வடித்த சிறுசெம்பு மூக்குத்தி




1

என்னை தூக்கி எறிந்துவிட்டு
நீ
தனியே இறங்கிச் செல்கிறாய்

இந்த விரிந்த பாலையில்
நம் பாதங்களால் நடந்து
நாமொரு வீட்டை அமைக்க வேண்டாமா ?

நம் கால் நடைகளை
பத்திரமாக வீடு சேர்க்க வேண்டாமா ?

வீட்டில் அடைந்து
வெளியில் சுற்றி திரிய வேண்டாமா ?

நம்மிரு
தனித்த ஆடுகளுக்கும்
நாமே மேய்ப்பனில்லையா ?

என் மணவாட்டியே
உன் மூக்கு தண்டின்
சிறு துவாரம்
அணிந்திருக்கும் மரப்பிசிறு நான்

வடித்த
சிறு செம்பு மூக்குத்தியாக
நானே வருவேன்
காத்திரு

2

கால் நடைகளை மேய்த்தபடி
பாலையில் அலைந்து திரிபவளே

வெயில் காய்த்த உன் சருமம்
திட்டுத்திட்டாய் நீர்தேங்கிய தடாகம்

காயக் காயக்
நீர் பெருகும் நின் தடாகத்தில்
நான் வாழ்கிறேன்

வற்றி விடாதே
நான் வந்து விடுகிறேன்
3

மந்தையை நீங்கி
பாலையில்
நான் காத்து வைத்திருந்த
ஒற்றை மரம் நீ

உன்னிரு காம்புகளில்
தேம்புகிறது
எட்டாத உயரத்தின் என் பச்சை

4

நீரூற்றின் முகம் அறியாததால்
நான் மந்தைகளை மேட்டிற்கு ஓட்டி சென்றேன்

அப்பங்களை முகம் காணாமல்
நான் அவற்றை தீயில் வாட்டினேன்

முகம் காண தெரியாததால்
நான் திராட்சைத் தோட்டங்களை
நரிகளுக்கு காவற் காத்தேன்

என் ப்ரியமே
அடுத்த பண்டிகை கூடுகையிலாவது
நாம்
முகம் பார்த்து கொள்வோமா?

5

நம் கால் நடைகள்
சேர்ந்து மேயும் மேட்டில்
பாலை மணலன்றி
யாருமில்லை