்தேன். பின்னர் அதை செரிக்கும் அமிலம் என்னுள் ஊறி ஊறி வர ஆரம்பித்தது.

எதிர்பாராத ஒரு நாளில் நான் செரித்த அவ்வுணவிலிருந்து செய்தெடுத்த ஒரு நஞ்சை கக்கினேன். அது செந்நிற மணியானது. அம்மணியை அவள் வாயில் எடுத்திடுவதை பார்த்து அன்னை அவளை வசைபாடினாள். அன்னையிடம் அந்நஞ்சை கக்க அவளும் கற்றுக் கொண்டிருந்தாள்.

32

ஓர் இரவில்.

என்  தூக்கத்தின் வாசற்படியில் கேட்டது ம் எனும் ஒலி. புரண்டுபடுத்த எனக்கு இம்முறை கேட்டது இம் எனும் ஒலி. எழுந்து போய் பார்த்தபோது அங்கிருந்தது ஒரு பொன் தூவி.

யாருமற்ற அவ்விரவில்.

வெளியில் ஒரு மரக் கிளையில் கேட்டேன் ம் எனும் ஒலியை. மரப் பொந்திடையில் இம் எனும் ஓசை.. ஓடிச்சென்று பார்த்த போது உள்ளே இருந்தது ஒற்றையொரு வன்னத் தூவி.

யாருமற்ற அவ்விரவில் மீண்டு வந்து படுத்தேன்.

ம் எனும் விசும்பல். குறுகி பயந்து படுத்திருந்தது அக்குருவி என்னருகில். குனிந்து நான் பார்த்தபோது இம் எனும் ஒலியாக மட்டும் உடல்சுருண்டு படுத்திருந்தது அணில் குட்டி.

யாருமற்ற அவ்விரவில் கட்டியணைக்க ஏதுமிலாது தனித்திருந்தது அணில் குட்டி.

இம் எனும் இவ்வொலி எதன் அர்த்தம்? என் மேல் தயை கூர்ந்து அதை சொல்வீர்களா?

தூக்கத்திலும் குட்டிகள் தூங்காமல் இருக்கின்றன. அவ்வொலி எங்கிருந்து வந்தது?  எத்தனை காலம் யாருமற்ற அவ்விரவு வந்து கவிகிறது நம் மேல்?

33

அணி பிள்ளாய் நீ இன்று உறங்கவில்லையா?

இல்லை. நாளும் நான் நா..ன்  கட்டியணைக்கும் என் வால் இன்றில்லை. அம்மா சொல்லியிருந்தாள். யாரும் என்னிடமிருநது அதை வாங் ங்க போவதில்லை யென.

எல்லாம் பொய். எல்லாரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். அம் அம்மா கூட.

உன் வால் எங்கே போயிற்று ?

அதை அங்கே வாங்கி வைத்து விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அலமாரி.  அதில் வைத்திருக்கிறார்கள். என் வாலை. வீட்டுக்கு போகும் போது வாங்கி கொள்ளலாம் என்றார்கள். தரவே எ எ யில்லை.

அது எந்த இடம்?

தெ தெரி தெரியாது….  ரொம்ப பெரி.. ய்ய் ய இடம்….  நிறைய அணில் குட்டிகள். ஆனால் யாரும் எதையும் கையிலெடுத்து கொறித்து தின்ன கூடாது..  மரம் விட்டு மரம் தாவி ஆடக் கூடாது..  வாலை ஆட்டி பார்க்கவே கூடாது… அம்மா அனுப்பும் போது இதெல்லாம் சொல்லவே இல்லை. அப்பாவோ முகங்காட்டாமல் திரும்பி நின்று கொண்டிருந்தார் அன்று.

நான் இனி அங்கு செல்ல மாட்டேன்… அங்கே அணில்களே இல்லை தெரியுமா?

34

முன்பொரு நாள் இது கண்டு இவன் பொருட்டு நான் கண்ணீரோடு பூமி சுற்றி வருவேன் என்றது சூரியன். ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் என் கண்ணீர் விழுமென்றது அதன் குரல். பூமியில் முற்றாக இருள் மூண்டது.

அன்னை அதனிடம் வந்து மன்றாடினாள். ‘தேவ! உன் குளிர் தாங்காமல் தவிக்கின்றன உயிர்கள். உன் அடி பணிந்து கேட்கிறேன். இன்று ஓர் இரவு எங்களுக்கு வெப்பத்தை தருக’. சூரியன் தன் கோபத்தை முதல்முறையாக உயரிய ஒரு விளக்குத் தண்டில் வைத்து சென்றான். பூமியும் சூரியனும் ஒரு நாள் உறங்கின.

