கவிதை எந்த வடிவத்திலும் வரும்; நமக்கு அதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிஞன் கழுதையின் மேல் ஏறி வந்தால் என்ன செய்வது எனக் கேட்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன் (“சூது பவளம் கண்டேன் அல்லேன்” முன்னுரை). மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், “பால்யகாலம் எனும் கழுதையில் ஏறித்தான் நான் இங்கு வந்தேன்” என்கிறார். குதிரையால் சென்று சேர முடியாத இடங்களுக்கெல்லாம் கழுதையை அழைத்துச் சென்ற கிறிஸ்துவே காட்ட முடியாத எந்த இடத்திற்கு கவிஞன் ஒரு கழுதையை அழைத்துச் செல்ல முடியும் என நினைத்து அதன் மேல் ஏறுகிறான்? அல்லது கழுதை அழைத்துச் செல்லும் இடத்திற்கு போகத் தயாராயிருப்பவன் அவன் மட்டும்தானா?
அவர்கள் நடந்த கல்பாதையை நடந்தே நாமும் அதையறிய வேண்டியிருக்கிறது. குதிரையை விடுத்து பிரியத்துடன் கழுதையைத் தேர்வு செய்யுமிடத்திலிருந்து ஒருவன் வந்து சேரும் தூரம் வாழ்க்கையில் வேண்டுமானால் வருடங்கள் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக கவிதையில் அது ஒரு தாளைப் புரட்டும் தொலைவு மட்டுமே.
குதிரையை விட
கழுதையே அழகு.
கிறிஸ்து
கழுதை மேல் பயணம் செய்தார்.முட்டாளின் வேகத்திற்கு
விவேகியின் தயக்கத்தின் அழகு இல்லை.
ஒவ்வொரு அடியும் அரிதானது என கழுதைக்கு தெரியும்.குதிரை நிற்கும் போதும் பாய்கிறது;
கழுதை நடக்கும் போதும் நிற்கிறது.
ஆயினும் போய் சேர வேண்டிய தூரம்
குறைந்து வருவது கழுதைக்குத் தெரியும்.கழுதை மேலிருக்கும் கிறிஸ்து அளவுக்கு
கிறிஸ்து அல்ல
மலைப் பிரசங்கம் செய்யும் கிறிஸ்து.( 2005 வாக்கில் கல்பற்றா நாராயணன் எழுதியது- தமிழில் வெளியானது 2023 “தொடுதிரை” )
குதிரைக்கு தன் வேகம் பற்றிய பெருமித உணர்வு உண்டா? குதிரைக்கு தான் ‘குதிரையை விட குதிரை’ என்ற எண்ணம் இருந்ததா? கழுதையின் இடத்தில் இப்போது குதிரை தன் இயல்பான வேகத்தால், தன் பளபளப்பான சருமத்தால், தன் பேரிலான வசைகளைச் சிறிய காதுகளில் வாங்க ஆரம்பித்து விட்டிருக்கிறது அல்லவா?
அழகு அநீதியாக குதிரையிடம் கொடுக்கப்பட்டதாக கல்பற்றாவின் மனம் உணர்ந்திருக்கலாம். மேலுள்ள கவிதை அதை குதிரையிடமிருந்து பிடுங்கி கழுதைக்கு அளிக்க அவசரப்படுகிறது. ஆனால் கழுதையிலிருந்து தான் இறக்கிய மூட்டைகளை தவறுதலாக குதிரையின் மேல் ஏற்றிவிடுகிறது.
இது உண்மையில் நம் பிரச்சனை. அழுக்குகளை மூட்டையாக கட்டும் வழக்கம் காடுகளில் இருப்பது போல தெரியவில்லை. காடுகளில் வறியவர்களின் அழுக்கு துணிகள் இல்லை. அங்கே தன்னை விட இருமடங்கு எடையைச் சுமப்பவர் இல்லை. ஆனால் காடுகளை நீங்கி வந்த நாம் கலைகளையும் கூட மூட்டை மூட்டையாக கொண்டு வந்திருக்கிறோம்.
கழுதை மேலிருக்கும் கிறிஸ்து அளவுக்கு கிறிஸ்து ஆக முடியாத ஒரு ஞானவானை இக்கவிதை கண்டிக்கிறது. மலையில் பிரசங்கித்தவனை கழுதை மேலிருந்தவனே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தான். சொற்களை கேட்கவோ புரிந்துகொள்ளவோ வக்கற்றவர்களும் அவன் மேல் நம்பிக்கையுறும்படி செய்தான்.
