வரப்போகும் தேர் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்ட கதையின் கிழக்குபுற கோபுரம் வழியாக நுழைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த மக்களில் பெரும்பாலானோர் சாமான்யரல்லர். ஆகவே அங்கு ஒரே கூட்டமாக இருந்தது என எழுதுவது உரைநடைக்கு கேடு விளைவிப்பதாகும். இருந்தும் நான் அங்கு கண்ட பிரத்யோகிய ஒரு சம்பாஷணையை உங்கள் முன் வைத்தாக வேண்டும் எனும் ஆவலில் இதை எழுதுகிறேன். வாருங்கள். உள்ளே சென்று காண்போம்.
சார் நீங்க போலீசா ?
அய்யோ எப்டி தெரியும் ?
இல்ல. இந்த பிரகாரத்துல எல்லாரும் வேகமா நடக்கறப்போ நீங்க மட்டும் தான் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா நின்னு பாக்குறீங்க. தூரத்திலேருந்து பாத்த உடனே தெரிஞ்சுருச்சு . இவரு நம்ம ஆளுனு.
ஓ.. நீங்களும் மஃப்டி ல தான் வந்திருக்கீங்களா?
அய்யய்ய … நம்ம டிபார்ட்மெண்ட் போஸ்டல்ங்க. லெட்டர்ஸ்லாம் நிறைய எழுதுவேன். நீங்க non fiction லாம் படிக்கிறது இல்லையோ?
இல்லை சார். எனக்கு நிகர் வாழ்க்கை வேணும்னு தான் இங்க வாறதே. கஷ்டப்பட்டு வந்து கதைக்குள்ள காண்டம்பெரி லைஃப்யே படிச்சா நம்ம வீட்டுக்கே மஃப்டில வந்த மாறி இருக்கு.
சார் பேரு என்ன? தப்பா நினச்சுக்காதீங்க. நா பேர மாத்தி தான் சொல்லனும் இப்ப மஃப்டில இருக்கேன் ல .
நான் தொடர்ந்து லெட்டர்ஸ்ல பேர போட வேண்டியிருக்கு. அதானே என்னோட அடையாளம். அதனால பேர மாத்த முடியாது பாத்துகுங்க. எம் பேரு கேளாண்மை பொன்னுசாமி.
எதோ டைட்டர் பேரு மாறி இருக்கே சார்?
நீங்க நல்ல வாசகர்னு நினைக்கிறேன். இப்போ வெளிவர எல்லா literary போஸ்டர்ஸயும் கூர்ந்து படிக்கிறீங்கனு தெரியுது. அப்படியான வாசர்களால தான் ஆழ் மனசு வழியாவே ஒரு ரைட்டர சரியா அடையாளம் காண முடியற இடத்துக்கு வர முடியும்.
பிரில்லியண்ட் சார் நீங்க. கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்டீங்களே. இப்ப மஃப்டில இருக்க என் பேரே ‘வாசகர்’ தான். அது கதை நடக்குற ஏரியாவ பொருத்து நானே வச்சுக்குவேன். விமர்சகர் ங்குற என்னோட official நேம்லையே இந்த ஏரியாவுக்கு நாலஞ்சு வாட்டி வந்துருக்கேன். இதுவரை யாரும் கண்டு பிடிச்சதில்ல.
இமேஜ் எதுவும் எடுத்துகலயா சார்? உங்க ரிப்போர்ட்டிங் ஸ்டேஷன்ல காமிக்கறதுக்கு?
அது போயட்ரி பக்கம் போனா தான் சார். கதைனா முரண்பாடான விசயங்கள பாத்தா மட்டும் எடுத்து வச்சுக்குவேன். நானும் நாவலுக்கு மாத்தி விட சொல்லி ஒரு வருஷமா கேக்றேன். Mutual ah இருந்தா பாருங்க னு எங்க இன்ஸ்பெக்டர் சொல்றாரு.
நாவலுக்குள்ள போனவன் ஏவனுமே இங்க வர விருப்பப் படுறதில்லை சார். இங்க இட வசதி கம்மி. நாள் கணக்கா ஒரே இடத்துல சுத்தனும். ஏதாவது ரெண்டு சின்ன டீட்டெய்ல் எடுக்கறதுக்குள்ள நம்ம எளவு விழுந்துரும் பாத்துக்குங்க . அப்புறம் நாவல்னா எப்படியும் மொத்த வாழ்க்கைக்கும் உண்டான ஒரு தரிசனம் கிடைச்சிரும்னு சொல்றாங்க.
