வலிய மாமரம் நின்ற வீட்டு வாசலில் தன் சைக்கிளை வளையமாக ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தவனிடம் கல்பெட்டா நாராயணன் என்றதும் ‘கொண்டு போகானா?‘ எனக் கேட்டான். அப்படி ஆட்களை நம் கையில் கொண்டு போக வழியுண்டா என திகைத்த நான் இல்லை என்று தலை அசைத்தேன்.

‘அப்போ காணானா?’

ஆம் என மீண்டும் தலை அசைத்ததும் நான் ஏமாந்து போவேன் என்பது தெரிந்திருந்ததனால் ‘அய்யோ அப்போ பட்டில்லா. இவிட இல்லா’ வழி தவறி பிறிதொரு வீட்டில் ஏறி விட்ட தன் அண்டை வீட்டு நண்பனிடம் போல் சொன்னான்.

’அம்மையை விளிக்கானா?’

தன்னைக் காட்டிலும் வயது முதிர்ந்த ஒருவனை முழுதாக கைப்பற்றி விட்ட குதூகலத்துடன் முற்றத்தின் வாயிலில் ஏறி நின்றான். நான் யோசிக்கவும் செய்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தன் சைக்கிளில் வாசலுக்கு வெளியே விரைந்தான். அவனை பின்தொடர்ந்த நான் அடுத்த வீட்டில் பேசி கொண்டிருந்த அவன் அம்மம்மையை பார்த்து கல்பெட்டா நாராயணன் கோட்டயம் சென்று விட்டார் எனவும், நாளை திரும்ப வாய்ப்புண்டு எனவும் அறிந்து கொண்டேன்.

கதா பாத்திரங்கள் உடனே சந்தித்து கொள்ள முடியாமலாகும் போதே ஒரு கதை பிறரிடம் சென்று சேர்வதற்கான தவிப்பு கொள்ள ஆரம்பிக்கிறது. நான் சொல்ல ஒரு கதை உண்டாகி கொண்டிருப்பதை மகிழ்ந்து கொண்டே வந்த வழி நடந்து தங்கும் அறை தேடுவதற்காக மீண்டும் கோயிலாண்டிக்கு பஸ் ஏறினேன்.

தமிழ் நாட்டிலிருந்து ஈரோடு ரயில் நிலையத்தில் புறப்படும் போது எனக்கு கோயிலாண்டி என்ற பெயர் மட்டுமே தெரிந்திருந்தது. ஒரு வேளை அவர் வீட்டை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ‘உன் வீட்டை அல்ல உன் வீட்டுக்கு போகும் பாதையை காணவே இந்த பூமிக்கு வந்தேன்‘ என்ற இசையின் வரியை கொண்டு சமாதானமாக திரும்ப நான் தயாராகவே இருந்தேன். கோயில் கண்டி என்பது மருவி கோயிலாண்டி ஆனதாக விக்கி செய்தி. அதன் பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர். சுருங்க சொன்னால் 11 சதுர மைல் தான். நாளைக்கு ஒரு சதுர கிலோமீட்டர் நடந்து தேடினால் கூட ஒரு மாதத்தில் கண்டுபிடித்து விடலாமே என ரயிலில் வரும்போது கற்பனை செய்து கொண்டேன். தான் போய் சேர்ந்தாக வேண்டிய புள்ளியை அறியாதவன், அதை ஊதி வட்டமாக பெருக்குகிறான். அதற்குள் சுற்றி அலைகிறான். நான் கோயிலாண்டி எனும் 29 சதுர கிலோமீட்டர் வட்டத்தை என் புள்ளியாக நினைத்து கொண்டேன். சுற்றி அலைவதும் சேர்ந்து விட்டதும் ஒன்றாகும் புள்ளி.

ரயில் விட்டு இறங்கியதும் ஒரு அசட்டு நம்பிக்கையில் கூகுள் வழியாக The master pusthaka bhavan என்ற புத்தக கடைக்கு சென்றேன். கோயிலாண்டியின் புத்தக கடையில் தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒருவன் கல்பெட்டா நாராயணனின் முகவரியை கேட்டதும், கடைக்காரர் அவன் எழுத்தாளன் என்பதை சந்தேகமே இல்லாமல் முடிவு செய்தார். தமிழ் மலையாளத்தின் தாய் என்றவர் மிகுந்த தாய்மொழி பற்றுடன் என்னை கடைக்குள் அமர வைத்தார். நான் தமிழில் கவிதைகள் எழுதியதற்காக, அவர் கடைக்கு வருகை தந்ததற்காக முதல் முறை ஒருவர் என்னை புகைப்படம் எடுக்கிறார். விசித்திரம் என்னவென்றால் அவர் தமிழ் மொழியில் வாசிக்கவோ பேசவோ கூடியவர் அல்ல. கல்பற்றாவின் வீட்டு முகவரியை ஒரு சீட்டில் எழுதி எனக்கிருந்த 29 சதுர கிலோமீட்டர் நிலத்தை வெறுமொரு ஐந்து செண்டாக குறைத்தார். ஐந்து செண்ட்டில் ஒரு புள்ளி.