ஆனால் கழுதை மேல் அமர்ந்த கிறிஸ்துவை தன் கால்களால் நடந்த காந்தி சந்தேகப்பட்டார். கழுதை இல்லாமலேயே தங்கள் ஊருக்கு வந்த மீட்பனை மக்களுக்கு அடையாளம் தெரிந்தது. நடக்கத் தேவையான பலத்தை அளிக்கும் பாலுக்காக ஒரு ஆட்டை உடன் வைத்துக்கொண்டவர் தன்னை மீட்பன் என நம்ப வேண்டாம் என்று மன்றாடினார். வறியவர்களின் மீட்பனுக்கு குதிரையோ கழுதையோ வேண்டாம் என அவர் நம்பினார். மீட்பன் மீது மேன்மேலும் சந்தேகம் கொண்டார்.
கழுதையானாலும் அமர்ந்தவனுக்கு அது பீடமே. பீடத்தில் அமர்ந்தவன் நடப்பதை குறைத்துக்கொள்கிறான். நடக்காதவன் தான் போக முடியாத தூர தேசங்களிலெல்லாம் தன் ஆட்சியை செலுத்த விழைகிறான். அங்கெல்லாம் தன் வாளை துணியில் பொதிந்து அனுப்புகிறான்.
சென்று சேர வேண்டிய தூரம்
குறைந்து கொண்டே வருவது
கழுதைக்குத் தெரியும்.அவசரமாக எங்கே போகிறீர்கள் என்று
அதன் துயரம் நிறைந்த கண்கள் வருத்தப்படுகின்றன.அதிகப்படியான வசைகளை கேட்டதால்
பெரியதாக ஆன காதுகள்;
சகித்து சகித்து கோபம் துளியும் இல்லாத முகம்.தன் எடையைவிட இருமடங்கு அதிக எடையைச் சுமப்பவர்களுக்கு
எந்த மதிப்பும் இருப்பதில்லை.மலைப் பிரசங்கம் செய்யும் கிறிஸ்து
கழுதைமேல் இருக்கும் கிறிஸ்துவைவிட
கிறிஸ்து அல்ல.(“மேம்படுத்தப்பட்ட கவிதை – 2024”, “கழுதையும் குதிரையும்” கட்டுரையில்)
நிதானம் கொண்ட விவேகியின் மேல் ஒரு கவிஞன் ஏறி அமர ஆசைப்பட்டதில் தான் என்ன தவறு? இந்த கவிதையில் அந்த நிதானம் கொண்ட, கழுதை மேலிருக்கும் கிறிஸ்து, ஒவ்வொரு அடியாக மலைப் பிரசங்கம் செய்யும் கிறிஸ்துவிடம் போகிறார். இந்த முறை ஒவ்வொரு அடியும் முக்கியம் என கவிதைக்கு தெரிந்திருக்கிறது.
இந்த பயணத்தில் கவிதைக்கு அழகு பற்றி எந்த கருத்தும் இல்லை. ஒரு குதிரையின் நட்பு கிடைத்திருந்தால் காரியம் இன்னும் சீக்கிரம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் கூட இருந்திருக்கலாம்.

மலைப் பிரசங்கத்தை ஆற்றியதனால் அல்ல; குதிரையை விடுத்து கழுதையை தன் வாகனமாக தேர்ந்து கொண்டபோதுதான் அவர் அவர்களின் கிறிஸ்து ஆனார். திக்கற்ற வறியவர்களின் வாகனமானார். அவர் மீது நம் அழுக்கு மூட்டைகளை ஏற்றி நீண்ட தூரம் நடக்கடித்தோம். கூட்டமாக பின்னால் சென்று பரிகசித்து மகிழ்ந்தோம்.
அழுக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இத்தனை தூரம் கழுதையில் வந்தோமே தவிர நம்மால் கழுதையிடம் வர முடியவில்லை. நாம் வந்த வழி நெடுக நம் முதுகிலும் யாரேனும் ஏறி வந்திருக்க வேண்டும் என்று தான் நம்ப விரும்புகிறேன். இல்லையென்றால் கிறிஸ்து ஏறி வந்த கழுதையிடம் முகம் கொடுத்து பேச எனக்கு மட்டும் என்ன தார்மீகம் உள்ளது?
கிறிஸ்து ஏறி வந்த கழுதையும் தன்னை விட இருமடங்கு எடையை சுமந்து வந்திருக்கிறது. வரலாற்றில் பெரிதாகிக் கொண்டே வரும் கிறிஸ்துவின் எடையை யார் தான் சுமப்பது? அவரவர் எடையை அவரவர் சுமக்கும் காலம் இது.
கழுதையிடம் வர நமக்கு வழி சொல்லும் கிறிஸ்து மலையிலிருந்து இறங்கி வரலாம். ஆனால் அந்த கிறிஸ்து கழுதையாக வந்தாலும் நாம் கண்டுகொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை குதிரையாக வந்தால்?



