வியாச மகாபாரதத்தில் பீஷ்மரை கொல்வதற்காக சிவனை நோக்கி தவமியற்றும் அம்பையை சித்தரிக்கும் ஒரு வரி. “ஒரு காய்ந்த இலையை மட்டும் உணவாக கொண்டு ஒரு வருடம் தன் பாதப் பெருவிரல் நுனியில் நின்றாள்”. இதன் சமஸ்கிருத மூல வரியிலுள்ள ‘ஸ்தா’ என்ற சொல்லின் நேர்பொருள் நிற்றல் என்பதே. அனால் அதை தவிர்த்து அங்கு தன்னையே ஸ்தாபித்தாள் (established herself), தன்னிலேயே தங்கி காத்திருந்தாள் (stayed in herself) என அதை கவிதையாகவும் வாசிக்க முடியும். பீஷ்மரை கொல்வதன் பொருட்டு யமுனையின் கரையில் அம்பை தன்னையே ஒரு தவக்குடிலாக ஆக்கியிருந்தாள். அவ்வாறெனில் பல்லாண்டுகள் நாளும் நெருப்பென பற்றி எரியும் அத் தவக்குடிலை பேணியது எது? என் வெண்முரசு வாசிப்பின் வழியாக தயை என்ற கவியுருவகத்தையே விடையாக நான் அடைந்தேன்.
வியாச மகாபாரதத்தின் நவீன மறுவாக்கமான வெண்முரசு, நாவல் என்னும் வகை மாதிரியை (genre) பயன்படுத்தி கொண்ட வடிவமேயன்றி நாவல் அல்ல. உரைநடை வழியாக தன்னை தொடர்புறுத்துவது என்றாலும் அதன் உச்சங்கள் உரைநடையில் நிலை கொள்வதில்லை. அதன் பெரும்பகுதி ஆற்றல் கவித்துவத்தை அடையவே செலவிடப்பட்டிருப்பதனால் அதை உரைநடை வழியாக உரைநடையை விலக்கி கவித்துவத்தை அடைந்த நவீன காவியம் என கூறலாம். (Poetry through sorting prose out of prose).
தானியத்தை அலசும் சல்லடையில் வெளிவருவதே பயன்பாட்டிற்கு சேமிக்கப் படும். மணலில் தங்கத்தை அலசி எடுக்க பிறிதொரு சல்லடையே வேண்டிவரும். தானியம் உலகியல் பயன்பாட்டுக்குரியது. தங்கம் விளைந்த அத்தனை தானியத்தையும் கொண்டு ஈட்ட படுவது. ஒரே சமயத்தில் தானியத்தை களஞ்சியத்திலும் தங்கத்தை கருவூலத்திலும் சேர்ப்பிக்க இடையறாது செயல்படும் ஒரு சல்லடை வெண்முரசு. அது காவியத்தின் இயல்பு. பதரே அற்ற பல்லாயிரம் சொற்களை அலசி சரிபார்த்து வெளியிடும் உரைநடையின் உள்ளேயே கவித்துவம் மின்னி கிடக்கிறது.
ரஷ்ய தத்துவவாதியும் இலக்கிய விமர்சகருமான மிகெயில் பக்தின் தன்னுடைய ‘Epic and Novel’ என்ற 1941 ஆம் ஆண்டு ஆய்வு தாளில், மொழி மற்றும் புத்தகம் உண்டான பிறகு தோன்றிய நாவல் என்னும் இலக்கிய வகைமை, இன்னும் தன்னுடைய உருவாக்க பருவத்திலேயே உள்ளது என்கிறார். கவிதை மற்றும் காவியம் (lyrical epic) போல அதன் வடிவம் முழுமையடைந்தது அல்ல, தொடர்ந்த வளர்ச்சியில் உள்ளது என்கிறார். தமிழில் வெண்முரசு வழியாக நாவல் என்னும் வகை மாதிரி தன் முழு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தோன்றுகிறது. குறைந்த பட்சம் எதிர்காலத்தின் பல்தரப்பட்ட நாவல் வடிவங்களுக்கான விதையை தன்னுள் கொண்டிருக்கின்றன என்றாவது கருதலாம்.