தூங்கி எழுந்ததில் மறுநாள் அவன் ஒரு அணில் குட்டியாக மாறியிருந்தான். அன்றிலிருந்து இங்குள அனைத்திற்கும் ஊண் ஊட்ட, அவர்களின் முன்றில் நிற்க, தேடிப் பிடித்து விளையாட, தேம்பியழும் கண்ணீர் காய தினம் வானில் வருகிறது ஒரு அணில் குட்டி.

35

காலையில் அவள் மகிழந்து நின்றிருந்தாள். அவனை கை பிடித்து ஒரு மலர் வனத்தினுள் அழைத்துச் சென்றாள். கிட்டத்தட்ட ஓடினாள்.

இதில் எந்த பூ வேண்டுமென்றாலும நீ பறித்துக் கொள்க.  உனக்குரியது அது. நீ பறிக்கும் பூ எதுவாயினும் அது மரமாகும். அதில் பூ மட்டுமே நிறையும். அப்பூவிலொன்று கூட வாடாது.

வனம் முழுக்க நடந்த அவன் ஒரு சிறிய நெருஞ்சிப் பூவை கையிலெடுத்துக் கொண்டான். ‘இவனை நான் நின்னோரா கொண்டு செல்லவிருக்கிறேன்’. அந்த பூவிடம் அவன் சொன்னான். ‘இனி உன் பழங்களுக்காக நீ வருந்த வேண்டாம். விரும்பிய வண்ணம் மலரலாம்’

36

விடைபெறல்

இறுதி காட்சி

அவள் : சரி. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. பூமியில அமைதி வந்தாச்சு. நாம நின்னோராக்கு திரும்பலாமா?

கதை : க்கும்.. நீங்க வரதுக்கு முன்னாடியும் பூமி அமைதியாத்தான் இருந்துச்சு.  சொந்தமா கதை இல்லாதவங்கள இங்க விட்டா இப்படித்தா கட்டுக்கத சொல்வாங்க.

அவள் : கவலபடாத.  போறதுக்கு முன்னாடி உனக்கும் ஒரு பரிசு வச்சிருகேன். (அவள் இந்த குறிப்பட்டை கதையிடம் நீட்டினாள்)

கதை : எனக்கா? (நன்றியுணர்வுடன்) இத நான் என் தனி அலமாரியில வச்சுப்பேன்.

அவன்: சரி நேரமில்ல. நாம  கிளம்புவோம்.

கதை (சிரித்த முகமாய் தன் கையை ஆட்டியபடி) : பத்திரமா போய்ட்டு வாங்க ப்ரெண்ட்ஸ்.

(மகிழ்ச்சியுடன் தன் வீடு நோக்கி நடந்து வந்த கதை, கதைகளால் கட்டப்பட்டிருந்த தன் வீடு சூறையாடப்பட்டு காலி நிலமாயிருந்ததை கண்டதும் நின்ற இடத்திலே அமர்ந்து வீரிட்டு அழத் தொடங்கியது)

அங்குவந்த சிறு பெண் : கதை அங்குள் . ஏன் அழுவரீங்க. வீடு  போனா என்ன? அதான் இந்த புக் இருக்குல.. இத வச்சு வீட்டத் திரும்ப கட்டிரலாம்.

அவள் : (நின்னோரா செல்லும் வழியில்) ய்ய்யா யா ஆ ஆ ஹ ஹா. இப்ப அவன்கிட்ட இருக்கறது நம்ம கதை மட்டுந்தான். அவன் கதையவே இனி அங்கிருந்துதான் ஆரம்பிச்சாகனும்.

   (திரை முடியது)

37

நின்னோராவிற்கு உடனே கிளம்ப வேண்டுமென்ற ஆவலினால் புனைவிற்கு ஏற்ற காரணமோ தர்க்கமோ இன்றி நாங்கள் வந்த பெட்டியை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.

இம்முறை பெட்டி எம்பிய குலுக்கலில் நாங்கள் இருவரும் ஒருவர் மடியில் ஒருவர் உட்கார்ந்தோம். அல்லது அவரவர் மடியில் அவரவர் உட்கார்ந்திருந்தோமா?