ஓ.. நமக்கு அந்த பிரச்சினை எதுவும் இல்லை. வானிலை அறிக்கைய படிச்சிட்டு அதைய அப்படியே திருப்பி எழுதி அனுப்புனா போதும்.
கேட்டிருக்கேன் சார். இந்த நியூஸ் ல கடைசியா 2 நிமிஷம் வருமே ?
அதில்ல சார். இதெலாம் இப்போ புது வகை இழக்கிய ஜானர். காலையிலும் மாலையிலும் நடை போகும் போது மலைய பாக்கறது. மழை பேஞ்ச அடுத்த நாள் போய் போட்டோ புடிச்சு போடறது. செடி பூ வெடுக்கிறது. காய் வைக்கிறது எல்லாத்த பத்தியும் நைட்டோட நைட்டா எழுதறது. இப்ப நம்ம தின்னவேலி ஜில்லாவுல வாழைக்கு தண்ணி விட்றதுக்கே அவனவன் காத்தால இத படிச்சுகிட்டு தான் போறான். நம்ம பிரெண்ட் பெர்ரோஸ்னு ஒருத்தன் கெல்ஃபுல கெடந்தான். இந்த ஜானரோட தீவிர வாசகனாயி இங்க வந்து செட்டில் ஆகி இப்ப நாலு ஏக்கர்ல ரப்பர் போட்டுருக்கான் சார். அரபுக்கு ஏத்துமதி பண்ணா நல்ல பைசா. கேட்டா translation works ங்குறான்.
நம்ம மண்ணுல இன்னும் ‘காடு’ மண்டி கிடக்கு சார். அத திருத்தி ஏதாவது பண்ணனும். நாம நிக்கிற இந்த கதைய எழுத இவருக்கு எது சார் இன்பிரேஷன் .. எங்கேருந்து இவருக்கு இத்தன டீட்டெய்ல்ஸ் கிடைச்சுது… அப்றம் யாரையோ தழுவி தான் இவரு இதெல்லாம் எழுதறார்னு சொல்றாங்களே. அத பத்தி உங்க அபிப்பிராயம் என்ன?
பாத்தீங்களா.. விசாரண பண்றீங்க.. நீங்க இந்திய தத்துவம் தெரியாம இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. தத்துவ விசாரணை பண்ணா தான் சார் இதெல்லாம் தெரியும். மஃப்டி ல வேற இருக்கீங்க. நீங்க தான் உங்க உடம்புக்குள்ள இருக்கீங்களானு எப்படி தெரியும். அதுக்கு யோகம் ஹெல்ப் பண்ணும். நான் லாம் ‘நான்கு வேடங்கள்’ னு ஒரு பேமஸ் தியரிய வச்சுத் தான் என் லைப்ப ரன் பண்றேன். உங்க ஜாப் ல அதுக்கு மேலயும் தேவப்படும்னு தோனுது.
முடிஞ்சா தொடர்ந்து என் கடிதங்கள படிங்க சார். அதுல வர்றது முழுக்க பிக்சன் தான். கடித இளக்கியம் வெஸ்ட்ல பெரிய ஜானர் சார். இங்க தான் அதோட அரும தெரியல.
அப்ப பாக்கலாம் சார்.. அந்த கடைசி பேராவுல முக்கியமான வரலாற்று தகவல் ஒன்னு இருக்கு. Archeology டீபார்ட்மெண்டலேயிருந்து நம்ம பிரெண்டு ஒருத்தர் கேட்டாரு. அத மட்டும் குறிச்சுக்கிட்டு போறேன் சார். Duty முடியுற நேரமாச்சு.
ஓ கே சார். விழா பக்கலாம் வந்தா வாங்க. நானெல்லாம் வீட்டுலையே இருக்கறது இல்ல. விழால தான் இருப்பேன். இலக்கியம்கிறதே கொண்டாட்டமான ஒரு விசியம் சார்.
கண்டிப்பா வரேன் சார். ட்ரான்ஸ்பர் மட்டும் கெடைக்கட்டும். அடுத்த விழாவுல யுனிபார்ம் ஓடயே வர்றேன்.
மஃப்டி யில் வந்த போலீஸ்காரர் தன் ரைட்டர் (ஆம் தமிழில் எழுத்தாளர் தான்) உடையில் கதையின் மேற்கு கோபுர வாயில் வழியாக வெளியேறியதை இந்த முறையும் யாரும் பார்க்கவில்லை.