நாவலின் இரண்டு பிரத்தியேக இயல்புகளாக பக்தின் குறிப்பது ஒரு மொழிக்குள் பல்வேறு மொழி தன்மைகளை கையாள்வது (heteroglossia), தன்னுடைய மொத்த இருப்பையும் தானே கேள்விக்குட்படுத்த போதுமான வெளிப்பாடுகளையும் கொண்டிருத்தல். வெண்முரசு இந்த இரண்டு இயல்புகளின் முழுமையையும் அடைந்திருக்கிறது. கல்பொருசிறுநுரையில் அவன் கட்டி எழுப்பியதை அவனே அழித்து கொண்டிருக்கும் சித்திரம் வலுவானது. இமைக்கணக் காட்டில் தன் தவக் குடிலில் அமர்ந்து வெண்முரசின் மையமென தொனிக்கும் இளைய யாதவன் இறுதியில் சென்று சேர்வது தயையின் குடிலே.
‘தயா சர்வ பூதேசு’ என்கிறது புராணம். மேலை கலாசாரத்தின் compassion என்னும் விழுமியத்திற்கு நெருக்கமானது என்றாலும் அனைத்துயிரையும் தன்னை அறிவதினூடாக அறிய முயல்வதே தயை. வெண்முரசில் தருமனான யுதிஷ்டிரனிடம் இருக்கும் வில்லின் பெயர் தயை. சேற்றில் சிக்கிய கன்று குட்டியை அர்ஜுனன் தன் வில்லால் விடுவிக்க பல முறை முயன்றும் முடியாமலாகும் போது அவன் வில்லை வாங்கி தருமன் இயல்பாக அதை செய்கிறான். அதன் பொருட்டே சல்யரால் அவரின் மூதாதை கொண்டிருந்த வில்லான தயை தருமனுக்கு பரிசாக வழங்க படுகிறது. பிற வில்லாளிகளை தயை எனும் தெய்வம் பின்னால் வந்து கண்காணிக்கிறது. தயை என்னும் வில்லை வைத்திருப்பவனுக்கு அதுவே அம்பாகிறது.
வெண்முரசில் தயை என்ற வில் ஏற்று கொள்வது தருமனை மட்டும் அல்ல. துரியோதனனின் கைகளிலும் தயை தன் பணியை ஆற்றுகிறது. சமையலில் மிகக் கூரிய கத்தியையே வெட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஏனெனில் காய்கறிகளின் உயிரணுக்களின் (cell) மேல் மிக குறைவான சேதத்தை உண்டாக்குவதால், அதன் ஊட்டச்சத்துகளை கூர்மையான கத்தியே அதிகளவு பேணுகிறது. A blunt blade inflicts more damage.
குருஷேத்ர போரில் களம் செல்வதற்கு முன்பு தருமன் கருவூலத்தில் உள்ள அந்த வில்லை கேட்டு யுயுத்ஸுவை அஸ்தினாபுரிக்கு தூது அனுப்புகிறான். அவையின் எதிர்ப்புகளுக்கிடையே துரியோதனன் இது உனக்கும் சேர்த்தே நான் அளிப்பது என்ற சொல்லுடன்தான் யுயுத்ஸுவிடம் அதை தருமனுக்காக அளிக்கிறான். தயையை துரியோதனிடம் கை நீட்டி பெற்ற இவ்விருவர் தான் போருக்கு பிறகு அஸ்தினாபுரியின் அரியணை அமர வாய்த்தது என்பது தற்செயல் அல்ல.
தயை வில் என தொனிக்காத வில். தன்னை காட்டிக்கொள்வதில் மிகவும் சந்தேகம் கொண்ட வில். மடியில் அமர்த்தி அதன் நாணை சுண்டினால் காயத்ரியை இசைப்பது. போரை ஒரு வேதம் போல இசைப்பதே தயை. அது யாரையும் முனிவதில்லை. அது சென்று தொடும் இடங்களே அதன் இலக்குகள் என்றானது. இலக்குள்ளதோ அந்த ஒற்றை புள்ளியின் பொருட்டு மொத்த வெளியையும் கைவிட வேண்டியது. ஆதலால் பிறருக்கு இடமில்லாதது. Compassion is pointless and so spacious.
