34
விடைபெறல் நாடகம்
ஆரம்ப காட்சி:
கதை : நீங்க எப்ப நின்னோரா திரும்பறதா உத்தேசம்?
அவன் : நா இந்த அத்தியாயங்கள்ல கண்டு எடுத்ததை இங்க சொல்லி முடிசிட்டு கிளம்பலாம்னு இருக்கேன்.
அவள் : டேய் நிறுத்து.. நிறுத்து… அதெல்லாம் இந்த கதையில இல்ல. இத்தன மகிமையுடைய மகா மங்கலையான நா கூட யாருக்கும் எதுவும் சொல்லனும்னு நெனைக்கலியே?
கதை (தன் மனதிற்குள்) : மாங்கலை னா கல்யாணமானவனு அர்த்தம். இதுவே தெரியாத நீ சொல்லி இவங்க கேட்டா இந்த பூமி தாங்குமா?
அவள் : நாம ஒன்னு சேந்து தேட தானே இங்க வந்தோம்? இப்ப என்ன திடீர்னு உனக்கு தெரிஞ்சுருச்சுனு சொல்ற? அப்டினாலும் உனக்கு தெரிஞ்சத போல நானும் இந்த அத்தியாயமெல்லாம் போய் பாத்தா தானே ஏதாவது கண்டு புடிக்க முடியும்?
அவன் : நீ இந்த அத்தியாயத்திலயே இருந்தனா, இந்த மொத்த புத்தகமும் உனக்கு இங்கயே சொல்லப்படும். உனக்கு அலச்சலே இல்லாம எல்லாமே ஒரு இடத்துலயே கிடைக்குமே.
அவள் : எதுக்கு எல்லாரையும் இந்த ஒரு அத்தியாயத்துலயே அடைக்கனும்? நீ அப்படி சொல்ல அரம்பிச்சனா இதுவர நீ இங்க எழுதின மொத்தமும் பொய்யினு ஆகும். படிக்கிறவங்களுக்கு இந்த புத்தகம் மேல இருக்கற நம்பிக்கை போகும். அவங்களே போய் இந்த அத்தியாயங்கள பாக்கட்டுமே? அவங்களுக்கு வேண்டியத அவங்க எடுத்துகிடட்டும்.
கதை : இல்லயில்ல. அவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு. நீங்க என் வழியாவது நல்லதா ரெண்டு மூனு விசியங்கள அவங்களுக்கு கத்துக் கொடுக்கணும். இல்லனா உங்க அறவுணர்வு மேல மக்களுக்கு சந்தேகம் வரும். நீங்க இத்தன தூரம் இந்த புத்தகத்துல சொன்னதெல்லாம் அவங்க வீட்டுப் பொழக்கடைக்கு கூடப் போகாது.
அவள் (தன் மனதிற்குள்) : அறவுணர்வு னா என்னனு இன்னும் அந்த அறத்துக்கே தெளிவா புரிஞ்சிருக்காது. அதுகுள்ள இந்த புத்தகத்துல நாம அத பத்தி பேசனுமா?
கதை : ( நாடக தனமாக தன் கைகளை விரித்து)
நின்னோரா வாசிகளே!
குழந்தை உலகில் கற்குமிடம் பற்றி சிறிதாவது எழுதியாக வேண்டும் இத்தனை தூரம் வந்த நீங்கள்.
சின்ன குட்டி இங்கே பார். நீ அவ்விடம் பற்றி எது வேண்டுமானாலும் இங்கு சொல்லலாம்.
அது பற்றிய உன் எதிர்ப்பை கூட இங்கு பதிவு செய்யலாமே… இவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
அவள் ( மனதிற்குள்) : புரிஞ்சவங்கலாம் போன அத்தியாயத்திலேயே கிளம்பி அணில் குட்டிகள கொஞ்சப் போயிருப்பாங்க. இவங்கலாம் இத ஏதோ மொழிபெயர்ப்புல படிக்கிறாங்கனு நினைக்கிறேன். இன்ன வரையிலும் முகத்தில எந்த சலனமும் இல்லயே.
கதை : நீ நினைக்கறது எனக்கு கேக்கும். அவங்க என்னத் தேடி வந்தவங்க. எனக்காக காத்திருக்காங்க. நான் கைய தூக்கி முடிஞ்சுதுனு சைக சொல்லாம எங்கயும் போக மாட்டாங்க.
கதை : ( இம்முறை வீராவேசமும் பெருமிதமும் கலந்த தொனியில்)
இந்த குறிப்பேட்டில் நீங்கள் பீற்றுவது போல கவித்துவம் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் இந்த குறிப்பேட்டிலிருந்து என்னை மட்டுமே வெளியே எடுத்துச் செல்வார்கள். போன விடமெல்லாம் பெண்களும் ஆண்களும் என்னை குழந்தையென தூக்கி கொஞ்சி மிகிழ்வார்கள். திருஷ்டி பொட்டிடுவார்கள். அதையெல்லாம் பார்த்து கொண்டு நீங்கள் அம்போவென ஓரத்தில் நிற்க வேண்டிவரும். வரலாறு முழுக்க இந்த கதை தான் நடத்திருக்கிறது.
கேள்விகளை தெளிவிப்பது என்னைப் போல அழகிய பயனுள்ள ஒரு கதை. அது உள்ளதா உங்களிடம்?
என்னை ஆரம்பத்திலேயே சேர்த்திருந்தால் மிக எளிதாக இக்குறிப்பேட்டை அனைவரும் படித்துத் தெளியும் வண்ணம் நான் முடித்திருப்பேன்.
அவள் : கதை தெய்வமே! உன் நாடகத்த நிறுத்து. நானே நாளைக்கு உங்களயெல்லாம் நீங்களே தேடிக் கண்டு புடிச்சாக வேண்டிய அந்த இடத்துக்கு கூட்டி போறேன். போதுமா?
(திரை முடியது)
35
என் அன்போரே!
அவ்விடமோ என்னொடு என்னருகில் என்றுமிருப்பது. அவ்விடத்தில் விளையாட எனக்கொரு பெரும் வெளியுண்டு. நீங்கள் என்னை மட்டும் எனக்களித்தால் போதும் அங்கே.
ஆயிரமாயிரம் ஆண்டு தொல் கொண்ட சொற்களஞ்சியம் அங்குண்டு. பல் ஆயிரம் ஆண்டு சேர்த்த சொற்களின் மெய்மை உசாவி அறிந்தவிடம் அதிலுண்டு. பல ஆயிரம் படிவர் நடந்து சென்ற மண் தடம் அதிலுண்டு.
நானோ இவ்விடத்தில் பிறக்கும் முன்பே அவ்விடத்தில் சேர்ந்தாயிற்று. அவ்விடமோ நான். என்னுள் எனக்காக சமைத்து வைக்கப்பட்டிருக்கும் இன்னுணவு அவ்விடம்.
எது எனக்குரிய இடமோ அது ஏற்கனவே எனக்கு அருளப்பட்டிருக்கிறது என அறிக என் அன்போரே!







