நூலே மலராகும் நுண்மை

மேடையிலும் அரங்கிலும் அமர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இயல்பிலேயே கூட்டத்தின் மத்தியில் பேசுவது எனக்கு  கூச்சமளிக்கக் கூடியது. ஆனால் பழகியவர்களுடன் பேசுவதில் எனக்கு தடையேதும் நேர்வதில்லை. இங்கு என்னை பற்றிய அறிமுக உரையையும் என் கவிதைகளைப் பற்றிய தன் வாசிப்பையும் பகிர்ந்து கொண்ட சரவணன் இந்த விருது கூடுகையை எனக்கு அன்னியமல்லாததாக ஆக்கியிருக்கிறார். 

இங்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு  கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிகமானந்தா நினைவுக்கு வந்தார். கங்கை கரையை ஒட்டிய சுரங்க நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி கங்கையை தூய்மையாக்குவதற்காக 115 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன் 34 வயதில் உயிர் துறந்தவர்.  விருது அறிவிக்கப் பட்டதும் அதை தாள வலுவில்லாத என் சிறு தோள்களில் அதன் எடையை உணர்ந்தேன்.  நிகமானந்தாவின் நினைவை பணிந்து ஊர் கிணறு புணரமைப்பில் செயல் பட்டுவரும் மது மஞ்சரிக்கு இந்த விருது தொகையை முழுக்க அளிப்பதன் வழியாக என்னிலிருந்த பதட்டம் கழிந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டு என்னை கௌரவமும் நிறைவும் சேரும்படி செய்திருக்கிறார். 

வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026

இது என் வழியாக நிகழ்ந்த கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட விருது என்பதை உணர்கிறேன். ஆனால் இக்கவிதைகளை எழுதியவனின் உடன் மிக நீண்ட நேரத்தை செலவிட வாய்த்தவன் என்ற தகுதியால் இந்த விருதை ஏற்கும் தகுதி எனக்கு உண்டு என நினைக்கிறேன். வெண்முரசு வாசகர்களால் அளிக்கப்படும் இந்த விருதை நான் உண்மையான நிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் வெண்முரசு வெளியான போது அதை நாளும் ஒரு அத்தியாயம் என வாசித்த நானும் வெண்முரசு வாசகனே. 

சூது பவளம் கண்டேன் அல்லேன்

சூது பவளம் கண்டேன் அல்லேன் உருவானதில் நான் இருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வெறும் A4 தாள்களில் அச்செடுக்க பட்டிருந்த வரிகளை கவிதை என அடையாளம் கண்டவர் லக்ஷ்மி மணிவண்ணன். பதிப்பகங்களில் பதிப்பிக்க முயன்று முடியாமலான போது இந்நூலை தானே பதிப்பித்தவர். எனக்கு முன்பே மதார் ஆனந்த குமார் போன்றோரின் நூலை தொகுக்கவும் அந்நூலை சரியாக அடையாளப் படுத்தவும் செய்தவர். அவருக்கு என் வணக்கம். இனி எனக்கு பிறகு வரப்போகும் கவிஞர்களுக்கும் அவர் இதை செய்வார் என்பது உறுதி. 

தொடர்ந்து தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு வாசித்து ஒரு எழுத்தாளனாக இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணமான ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கம். 

நண்பர்கள் ஞானசேகரன், அருண்மொழி, வேல் முருகன், சசி ஆகியோரை நினைத்துக்கொள்கிறேன். நண்பர்களான மனைவி சந்திரிகாவையும் மகள் இசை வல்லபியையும் நினைத்துக் கொள்கிறேன். உடன் இருந்த இவர்களுக்கு என் நன்றி. 

விருது அறிவிக்கை பெறும்போது

கவிதையை பற்றிய என் நோக்கை சொல்லி உரையை தொடங்கலாம் என நினைக்கிறேன். என் (wordpress) இணையதளத்தில் கவிதைகளை பதிவேற்றம் செய்ய அவர்கள் அமைத்திருக்கும் குறிசின்னம் (icon) என்பது இறகு. மேலும் கவிதை சார்ந்த நிறைய இணையதளங்களின் முகப்பு அடையாளமாக இறகு பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.  நவீன எழுத்து கருவிகள் வந்த பின்னும் எதனால் இன்றும் இறகு கவித்துவத்தின் சின்னமாக ஏற்றுக் கொள்ள படுகிறது? இறகுகளை எழுதப் பயன்படுத்திய அந்த பழந்தன்மையை நினைவு கொள்ளும் பொருட்டா? அப்படியும் இல்லை.  ஏனென்றால் இறகுக்கு முன்பே சிறிய மூங்கில் தண்டுகளை நுனியில் சீவி எழுது கோலாக பயன்படுத்திய பிறகே நாம் இறகுகளை  எழுதக் பயன்படுத்தும் முறையை கண்டு கொண்டோம். 