குருஷேத்ர களத்தில் கர்ணனை கொன்ற அர்ஜுனனை மேல் வஞ்சம் கொண்டு அவன் ஆடைகளை தன் அம்புகளால் உருவி அவனை பழித்தார் சல்யர். ஆடையின்றி வெறும் கைகளுடன் நின்றான் பார்த்தன். போரின் இறுதி கணத்தில் எழுந்த வந்த கௌரவர்களின் படைத் தலைமை சல்யரிடமிருந்தது. அத்தருணத்தில் காயத்ரியை மீட்டும் தன் நாண் அறுபட, தயை யுதிஷ்டிரனின் கையில் வெறுமொரு மூங்கில் கழியென ஆகி தன் உலோக கூம்பு முனையால் சல்யரை குத்தி கொன்றது. தன்னை கட்டியிருந்த நாண் அறுபட்டதும் தயை என்னும் அவ்வில்லே அம்பாகிறது.
‘ஒரு சொல்லின் பொருட்டு ஒரு குடியை பலி கொள்வேன். எரி துளியென்றே எழுகிறது’ என வஞ்சம் உரைத்த அம்பையே சிகண்டியின் பிறிதொரு ஆழத்தில் பீஷ்மரின் துணைவியாக வாழ்கிறாள். அவள் எரிந்த சாம்பலிலிருந்து முளைத்தெழுந்த தரு வேர் முதல் மலர்த்தேன் வரை கசப்பு கொண்டது. ஆயினும் மூவரின் ஆழத்திலும் அது மெல்ல மெல்ல இனித்து பின் கனி கொள்ளும் பருவமும் வரத்தான் செய்கிறது. சிகண்டி மைந்தருக்குகந்த அக்கனியையே விரும்பி உண்கிறான்.
தீயிலும் சாம்பலிலும் எவ்வித தயக்கமுமின்றி தயை குடிகொள்கிறாள். இனிப்பிலும் கசப்பிலும் அவளே நிறைகிறாள். தருவது மட்டுமல்ல பெறுவதும் தயையின் பகுதியேயாகும். பெரும்பாலும் குழந்தைகள் இரண்டுக்கும் ‘தா’ என்னும் வார்த்தையே பயன்படுத்தும். அதுவே தயா என்ற சமஸ்கிருத சொல்லின் வேர்.
போரில் பீஷ்மர் வீழ்ந்ததும் பாண்டவர்களின் தரப்பிலிருந்து மார்பில் அடித்துக் கொண்டு அழு குரலுடன் ஓடி வருகிறாள் அம்பை. அதுவரை பீஷ்மரை தொட்டிராத அம்புகளை கொண்டு அமைக்கப்பட்ட படுக்கை. ஒரு வகையில் அது பீஷ்மரின் தவக்குடில். அதை பேணியதோ கங்கையும் அம்பையும். நேர்மையும் நெருப்பும். அந்த அம்புகள் ஒவ்வொன்றும் வெகு காலம் முன்பே அவரை தொட்டிருக்க வேண்டிய விடைகள். Fortunately, his Death bed is made up of answers. அந்த அம்புகள் அனைத்தும் ஒரு சமநிலையில் அவரை தாங்கியிருந்தன. Resting on the perfect balance is wisdom.
‘கல்பொருசிறுநுரையில்’ காட்டில் தூய வேதம் திகழ்ந்த வசிஷ்டரின் வேள்வி அடுப்பு சாம்பலில் குளிரை வெல்ல படுத்துறங்குகிறது ஒரு கீரி. அதன் ஒரு பாதி உடல் மட்டும் பொன்னாகிறது. அக்கீரியின் குடி ‘நீ தெய்வமாகும் செலவு கொண்டவன்’ என அவனை விலகி செல்கிறது. ‘ஒன்று முழுதும் பொன்னாகி வருக. உன்னை எங்கள் ஆலயத்தில் அமர்த்துகிறோம். அன்றி முழுதும் கீரியாக எங்களுடன் உலகியலில் ஈடுபடுக’ என்கிறது அதன் குடி. வெண்முரசும் அந்த கீரியை போன்றதே. அது தன் மீதி உடலை பொன்னாக்க ஏது வழி என்ற தேடலையே கொண்டிருந்தது.
மீண்டும் வசிஷ்டரிடம் சென்ற கீரி தன்னை முழுவதும் பொன்னாக்கும் படி மன்றாடியது. அவரோ ‘இதுவே என் ஆற்றலின் எல்லை. நீ பிறிதொரு பெருவேள்வியின் ஏறி மிச்சத்தில் இது போல புரள்க. உன் உடல் முழுதும் பொன்னாகும்’ என்றார். அக் கீரி குருஷேத்ர போருக்கு பிறகு தருமன் செய்த பெருவேள்வி பற்றி அறிந்து அதன் எரி ஓம்பும் களங்களின் சாம்பல் மீது புரண்டது. அவி மிச்சங்களில் உருண்டது. யுதிஷ்டரின் அவைகளில் சொல் கேட்டது. ஆனாலும் அதன் உடல் பொன்னாகவில்லை. இதை அறிந்த யுதிஷ்டிரன் வேள்வி நிறையாதது கண்டு அந்த கீரியிடம் அதன் மீதி உடல் எங்கு பொன்னென்றாகிறதோ அதை தன்னிடம் வந்து அறிவிக்கும் படி கோரினார்.
தண்டக காட்டில் வழி தவறிய ஒரு தென்னகத்து பாணனின் கதையை அந்த கீரி கேட்க நேர்ந்தது. உணவும் நீருமின்றி ஆறு நாட்கள் அக்காட்டில் அவர்கள் அலைந்த பிறகு ஒரு குடிலை கண்டடைந்தனர். அக்குடிலில் வாழ்ந்த மூதன்னை இவர்களின் பசி கண்டு அவளிடமிருந்த கைப்பிடி அன்னத்தை அளித்தாள் . பசியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பாணனின் பெண் குழவி தன் இரு கைகளாலும் அன்னத்தை அள்ளி உண்டது.
உண்டு முடித்த பிறகு பாணன் அம்மூதன்னையிடம் அவளுக்கு உணவுள்ளதா என வினவினான். பன்னிரண்டு ஆண்டுகள் மழை பொய்த்த அந்நிலத்தை விட்டு மக்கள் அனைவரும் சென்றிருந்தனர். அவளும் நோயுற்ற அவள் கணவரும் மட்டுமே அங்கு தங்கி இருந்தனர். அவள் உணவுக்காக அலைந்து எலி வளைக்குள் கண்டெடுத்து தனக்கும் தன் கணவருக்குமாக சமைத்திருந்த ஒரு பிடி அன்னத்தையே அவர்களுக்கு அளித்திருந்தாள். ‘ஆம் எங்கள் வயிற்றில் அனல் எரிகிறது. ஆனால் விருந்தினருக்கு அளிக்காமல் அதை நாங்கள் உண்டிருந்தால் எங்கள் மூதாதையர் எரிவர். இவ்வனல் சிறிது. இது எங்களை உண்ணட்டும். இவ்விறப்பும் அறமே’ என்றாள்.
திரும்பும் போது மூதன்னை பாணனின் குழவிக்கு ஒரு மரப்பாவையை அளித்தாள். அக் குழவி அவள் அளித்த அந்த பாவையை எதற்காகவும் நிலத்தில் வைக்க ஒப்பவில்லை. அப் பாவையை மடியில் வைத்தும், நெஞ்சில் பதித்தும், துயில்கையில் உடலோடு வைத்தும் மகிழ்ந்தாள். அதுவே தயை.
அவள் அன்னம் செய்வித்த அந்த அடுப்பு சாம்பலில் புரண்ட கீரியின் முழுதுடலும் பொன்னாகியது. அந்த சாம்பலே அஸ்தினாபுரிக்கு எடுத்து வரப்பட்டு தூவி வேள்வி நிறைவு செய்யப்பட்டது. தம் நெருப்பிலேயே தம்மை அன்னமாக சமைத்து அளித்தவர்களின் ஒரு நீண்ட வரிசையை, கதையை சொல்வதே வெண்முரசு. அன்னம் சமைந்த பின் பிறிதை உண்பதில்லை. பிறருக்கு என்பதனாலேயே அது அன்னம். பூர்ண அன்னமென்றாவதே உயிர்களின் பெருந்தவம். வேதத்தின் முடிபாக எழுந்த சொல்லினால் அல்ல, அச்சொல்லை நிலை நிறுத்திய வேள்வியினால் அல்ல, வேள்வியின் காவல் என அமைந்த அறத்தினாலும் அல்ல, பசியறிந்த சிறுபெண் தன் கைகளில் உறங்கும் பாவைக்கு ஊட்டும் அன்னத்தில் நிலை கொள்கிறது இந்நிலம். அவளே தயை.