வடகரா போகும் பேருந்தில் ஏற வேண்டும். கொல்லத்தில் (இது கோயிலாண்டியின் அருகே உள்ள வேறொரு சிறிய கொல்லம்) இறங்கி கல்பெட்டா நாராயணன் மாஸ்டர் வீடு என்று சொன்னால் போதும். ஆட்டோகாரர்கள் நேராக கொண்டு போய் அவர் வீட்டு வாயிலில் விடுவர். தமிழ்நாட்டில் நீங்கள் என் வீட்டிற்குள்ளேயே வந்து விசாரித்தாலும் எழுத்தாளனான என்னை கண்டு பிடிக்க முடியாது என்று சொல்ல நினைத்து நாக்கிலேயே நிறுத்தி கொண்டேன். ஊருக்கு போய் தன் கடையில் வைக்க என் புத்தகங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். கடையில் இருந்து வெளியே வந்தால் கோயிலாண்டி பேருந்து நிலையம்.

பேருந்தில் நான் போகும் ஸ்தலத்தையும் காரணத்தையும் கேட்டறிந்ததும் எனக்கடுத்திருந்தவர் ‘புள்ளி வீட்டிலுண்டோனு அறியில்லா’ என்றார். இப்போது நான் காண வேண்டிய புள்ளி ‘நின்றிருக்குமொரு ஐந்தரை அடி நிலம்’மட்டுமே என ஆகியிருந்தது. ஒருவேளை கல்பெட்டா அங்கிருந்தால் அக்கணமே எனக்கு கோயிலாண்டியில் ஒரு பொட்டு நிலம் கூட இல்லாமல் ஆகிவிடலாம்.

அடுத்த நாள் மீண்டும் அவ்வீட்டிற்கு சென்றபோது ‘புள்ளி வீட்டில் உண்டாயிருந்தது’. பலரும் நின்று விட்ட புள்ளியில் நிற்காது தன் வாழ்நாள் முழுக்க உலாத்தியதன் தடயத்தை காட்டியபடி என்னை கல்பெட்டா நாராயணன் தன் வீட்டு முற்றத்தில் வந்து வரவேற்றார்.

கணினி திரையின் சுட்டி போல எழுத்துகள் ஒவ்வொன்றின் மேலும் தன் வாழ்வை செலுத்தி, அவற்றை வெட்டியும் ஒட்டியும் அழகை உண்டாக்கி வந்திருக்கும் இந்த புள்ளி மிக கூர்மையானது என்பது அவர் பேச ஆரம்பித்த முதல் வரியிலேயே ஊர்ஜிதமாயிற்று . What is the morality of a poet to be a poet? ஒருவன் கவிஞனாக இருப்பதற்கான நியாயம் என்ன? என்ற கேள்வியே நான் அவரிடம் கேட்கவே நான் கிளம்பி வந்திருந்தேன். அக் கேள்விக்கு ‘Poet is a linguistic animal. The duty of the poet is only with the language; contributing in enhancing; empowering; enriching his medium which is language’ என்பதே அவர் பதில். நான் ஆரம்பிக்க வேண்டிய புள்ளி என்று தெரிந்தது.

என் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து விட்ட பிறகு அவர் படிப்பறைக்கு அழைத்து சென்றவர் என் குடும்பம் மற்றும் எழுத்துக்கான சாதகமான சூழல் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டார். மதிய உணவை அவர் வீட்டிலேயே உண்டு அவரை நிலம் பட விழுந்து வணங்கி நான் முற்றத்திலிருந்து இறங்கும் போது அவர் மருமகள் போய் கொள்ள வழி அறியுமா என கேட்கவும் ‘அவனுக்கிப்பம் போகுந்ந வழி அறியும்’ என்றார் கல்பெட்டா. நான் வெளியேற கேட்டை அடையும் முன்பு அங்கு நின்ற மாமரத்திலிருந்து ஒரு கனி என் முன்னே விழுந்தது. நான் திரும்பி இது நல்ல சகுணமா என்று கல்பெட்டாவிடம் கேட்டேன். அக்கனியை எடுத்து நோக்கி ‘It’s hurt’ என்றதும் அவர் ‘அதை எடுத்து கொண்டு போ. அரிந்து நோக்கி கனிந்திருந்தால் மாத்ரம் உண்டால் மதி’ என்றார்.

அவர் ஏற்கனவே எனக்கு அளித்திருந்த மாங்காய் பையோடு நான் அந்த மாமரத்தின் (அது என்றைக்கும் அந்த வீட்டில் உண்டாகுந்ந புள்ளி அல்லே) கனியை கையிலெடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இன்று எனக்காக இறங்கி வந்த இக்கனியின் மேல்தான் எத்தனை புள்ளிகள். ஏதோவொரு புள்ளியில் எல்லாவற்றுக்கும் தெய்வத்தின் அருள் கூர்கிறது.