கொண்டுவந்த குறிப்பேடோ அருகிருந்த காலி இருக்கையில் கிடந்தது. அதில் பொறித்திருந்த வண்ணங்களை நோக்கிய படி நானிருந்தேன். நின்னோராவில் இந்த வண்ணத் தாள்களை என்ன செய்வது?

 நரி பொம்மை போட்ட என் அழி ரப்பர் இதை எவ்வளவு சுத்தமாக அழிக்கும்?

13

நான் வந்துவிட்டேன்…. என்ன யாரையுங் காணோம். எல்லாம் முடிஞ்சிருச்சா? ஒரு டிஸ்ஸ்ஸ் அடிக்கிற நேரத்துகுள்ளயா? அவங்க ரெண்டு பேரும் நம்மள நல்ல ஏமாத்தீட்டாங்க.

அப்ப நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி வந்ததெல்லாம் வீணா? நானாவது பரவாயில்லை. ஒரு அத்தியாயம். நீங்க பாவம். மொத்த புத்தகத்தையும் படிச்சுருக்கீங்க.

இறுதி

அன்புநிறை நண்பர்களே

நின்னோராவிலிருந்து நான் எழுதுகிறேன். நான் எனில் நான் மட்டும் தான். 

இது அப்படி அங்கு முடியாதென அறிந்திருந்தேன். 

யாருமற்ற இவ்வைகறையில் நான் மட்டுமிங்கே மதுரமாயிருக்கிறேன். இனிப்பு கிடைத்தவுடன் வாயில் போட்டு ஒளிக்காதவர்கள் நம்மில் யார்? வாயிலிட்டதும் யாருடனும் பேச முடியாதளவு இனித்து விடுகிறோமல்லவா? அவ்வினிப்பு தீரும் வரை தனித்திருக்க விரும்புகிறோம். தீர்ந்ததும் மற்றுமொன்றுக்காக மீண்டு வீட்டில் சேர்கிறோம்.

இன்று என் இனிப்போ தீர்ந்த பாடில்லை. இதோ இக்கணம் நின்னோராவில் அமர்ந்து பூமியைத் தான் சுற்றி கொண்டிருக்கிறேன். இங்கிருந்து பூமியே ஒரு சுடரென தெரிகிறதெனக்கு. 

சுடரெல்லாம் சுற்றி இருப்பவர்க்கு.  

சுற்றி இருப்பதெல்லாம் சுடர்வதற்கும்.

முத்தங்களுடன்

குழந்தையாகிய நான்.

என்னால் எதையுமே முத்தமிடமால் முடிக்க முடியாது. குழந்தையிலிருந்து அதுவொரு பழக்கம். 

முத்தம். 

தனி

அவளையும் அவனையும் கோமாளி என்கிறார்கள் எல்லாரும். 

ஆம். நீங்கள் அப்படி சொல்லவில்லை. ஏனெனில் நீங்கள் எல்லாரும் இல்லை. 

புத்தகத்திற்கு வெளியே எல்லாரும் அப்படி பேசி கொள்கிறார்கள். 

கோமாளியை கோமாளி என்பவர்களே! எங்கேனும் என் கோமாளியை பார்த்தீர்களா?  அவன் எப்பவுமே இப்படித் தான் கோமாளித் தனமாக ஏதாவது செய்து தொலைவான். இல்லையெனில் உங்கள் கோமாளியையாவது பார்த்தீர்களா? 

‘…… …… ….. …..’

என்னது. உங்களுக்கென ஒரு கோமாளி இல்லையா? சரி ஒன்று செய்வோம். என் கோமாளி கிடைத்தால் நீங்களே வைத்து கொள்ளுங்கள். எனக்கு நானே போதும்.. 

‘….. ….. ….. …..’

என்ன?  அவனை வைத்து என்ன செய்வதா? 

 நான் இதுவரை அப்படி எதுவும் செய்ய யோசித்ததில்லையே. 

ஆங்ங்…என்னிடம் திருப்பி கொடுக்கலாமே… அப்படி செய்தால் உங்கள் கோமாளி கிடைத்து விடுவான்.

தொலைந்து போன அந்த கோமாளி எந்த அத்தியாயத்திலும் இருக்கலாம். நாலு பேர் முன்னாடி போய் தேடுங்கள். இரண்டு பேர் அத்தியாயத்தில் பின்னாடி போய் தேடுங்கள். 

‘….. … …. ‘

நீங்களா? 

நீங்கள் கொஞ்சம் இந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு தேடிப் பாருங்களேன். ஒரு வேளை உங்களுக்கு அவன் கிடைக்கலாம்.

( நிறைவு)