இங்கு கவிஞர் உமா மகேஸ்வரியின் ஒரு கவிதை வரியை நினைவு கூறுகிறேன். ‘தனித்த பேச்சாக தன் வாசனையைப் பரப்பும் மலர்’. தனித்து ஒரு வாசனையை பரப்பும் இந்த மலர் தன்மையை நாம்  கவிதைகளுக்கும் உதாரணமாக சொல்ல முடியும்.

நண்பர்களே இறகு என்பது ஒரு மலர்.  இறகு ஒரு பறவையின் உடம்பிலிருக்கும் வரை மட்டுமே அது பயன்பாடு சார்ந்தது. பறவையின் எடையை சுமந்து மேலேற வேண்டிய நோக்கம் கொண்டது. வானில் உதிர்ந்த கணம் அது மலரென்றாகிறது. உதிர்ந்த பிறகே பூக்கும் மலர் அது. 

இறகைப் போலவே கவிதை வானோக்கி தன்னை திறந்து கொண்ட  மலர். பறவை என்பது ஒரு அழகிய மலர்க்கூட்டம். பறவையைப் போல கவிதையை இந்த மொத்த பூமியும் அந்த ஆகாசம் நோக்கி தங்கள் தோள்களிலிருந்து எழ செய்கிறது.  பரந்த வெளியில் தான் பூத்த பிறகு கவிதை உலகிற்காக கனிந்து மீண்டும் மண்ணுக்கு வருகிறது. 

இமைக்கணத்தில் ஆகாயத்தின் உயரத்தில் சென்று முயன்ற ஆயிரம் பேர்களில் ஒருவருக்கே மெய்மை எட்டுகிறது என்ற வரி உண்டு. கவிதை அப்படி அமைந்த ஒரு இறகு போல நமக்காக மண்ணில் இறங்கி வருகிறது. 

பூத்தொடுத்தல் என்ற உமா மகேஸ்வரி யின் மற்றொரு கவிதையும் நினைவுக்கு வருகிறது. 

இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்
ஒருவேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய.

மனமே நூலாகும் நுண்மை கொண்டதே கவித்துவம். வாழ்நாள் முழுக்க பூக்கொய்து மாலை தொடுக்கும் வாழ்க்கையே எனக்கு இப்பிறவில் அமைந்தது.முடிவிலியாக நீண்டு கிடக்கும் காலத்தின் இரு முனைகளும் சரியாக முடிச்சிட்டு யாக்கும் அழகிய மாலை. ஆனால் பூத்தொடுத்து பூத்தொடுத்து நிறையாமல் அந்த நூலே மலராகும் நுண்மை நிகழ்வதே அருள் என்றால் அது என் தலைமேல் அமைக. 

மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி யின் கவிதை வரி. 

வைரங்கள் துளைத்திடும் 
அருமணிகளினூடே கடந்து செல்கிறேன்
என் அதிர்ஷ்டம்
நான் வெறும் நூல் தான்.

வைரங்கள் தேவையிலாது தன் நுனிக் கூர்மையினால் நுண்மையினால் அருமணிகளை கோக்க வல்லது அந்த நூல். ஒரு கணம் பூத்தொடுக்கவும் மறுகணம் அருமணிகளை துளைத்து கோர்க்கவும் முடிந்த நுண்மையான நூலே கவித்துவ மனம். அதை வணங்குகிறேன். அதை அருளிய வாக்தேவிக்கு, என் இறைக்கு நன்றி. 

இறுதியாக நான் இந்த மேடையில் இருக்கும் மனநிலையை சரியாக சொல்லும் மலையாள கவிஞர் ராமபுரத்து வாரியரின் கவிதை வரியுடன் முடித்துக் கொள்கிறேன். 

வரியவனில் வரியவன் என்பதால்
தாழ்ந்தவனில் தாழ்ந்தவன் என்பதால்
ஞானமும் இல்லாததால்
எனக்கு இறைவன் தானே வந்து துணை நிற்கிறான்
அதனால் நான் இந்த பாடலைப் பாடுகிறேன்
நான் இல்லாமல் இது முழுமையுறாது என்பது உறுதி

‘கொடையாகவே பெற்றீர்கள் கொடையாகவே அளியுங்கள்’ என்பது பைபிள் வரி. இங்கு எதையேனும் நான் அளித்திருந்தால் அதையும் கொடையாகவே பெற்றேன் என்று கொள்க. நன்றி. 

( 24.04.2026 அன்று புதுச்சேரியில் வெண்முரசு வாசகர் வட்டம் விருதை ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரை)